அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

“விதுர விக்ரமநாயக்கவை பதவி விலக்க வேண்டும்..” – ஜனாதிபதியிடம் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று (14) இடம் பெற்றது.

கடந்த சில தினங்களாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மானதுங்க ராஜினாமா செய்தமை தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஜனாதிபதி எங்களோடு நடத்திய பேச்சு வார்த்தையிலும் கூட, அமைச்சரவை தீர்மானங்களை நிறைவேற்றுவதில் விருப்பம் இல்லாதவர் போல பேராசிரியர் மானதுங்க காட்டிக்கொண்டார்.

அது அமைச்சரவைக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனை! எங்களுக்குள்ள பிரச்சனை, வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் நிலங்கள் அபகரிப்பு பற்றியது.

அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, வடக்கு, கிழக்குக்கு பாரிய இராணுவப் பட்டாளங்களோடு சென்று வருகிறார்.

அவருடைய பணிப்புரையின் கீழ் தான் சட்ட விரோத காணி அபகரிப்புகள் இடம் பெற்று வருகின்றன. அதனால் ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்பது விதுர விக்ரமநாயக்கவை பதவி விலக்க வேண்டும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் திணைக்களத்தினால் நிறுத்தப்பட்ட கல்லுமலை பிள்ளையார் ஆலய கட்டுமானப்பணியை தொடர இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அனுமதி !

தொல்பொருள் திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வவுனியா, சமனங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்தினுடைய கட்டுமான பணிகளுக்கு தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்களினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, சமனங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்திற்கு நேற்று மாலை (03.03) மாலை அமைச்சர் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்திருந்தனர்.

வவுனியா, சமனங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயம் கடந்த 1952 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களினால் வழிபாடு செய்யப்பட்டு வந்துள்ளது. குறித்த கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் தொல்பொருள் சின்னங்களான பண்டைய கற்தூண்கள், பாழடைந்த செங்கல் படிவங்கள், கட்டட இடிபாடுகள் என்பன காணப்படுகின்றன.

அத்துடன், ஆலயத்தின் புனர்நிர்மாண கட்டுமான பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர் குறித்த ஆலயம் அமைந்திருந்த பகுதி தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பகுதி என தெரிவித்து கட்டுமான பணிகளுக்கு தடையுத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் ஆலய நிர்வாகனத்தினர் மற்றும் அப் பகுதி மக்கள் அரச அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்தியிருந்ததுடன், கடந்த காலங்களில் கவனயீர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன் அவர்களின் கோரிக்கைக்கு அமைய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு ஆலய நிர்வாகத்தினர், மக்களின் கோரிக்கையினை கேட்டறிந்தனர்.

ஆலயத்தின் கட்டுமான பணிக்காக மாதிரி வரைபடத்தினை தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கி தொல்பொருட்களுக்கு சேதத்தினை ஏற்படுத்தாத வகையில், புனர்நிர்மாண வேலைகளை முன்னெடுத்து ஆலய வழிபாடுகளை மேற்கொள்ள அமைச்சரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளோம்” – எம்.ஏ.சுமந்திரன்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றினையும் தொடரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்கள், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர்  இன்று(30.01.2021) வவுனியாவிலுள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், வழக்குத் தொடர்வதற்காக சில ஆவணங்களையும் கையளித்திருந்தனர் குறித்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“குருந்தூர் மலையில் இருந்த சூலம் உடைக்கப்பட்ட விடயம் சம்பந்தமாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சாள்ஸ் ஆகியோர் நேரிலே சென்று பார்வையிட்ட பின்பு ரவிகரன் முல்லைத்தீவு போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றார். அதனைத் தொடர்ந்து 29.01.2021 நேற்றைய தினம் காவற்துறையினரோடு குருந்தூர்மலைக்குப்போய் உடைக்கப்பட்ட தடையங்கள் எல்லாவற்றையும் ரவிகரன் காண்பித்திருந்தார்.

ஆகையினாலே அங்கே இருந்தது உடைக்கப்பட்டதென்பது ஊர்ஜிதமாக்கப்பட்டிருக்கின்றது.இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலே, அல்லது மேன்முறையிட்டு நீதிமன்றத்திலே வழக்கொன்றை நாங்கள் தாக்கல் செய்யவுள்ளோம். ஏற்கனவே முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினாலே கொடுக்கப்பட்ட உத்தரவினை மீறி, அந்த உத்தரவிற்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக, அந்த நீதிமன்ற உத்தரவினை மீறியதற்காக, நீதிமன்றினை அவமதித்த வழக்கொன்றும் மேன்முறையிட்டு நீதிமன்றிலே நாங்கள் உடனடியாகத் தாக்கல் செய்வோம்.அது இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கும் அவரோடு சேர்ந்தவர்களுக்கும் எதிராக அந்த வழக்குத் தாக்கல் செய்யப்படும் – என்றார்

“வடக்கு மாகாணத்தில் முறையற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மூலம் தமிழ் மக்களைக் கிளர்ந்தெழ வைக்காதீர்கள்” – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் மாவை சேனாதிராஜா தெரிவிப்பு !

“வடக்கு மாகாணத்தில் முறையற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மூலம் தமிழ் மக்களைக் கிளர்ந்தெழ வைக்காதீர்கள்” என தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கேட்டுக்கொண்டார்.

இராஜாங்க அமைச்சருக்கும் மாவை சோ.சேனாதிராஜாவுக்கும் இடையில் நேற்று தொலைபேசி ஊடாக நீண்ட நேரம் பேச்சு நடைபெற்றதாக அறிய முடிகிறது.

இதன்போது, யாழ். நிலாவரைப் பகுதியில் திடீரென தொல்லியல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்டவர்கள் வருகை தந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை நடத்தியமை தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு மாவை கொண்டு வந்தார்.

அத்துடன், இந்தச் செயற்பாடானது தமிழ் மக்கள் மத்தியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துகின்றது எனவும், பதற்றமான சூழல்களை உருவாக்குகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவு – குருந்தூர் மலை விடயம் தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சருடன் மாவை பேசினார்.

மேலும், யாழ். பல்கலைக்கழகத்தில் தொல்லியல்துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இருக்கும்போது பெரும்பான்மை சமூகத்தினரை மட்டும் பயன்படுத்தி நிலங்களை ஆக்கிரமிக்கும் வகையிலான செயற்பாடுகளை உடன் நிறுத்தும்படியும் அவர் கோரினார்.

இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, எதிர்வரும் காலத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகளின்போது யாழ்.பல்கலைக்கழகத் தரப்பினரையும் உள்ளீர்ப்போம் என்றும், இனம், மதத்தின் பெயரால் தொல்லியல்துறை செயற்படவில்லை என்றும் உறுதியளித்தார்.