அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று பத்தரமுல்ல பெலவத்த ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றதுள்ளது.

இங்கு இலங்கை வைத்தியர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்குரிய நிலைமை மற்றும் நிலைமையை மாற்றுவதற்கான சங்கத்தின் முன்மொழிவுகள் தேசிய மக்கள் சக்தியிடம் முன்வைக்கப்பட்டிருந்தது

இதில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் சஞ்சீவ தென்னகோன் உட்பட நிறைவேற்று சபை அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் கிரிஷாந்த அபேசேன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

40,000-இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சி!

நாடளாவிய ரீதியில் 40,000-இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

 

சுகாதார ஊழியர்கள், நிறைவுகாண் வைத்திய ஊழியர்கள், தாதியர்கள் என சில தரப்பினர் தாம் வசிக்கும் பகுதிகளில் வைத்தியர்களை போன்று செயற்பட்டு சிகிச்சைகளை வழங்குகின்றமையை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

 

நாட்டின் சுகாதார கட்டமைப்புக்குள் நோயாளர்களுக்கான மருந்துகளை வழங்குவதற்கு துறைசார் அறிவு, பொறுப்பு மற்றும் அதிகாரம் என்பன வைத்தியர்களுக்கு மாத்திரமே காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

 

ஏனைய எந்தவொரு தரப்பினருக்கும் அதற்கான அதிகாரம் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

“சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற தன்மையே பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவக் காரணம்.” – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு !

நாட்டில் வைத்தியசாலைகளில் நிலவும் பாரிய மருந்துத் தட்டுபாட்டுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 10 விடயங்கள் அடங்கிய பரிந்துரைகளை சுகாதார அமைச்சு சரியான முறையில் பின்பற்றாமையே நாட்டில்  பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவக் காரணம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சுகாதார அமைச்சின் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

தேசிய வைத்தியசாலைகளில் அஸ்ப்ரீன் மருந்துகளுக்குக்கூட  பாரிய தட்டுப்பாடு நிலவுவதுடன், பிரதேச வைத்தியசாலைகளில் சேலைன் போத்தல்களிலிருந்து பரசிட்டமோல் மருந்துகளுக்குக்கூட தட்டுப்பாட்டு நிலவுவதாக அந்த சங்கம் மேலும் குறிப்பிடுகின்றது.

ஒளடதங்கள் மற்றும் மருந்து வகைகள் தொடர்பில்  ஈடுபட்டுள்ள சகல  நிறுவனங்களையும் ஒன்றிணைத்து குழுவொன்றை நியமித்து, அதனூடாக கலந்துரையாடல்களை முன்‍னெடுத்து தேவையான தீர்மானங்களை எடுக்குமாறு தமது சங்கம் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டு சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியிருந்தபோதிலும், அதனை சுகாதார அமைச்சு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

இதன் காரணமாகவே நாட்டில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவக்காரணம் என  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  பொதுச்செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே ‍தெரிவித்துள்ளார்.