அருட்தந்தை மா. சக்திவேல்

அருட்தந்தை மா. சக்திவேல்

பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழர்களை வெறும் கறிவேப்பிலையாகவும் ரம்பையாகவும் பாவித்து விட்டு தூக்கி எறியவே முற்படுகின்றனர். – அருட்தந்தை மா.சக்திவேல்

தனியார் காணிகளில் புத்தர் சிலைகளை வைத்தல், விகாரைகளை கட்டுதல் போன்றவற்றிற்கு வருத்தமோ தடுத்து நிறுத்துவதாகவோ கருத்து கூற மறுத்துள்ளமை அவையெல்லாம் தமது காலத்திலும் தொடரும் என்பதையே உணர்த்துகிறது. இதுவும் ஒருவகையில் யுத்த பிரகடனமே என அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிக் கதிரையை தமதாக்க தமிழர்களை வெறும் கறிவேப்பிலையாகவும் ரம்பையாகவும் பாவித்து விட்டு தூக்கி எறியவே முற்படுகின்றனர்.சுயநல அரசியலுக்கு தம்மை இரையாக்கிக்கொண்ட தமிழ் தேசிய கட்சியினரும் அரியதரம் பூசிக்கொண்ட தமிழ் அரசியல் தரப்பினரும் தேர்தல் அரசியல் களத்தில் நின்று தமிழர்களை பலி கொடுக்கும் அரசியலை முன்னகர்த்துகின்றனர்.

சமாதானப்படையாக தமிழர் தாயகத்தில் காலடி வைத்த இந்திய இராணுவத்தையும், இந்தியாவின் முகத்தையும் இதற்கு அவர்கள் யார் என்பதையும் உலகிற்கு வெளிக்காட்டிய தியாகி திலீபனின் உயிர்தியாக மாதம் இதுவாகும். அவரின் உண்ணாவிரத போராட்டம் எமது அரசியலுக்கும் தேசியம் காக்கும் செயற்பாட்டுக்கும் உந்து சக்தியாக இருப்பதோடு எதிராளிகளில் முகத்திரையை கிழிக்க தேசமாக ஒன்று சேர வேண்டும் என தெரிவித்துள்ளார். தெற்கின் தேர்தல் வெற்றி தினம் என்பது தமிழர்களுக்கு இன்னும் ஒரு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம். அதுவே எமக்கான தேர்தல் வெற்றியாக அமையட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் – அருட்தந்தை மா.சக்திவேல்

முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறுதி யுத்த காலம் வரை போராட்ட இயக்கத்தோடு ஒட்டிக்கொண்டு அரசியலையும் போரியலையும் நியாயமென கூறியவர்கள் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தனது உண்மையான அரசியல் முகத்தை வெளிக்காட்டி போராளிகளை ஜனநாயக துரோகிகள் என வெளிப்படையாகவே கூறும் அரசியல் வாதிகளையே தற்போது காண்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் முன்னாள் போராளிகளையும், அரசியல் கைதிகளையும் அவமானப்படுத்தும் செயல் எனவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“பொதுமன்னிப்பு என்ற பெயரில் குற்றவாளியாக முத்திரை குத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை ஏற்க முடியாது.”- அருட்தந்தை மா.சக்திவேல்

பொதுமன்னிப்பு என்ற பெயரில் குற்றவாளியாக முத்திரை குத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை ஏற்க முடியாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பயங்கரவாத தடை சட்டத்தினால் 15 வருட வாழ்வை தொலைத்துவிட்ட அரசியல் கைதியான கிளிநொச்சியை சேர்ந்த விவேகானந்தனூர் சதீஷ்குமார் இன்று வெளியுலகையும் குடும்பத்தையும் காணும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

சிறையில் வாடும் ஏனைய அரசியல் கைதிகளும் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும்; எந்த வடிவத்திலும் பயங்கரவாத தடைச்சட்டம் இனிமேலும் தொடர்வதற்கு தெற்கின் சமூகம் இடமளிக்கக்கூடாது; அதற்கான அழுத்தத்தை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தாருடைய தனிப்பட்ட மகிழ்வில் நாமும் பங்கு கொள்கின்றோம். ஆனால், பொது மன்னிப்பு என்ற பெயரில் குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்டு அரசியல் கைதிகளை ‘விடுதலை’ என வெளியில் அனுப்புவதை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை.

அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு என்பது அரசு பயங்கரவாதத்தினை அங்கீகரிக்கும், அதற்கு எதிரான மக்களின் விடுதலை செயற்பாட்டினை தொடர்ந்து பயங்கரவாதமாக்குவதுமான செயலாகும். தற்போதைய ஜனாதிபதியின் அரசியல் கைதியான சதீஷ்குமாரின் விடயத்திலும் அதுவே மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் என்போர் தேசத் துரோகிகள் அல்ல; பயங்கரவாதிகளும் அல்ல. அவர்களை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தி காலத்துக்கு காலம் ஜனாதிபதிகள் விடுதலை என வெளியில் அனுப்புவது என்பது தமிழ் மக்களையும், தமிழர்களின் அரசியல் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அவமதிக்கும் செயலாகும்.

தற்போதைய ஜனாதிபதி 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இன பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று பாராளுமன்றத்தில் கொக்கரித்தார்.

தமிழ் மக்கள் விரும்பாத 13ஆம் யாப்பு திருத்தத்தை அமுல்படுத்தப்போவதாக அரசியல் நாடகம் ஆடினார்.

அது பயங்கரவாதமாகும்; அரசியல் யாப்பில் உள்ள 13ஆம் யாப்பு திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என்று கூறி பெருமளவான இயக்கத்தினர் வீதி போராட்டத்தை நடத்தினர். பயங்கரவாத தடைச்சட்டம் இவர்களுக்கு எதிராக பாயவில்லை. இவர்களா தேசப் பற்றாளர்கள்?

விடுதலை செயற்பாட்டை பயங்கரவாதமாக்கி, அதற்கு துணையாக பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டுவந்து 44 ஆண்டு காலமாக பாதுகாப்பதும், 75வது சுதந்திர ஆண்டிலும் அதன் பாதுகாப்பிலே ஆட்சி செய்ய நினைப்பதும், அச்சட்டத்தினை புதுப் பெயரில் தொடர வழிசமைப்பதும் பயங்கரவாதமாகும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்து சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளையும் அதே சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தூக்குத் தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் மூன்று அரசியல் கைதிகளையும் அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கை எடுப்பதே தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான ஆரம்ப செயற்பாடு என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

அன்று குட்டிமணி கூறியது போன்று தற்போது அரசு பயங்கரவாதம் வேறு வடிவத்தில் தெற்கு பக்கம் திரும்பியுள்ளது. இதற்கு எதிரான தெற்கின் சக்திகள் தமிழ் மக்களுடைய அரசியலை அங்கீகரித்து அதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான செயற்பாட்டை இன்னும் தீவிரப்படுத்த முடியும். இல்லையேல், நாடு தொடர்ந்து பிளவுபட்டே இருக்கும் என்பதையும் தெற்கின் சக்திகள் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயர் காலத்து சிவன் கோயில் இடிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை – அருட்தந்தை மா.சக்திவேல் விசனம்!

சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலி.வடக்கில் போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.

இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் கொடூர முகத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இத்தகைய நாகரீகம் அற்ற செயலை மலையக சமூக ஆய்வு மையம் மற்றும் மலையக தமிழர் பண்பாட்டுப் பேரவை என்பன வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துன்புற்றிருக்கும் மக்களின் வேதனையோடு தாங்களும் நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அராங்கம் இந்து மக்களிடத்திலும், தமிழ் மக்களிடத்தும் இச்செயல் தொடர்பாக மன்னிப்பு கோருவதோடு அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை முற்றாக அங்கிருந்து அகற்றி அங்கு இந்து மக்களின் சுதந்திர வழிபாட்டுக்கும் இடம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி – பொருளாதாராதிற்கு முதுகெலும்பாய் பங்காற்றியவர்கள் இன்னமும் உரிமையற்றோராய் !

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்களை கடக்கும் நிலையில் அவர்களுக்கு எந்த ஒரு உரிமையையும் எந்த அரசாங்கமும் கொடுக்கவில்லை எனவும், இதன் விளைவாக நிலம் உரிமை, மொழி உரிமை, கலாசார உரிமை அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அதற்கு எதிராக இன்று (16) ஹட்டன் நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்கும் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேலின் தலைமையில் இந்த போராட்டம் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இடம்பெற்றது.

எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு, எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் இலங்கையில் காலடி வைத்து எதிர்வரும் 2023ம் வருடத்தோடு 200 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்ல அபிவிருத்தியிலும், இலங்கையின் பொருளாதாராதிற்கு முதுகெலும்பாய் பங்காற்றியவர்கள் இவர்களின் வாழ்வு நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

சரியான மலையக அரசியல் தலைவர்கள் இன்மையால் தொடர்ந்து வரும் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் பொது மக்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.