அரசியல் கைதிகள்

அரசியல் கைதிகள்

சிறைகளில் இன்னும் 14 அரசியல் கைதிகளே விடுதலை செய்யப்படாமல் உள்ளனர் – வவுனியாவில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ!

கந்தக்காடு முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (17) வவுனியாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

 

வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் செய்த நீதி அமைச்சர், பிரபா மற்றும் கௌதமன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஆலய பரிபாலனசபை மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பு என்பவற்றின் ஒழுங்கமைப்பில் திவாகரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் ஊடகங்க சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

 

“கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அங்கு புனர்வாழ்வு பெறுபவர்கள்,போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மற்றும் யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் போன்றோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

 

இந்த கந்தக்காடு முகாமானது இவ்வாறு மூன்று பிரிவுகளாக இயங்கி வருகின்ற நிலையில், அண்மையில் அங்கு இடம்பெற்ற சம்பவங்களையடுத்து அதன் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை காரணமாக இளம் சமுதாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

இதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக யுக்திய நடவடிக்கை மூலம் போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் மாபியாக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தவிரவும் யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேலும், அரசியல் கைதிகள் விடயத்தில் 5 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் 14 அரசியல் கைதிகளே விடுதலை செய்யப்படாமல் உள்ளனர், அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகளும் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.

 

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேசப்படுகிறது, யாருக்கு ஆதரவு என கட்சி இன்னும் முடிவு எடுக்காத நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும் தமக்குள் பேசுகிறார்கள், இன்னும் யார் வேட்பாளர் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை, கட்சியுடன் கலந்துரையாடியே அது தொடர்பில் முடிவு எடுக்க முடியும்.”என்றார்.

66 வயது தமிழ் அரசியல் கைதி கனகசபை தேவதாசன் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை !

இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் நீண்ட காலமாக புதிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதியுமான 66 வயதுடைய கனகசபை தேவதாசன் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்.

புறக்கோட்டை தொடருந்து நிலையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் போது விடுதலைப்புகளின் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கிய குற்றசாட்டில் கைதாகினர்.

இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் இவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கனகசபை தேவதாசன் தன்னை விடுவிக்குமாறு கோரியும், தனது வழக்கிற்கான ஆதாரங்களை திரட்ட தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரியும் பல உண்ணாவிரத போராட்டங்களையும் நடத்தியிருந்தார்.

அதேவேளை, தனக்காக தானே சில வழக்கு தவணைகளில் வாதாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முனைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 21 அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை !

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முனைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் 21 பேர் நிபந்தனைகளின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வடமாகாணத்திலும் கொழும்பிலும் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் மற்றும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

குறித்த 21 நபர்களும் 2014 ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வவுனியா, கிளிநொச்சி, பூசா ஆகிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் சில மாதங்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டதுடன், அவர்களது உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் நாடளாவிய ரீதியில் பல சாத்வீக போரட்டங்களை மேற்கொண்ட நிலையில், கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த 21 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் 21 பேரையும் எந்த நிபந்தனைகளும் இன்றி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வீதி நாடகம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் இணைந்து குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இணைந்து வீதி நாடகமொன்றினை யாழ். பல்கலைக்கழகத்தினுள் முன்னெடுத்தனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடக வளாகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த வீதி விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், இந்த முறை தைப்பொங்கலிற்கு எமது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்பிய பொழுதும் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.

இதனை மையப்படுத்தியே இவ்வாறு சிறைக்கூண்டு அமைக்கப்பட்டு சிறையிலுள்ள கைதிகளை போல உருவகித்து பொங்கல் பொருட்கள் வீடுகளில் தயார் நிலையில் உள்ள போதும் இம்முறையும் எமது உறவுகள் இன்றி பொங்கலை பொங்கமுடியாத சூழலை வெளிப்படுத்துமுகமாக இதனை நாம் நாடகமாக நிகழ்த்திகாட்டியிருந்தோம்.

மேலும் அரசியல் கைதிகள் விடுதலையின்றி வாழும் சூழலில் இங்கு நடைபெற இருக்கின்ற தேசிய பொங்கல் விழாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரும் பொழுது எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் பிரிதிநிதிகள் குறித்த நிகழ்வை முற்றாக நிராகரிக்கவேண்டும்.

இதே நேரம் எங்களுடை எஞ்சிய சிறைகைதிகளும் விடுதலை செய்யபடவேண்டும் என வலியுறுத்தினார்.

அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் – எம்.ஏ சுமந்திரன்

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொது இணக்கப்பாட்டுக்கு வரும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 14 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டை கூட்டியிருந்தார்.

ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் 08 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை !

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நான்கு கைதிகள், கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என்றும் மேலும் மூன்று பேர் நாளை சிறையிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டாவது கைதி விடுவிக்கப்படுவதற்கு முன் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தங்களின் தண்டனைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தமையினால் மூன்று கைதிகளின் விடுதலை காலதாமதமானது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகள் திரும்பப் பெறப்பட்டவுடன், அவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சட்டமாஅதிபர் மற்றும் நீதி அமைச்சின் பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான ஆவணங்களில் கடந்த புதன்கிழமை கையொப்பமிட்டார்.

“அரசியல் கைதிகளைவிடுவிக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் நாம் முயற்சி எடுத்துள்ளோம்.” – கே. கே. மஸ்தான்

பல அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் நாம் முயற்சி எடுத்துள்ளோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத்தீவு அபிவிருத்தி குழு தலைவருமான கே. கே. மஸ்தான் தெரிவித்தார்.

இன்று (05) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் கொரோனா தொற்று இருந்தாலும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக கிராம சேவகர் ரீதியில் 30 இலட்சம் மற்றும் வட்டார ரீதியில் 40 இலட்சம் எனவும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு 100 கோடி என நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் 100 வீதம் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்காக செலவு செய்யக்கூடியதாக உள்ளது. ஏனைய வேலைத்திட்டங்களுக்கு 40 வீதமளவில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு பெரும் விமர்சனம் வந்த போதிலும் நாம் குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.

வவுனியாவில் பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் அது தொய்வு நிலையில் காணப்பட்டது. எனினும் பின்நாட்களில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கதைத்து விரைவாக எமது மாவட்ட மக்களுக்கான கல்வி வளத்தினை நான் உருவாக்கியுள்ளேன் என்பதனையிட்டு நான் பெருமையடைகின்றேன். இதேபோல் ஓமந்தையில் உள்ள அரச வீட்டுத்திட்டத்திற்கான காணி ஆவணங்கள் அவர்களுக்கு கிடைக்காத நிலை காணப்பட்டது. அவர்கள் வீடுகளை அமைத்து வசிக்கின்ற போதிலும் காணி ஆவணம் இல்லாத நிலையில் அமைச்சருடன் கதைத்து தற்போது அமைச்சரவை பத்திரம் போட்டு மிக விரைவில் ஆவணங்கள் வழங்கப்பட்டவுள்ளது.

இந்நிலையில் தற்போதைய சூழலில் இரண்டு வருடங்களுக்கு புதிய கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை என அரசாங்கம் கொள்கையாக கொண்டுள்ளது. எனினும் நாம் இங்குள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுடன் கதைத்து எமது பகுதியில் பாடசாலைகளில் வகுப்பறை கட்டிடம் குறைவு என்பதனால் அதனை அமைப்பற்காக மூன்று பாடசாலைகளில் 50 மில்லியன் பெறுமதியான கட்டிட வேலைகள் இடம்பெறுகின்றது. அத்துடன் அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக கல்வி வளர்ச்சிக்காக பாடசாலைகளில் பல கட்டிட பணிகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

நல்லாட்சி காலத்தில் எத்தனை அரசியல் கைதிகளை விடுவித்தார்கள். எனினும் தற்போதைய ஜனாதிபதி பொறுப்பேற்றவுடன் அரசியல் கைதிகளின் விடுதலை இடம்பெற்றுள்ளது. அது மாத்திரமின்றி அரசியல் நோக்கத்திற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விரைவாக விடுதலை செய்வதற்கான முனைப்பினை சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் ஜனாதிபதியுடன் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் பேசி தொடர் முயற்சிகளை எடுத்துள்ளோம்.

அத்துடன் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் அவ்வப்போது விளக்கம் கொடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்யலாம் என்ற முழு நம்பிக்கையில் இருக்கின்றோம். இந்தியாவில் இருந்து வரும் மீனவர்கள் எமது மீனவர்கள் பாதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றனர். எனவே இரண்டு நாடுகளுக்கிடையில் முரண்பாடு வராத வகையில் ஒரே மொழி பேசும் சமூகம் என்பதனை உணர்ந்து இந்தியாவில் இருந்து வரும் மீன்வர்கள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்காத வகையில் அவர்களது எல்லையில் இருந்து மீன்களை பிடிக்க வேண்டும் என்பதனை ஒரு கோரிக்கையாக வைக்கின்றேன் என தெரிவித்தார்.

“சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் இனப்படுகொலை செய்த மொட்டு கட்சியில் இருந்து வந்து இப்பொழுது எங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்” – சிவாஜிலிங்கம் காட்டம் !

அண்மையில் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் தற்போதைய அரசின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் நீதி அமைச்சரிடம் தமிழ் அரசியல்கைதிகள் தொடர்பான அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியிருந்தார். அது தொடர்பாக பல விமர்சனங்கள் தமிழர் அரசியல் தலைமைகளால் முன்வைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சீ.வி.விக்னேஸ்வரன் போன்றோர் சுரேன்ராகவன் தொடர்பான  தங்களுடை்ய நிலைப்பாடு தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் “சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் இனப்படுகொலை செய்த மொட்டு கட்சியில் இருந்து வந்து இப்பொழுது எங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்” என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் சுரேன்ராகவன் கருத்து தொடர்பாக தன்னுடைய நிலப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் தற்போதைய அரசின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் இனப்படுகொலை செய்த மொட்டு கட்சியில் இருந்து வந்து இப்பொழுது எங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

தமிழ் கட்சிகளினுடைய தலைவர்கள் எல்லோரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.தவறாக செயற்படுகிறார்கள் என அவர் தெரிவித்திருக்கிறார். நான் ஒன்றைகேட்க விரும்புகின்றேன். நீங்கள் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த போது மக்களே உங்களுடைய குறைபாட்டை தாருங்கள் நான் அதை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கிறேன் என்று சொன்னவர் நான் உட்பட பலர் கொடுத்த குறைபாடுகளை குப்பை கூடையில் போட்டாரோ? என தெரியவில்லை. இப்பொழுது அரசியல் கைதிகளை விவகாரத்தை பற்றி பரிசீலிப்பதற்கு 9 மாதங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

கௌரவ சுரேன் ராகவன் அவர்கள் விரும்பினால் வடக்கில் தேர்தலில் போட்டியிடலாம் மக்கள் ஆதரவு இருந்தால் வெல்லலாம் அல்லது உங்களுடைய பூர்வீகமான இடத்தில், கொழும்பில் போட்டியிடலாம்.அது அவருடைய விருப்பம். எனினும் வடக்கு-கிழக்கு மக்களுடைய பிரதிநிதிகள் பற்றி விமர்ச்சிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம். இல்லாவிட்டால் அவரைப் பற்றி நாங்கள் இன்னும் பல விடயங்களை சொல்லவேண்டிவரும். அவருடன்நேரடியான விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஆகவே அவருடைய விமர்சன கருத்துக்களை இத்துடன் நிறுத்தவேண்டும். இதை நாங்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் ராகவனுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்”  என தெரிவித்துள்ளார்.

“ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையே சாரும்” – இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றச்சாட்டு !

“ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையே சாரும்” என என கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய அரசாங்கத்தின் கால் நடை மற்றும் சிறுபயிர் செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடுக்காமுனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

“இப்பொழுது சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சில வாதப்பிரதிவாதங்களை , அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நீதி அமைச்சரிடம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டதை கேலிகூத்தாக எடுத்து பேசி வருகின்றமையினை ஊடகங்கள் வாயிலாக எம்மால் அறிய முடிகின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசலாம், பிரதமரிடம் பேசலாம், நீதி அமைச்சரோடும் பேசவேண்டும் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சருக்கும் பங்கு இருக்கின்றது, அவர் நாட்டினுடைய நீதித்துறைக்கு பொறுப்பானவர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் அன்று தொடக்கம் இன்றுவரை குரல் கொடுத்தவனாகவே இருந்து வருகின்றேன், அவர்களது விடுதலைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்பேன்.

300க்கும் மேற்பட்ட உயிர்கள் பயங்கரவாத தாக்குதலால் கடந்த ஏப்ரல் 21 இல் வெடித்து சிதறி பலியாகினர். அந்தப் பயங்கரவாதத்தை தடுக்காமல் இருந்த அரசாங்கத்தை, மக்கள் விடுதலை முன்னணியினர் அந்நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த போது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையே சாரும்.

ஒவ்வொரு முறையும் அரசாங்கத்திற்கு வாக்களிக்கும் பொழுதும், அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்கும் பொழுதும், பத்து அல்லது இருபது அரசியல் கைதிகளை விடுதலை செய்தால்தான் வாக்களிப்போம் என்ற நிபந்தனைகளை முன்வைத்து இருந்தால் கடந்த 4, 1/2 வருடங்களில் பல்வேறுபட்ட பிரச்சினைக்கான தீர்வினை கடந்த அரசாங்கத்திடமிருந்து எமது தமிழ் மக்களுக்காக பெற்றுக்கொடுத்திருக்க முடியும்”  எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்”