அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

ஆதிவாசிகளின் பிரச்சினைகளை தீர்க்க புதிய சட்டமூலம் – அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

நாட்டின் ஏனைய சமூகத்தினர் அனுபவிக்கும் அனைத்து உரிமைகள் மற்றும் சலுகைகளை ஆதிவாசிகளும் பெற்றுக் கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (19) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதிவாசிகளின் உரிமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் அனைத்து அரசாங்கங்களும் ஆதிவாசிகளினது பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறிவிட்டது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.  அந்த வகையில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை அவர்களை ஆதிவாசிகள் என்று கூறுவதிலும் பிரச்சினை உள்ளது. அவர்களும் இந்த நாட்டின் ஒரு சமூகம், எமது சகோதரர்கள் மூதாதையர்கள். அவர்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

அதேபோன்று நாட்டில் பல அடிப்படை உரிமை இல்லாது போயுள்ள நிலையில்,
அவர்கள் அனைவரதும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஆதிவாசிகளின் சமூக பொருளாதார அரசியல் தேவைகளை பாதுகாப்பதற்கான சட்டம் மூலம் கொண்டுவரப்படும். அல்லது தற்போதுள்ள சட்டமூலத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது எமது எதிர்பார்ப்பு. அதே போன்று எமது நாட்டில் பல்வேறு சிறு குழுக்கள் காணப்படுகின்றன அந்த குழுக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு எமது அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.

பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி குருந்தூர் மலையை அபகரிக்கப்பார்க்கும் தமிழர் அமைப்புக்கள் – 46 பௌத்த மத அமைப்புக்கள் விசனம் !

“குருந்தூர் மலை விவகாரம் இனம் மற்றும் மதங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் அளவிற்கு பாரதூரமாக செல்வதை தடுக்க பொறுப்பான தரப்பினர் சட்டத்திற்கமைய செயற்பட வேண்டும்.இல்லாவிடின் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.” என  பௌத்த மத அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளடங்களாக 46 அமைப்புக்கள் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

46 அமைப்புக்களை ஒன்றிணைத்த தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்புக்களின் கூட்டமைப்பு இந்த அறிக்கையை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், அரசியல் கட்சிகள் தலைவர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளது.

46 பௌத்த மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளதாவது,

1933ஆம் ஆண்டு  மே மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக சிலைகள் மற்றும் தொல்பொருள் சின்னங்களை கொண்ட குருந்தூர் மலை பகுதியின் 78 ஹேக்கர் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் காணி என அறிவிக்கப்பட்டது.

அத்துடன் 1924ஆம் ஆண்டு நிலப்பரப்பின் விசேட தொல்பொருள் சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. இந்த வரைப்படத்திற்குள் கோயில் மற்றும் தேவாலயத்தின் சிலை சின்னங்கள் விகாரைக்கு ஒதுக்கு புறத்தில் உள் குருந்தூர் குள பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

‘குருந்தக’ என்ற பெயரில் இந்த பௌத்த விகாரை கி.பி 100 – 103 காலப்பகுதியில் பல்லாடநாக என்ற அரசனால் நிர்மானிக்கப்பட்டது. மகாவம்சத்தின் சான்றுப்படி கி.பி 1055-1110 காலத்தில் முதலாவது விஜயபாகு அரசனால் இந்த விகாரை புனரமைக்கப்பட்டது.

ஹென்ரி பாகரின்  1886 ஆண்டின் வருடாந்த அறிக்கையில் இந்த தொல்பொருள் பூமி தொடர்பில் ‘ காலம் காலமாக நேர்ந்த அழிவுகளை காட்டிலும், இந்த பகுதிக்கு குடியமர்வதற்காக வருகை தந்த தமிழர்களினால் இந்த தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குருந்தூர் விகாரை மற்றும் அதனை சூழ்ந்துள்ள பகுதி முக்கியமான தேசிய மரபுரிமையாகும் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் ஒன்பதாவது உறுப்புரை மற்றும் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தில் 1990 தொல்பொருள் மரபுரிமை முகாமைத்துவம் தொடர்பில் சர்வதேச கொள்கைக்கமைய இந்த இடத்தை தேசிய மரபுரிமையாக பாதுகாக்க மற்றும் இந்த பூமியின் அபிவிருத்தி பணிகளை தடையின்றி முன்னெடுத்து செல்வதை உறுதிப்படுத்துவது பொறுப்பான தரப்பினது கடமையாகும்.

தொல்பொருள் திணைக்களத்தின் சட்டப்பூர்வமான திட்டத்திற்கமைய விகாரையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து இப்பகுதியின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கருத்திற் கொண்டு தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை மீறி அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்ட அரசியல் தரப்பினருக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அரச கட்டமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பிரச்சினைகளை தோற்றுவிப்பவர்கள் பொது சட்டத்தை தமது கைகளில் எடுப்பது தவறான எடுத்துக்காட்டாக அமையும். இனவாதம் மற்றும் மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இவர்கள் அடாவடித்தனமாக செயற்படுகிறார்கள்.

இதற்கு மேலதிகமாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நீதிமன்றத்திற்கும், சட்டமா அதிபருக்கும் இந்த விவகாரம் தொடர்பில் தொழில்நுட்ப அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இது பாரியதொரு குற்றமாகும். சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்ட பௌத்த விகாரை உள்ள பூமியில் சட்டவிரோதமான முறையில் கோயிலை நிர்மாணிப்பதற்கு அவதானம் செலுத்தப்படுகிறது.

தேசிய தமிழ் அரசியல் டயஸ்போராக்களுக்கும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும், போராட்டகாரர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட தரப்பினருக்கும் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி சாதகமாக உள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகள் பௌத்த மரபுரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது.

குருந்தூர் மலை பகுதில் சட்டரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்லாவிடின் நீதிமன்றத்தை நாடுவதற்கு தீர்மானித்துள்ளோம். தேசிய மரபுரிமைகளை பாதிப்பிற்குள்ளாக்குபவர்கள் தேசிய மரபுரிமைகளை காட்டிக் கொடுத்தவர்களாக வரலாற்றில் அடையாளப்படுத்தப்படுவார்கள்.” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த பிக்குமாரால் பௌத்த மதத்துக்கும் பாதிப்பு என்கிறார் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க !

குறைந்த வயதில் சிறுவர்களை துறவறம் புகச் செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழு பௌத்த குருமாருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டுவதற்கு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் பொலிஸ் ஊடாக சம்பந்தப்பட்ட பீடங்களின் தலைமை பிக்குமாருக்குத் தெரியப்படுத்துவதற்கும், பொதுவான சட்ட நடவடிக்கைக்கு மேலதிகமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறு முன்மொழிவதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

தலைமை பிக்குமாரின் வழிகாட்டுதலின் கீழ் எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினையை கையாள்வதற்காக தனியான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான அதிகாரங்கள் கொண்ட புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பௌத்த சாசன, சமய மற்றும் கலாசார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெற்ற போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு சில பௌத்த பிக்குமார் காரணமாக ஒட்டுமொத்த பௌத்த மதத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், இவற்றை நிறுத்துவதற்கு அமைச்சு விரைவில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.

முல்லைத்தீவு குருந்தூர் விகாரையை அண்மித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமில்லாத காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

விவசாயம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக அளவீடு செய்யப்பட்ட காணிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை உரிய நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கு வழங்குமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலாயத்தன பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்குத் தேவையான 32 இலட்சம் ரூபா ஒதுக்கீடு இன்மை காரணமாக இதுவரை செயன்முறைப் பரீட்சை நடத்தப்படாமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

ஒதுக்கீடு இன்மை காரணமாக பரீட்சைகள் 6 வருடகாலம் பிற்போடப்பட்டமை தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளியிட்ட அமைச்சர், இதனைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

பௌத்த வழிபாட்டு ஸ்தலங்களுக்கு சூரியப்படல கட்டமைப்பைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

சொத்துக்களைக் கொண்டுள்ள பௌத்த வழிபாட்டுஸ்தலங்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ள மகாநாயக்க தேரர்களிடம் கோரிக்கை விடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பௌத்த துறவிகள் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் ஒழுக்கம் சீர்குலைந்து வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

பொதுவாக பௌத்த பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் துறவிகளில் 45% பேர் இறுதியாண்டில் துறவறத்தை நிறுத்திக்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்காலத்தில் உயர்கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறைந்த வயதில் சிறுவர்களைத் துறவறம் புகச் செய்வது தொடர்பில் நீண்ட நேரம் இங்கு கலந்துரையாடப்பட்டது. பௌத்தத்தை பாதுகாப்பது அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்பதால், இது தொடர்பில் குறிப்பிட்ட வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். இதன்படி அடுத்த கூட்டத்தில் இதுபற்றிக் கலந்துரையாடப்படுவதுடன், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

குழுவின் உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரோ, குணதிலக ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.