அருட்தந்தை மா.சத்திவேல்

அருட்தந்தை மா.சத்திவேல்

யுத்த குற்றங்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு பேரினவாத கருத்தியல் கொண்ட எந்தவொரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் துணிய மாட்டார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

சமஷ்டியை அங்கீகரிக்குமாறு தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வலியுறுத்த சர்வதேச காணாமலாக்கப்பட்டோருக்கான தினத்தில் ஒன்று திரள்வோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவரால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

 

நாட்டில் நிலவிய தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு யுத்த காலப்பகுதியில் இலங்கை அரச படைகளால் புரியப்பட்ட மனித குலம் ஏற்காத யுத்த குற்றங்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு பேரினவாத கருத்தியல் கொண்ட எந்தவொரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் துணிய மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.

 

ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15 வருட காலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தமது அன்புக்குரியவர்களை தேடி கிடைக்காத நிலையில் 2500 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் இவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி அதாவது நாளை சர்வதேச காணாமலாக்கப்பட்டோருக்கான தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்துவதற்கு ஆயத்தங்களை செய்துள்ளனர்.

 

இப் போராட்டத்திற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தமது முழுமையான ஆதரவை தெரிவிப்பதோடு வடகிழக்கு வாழ் அனைவரும் அப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றது.

 

தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நிற்கும் பிரதான வேட்பாளர்களும் அவர்களின் பின்புலத்தில் இயங்கும் கட்சிகளும் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு யுத்தத்திற்கும் இனப்படுகொலைக்கும் ஆதரவு தெரிவித்தவர்களே.அத்தோடு தமது ஆதரவாளர்களை யுத்த வெற்றி கொண்டாட தூண்டியவர்களுமாவர்.

இவர்கள் இனி மேலும் தமிழர்களுக்கு யுத்தக்குற்றங்களுக்கான நீதியையோ, அரசியல் நீதியையோ பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. இவர்களின் உண்மையை கண்டறிவதற்கான வழிமுறைகள் எல்லாம் மாயமானே. அதில் தமிழர்களுக்கு இனியும் நம்பிக்கை இல்லை.

 

அதுமட்டுமல்ல இவர்கள் எதிர்நோக்கி இருக்கும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் அனைத்து தேர்தல்களிலும் பேரினவாத வாக்குகளையே நம்பி இருக்கின்றனர்.பேரினவாத பௌத்த துறவிகளையே கவசமாகவும் கொண்டுள்ளனர்.இவர்களை எதிர்த்து தமிழர்களுக்கு எத்தகைய நீதியையும் உறுதி செய்யப்போவதுமில்லை.

 

இவர்கள் வடகிழக்கில் மக்கள் சந்திப்புகளை நடத்தும் போதும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் போதும் யுத்தக்குற்றங்கள் காணாமல், ஆக்கப்பட்டோர் விடயமாக எத்தகைய கருத்துகளையும் கூறுவதும் கிடையாது.

 

இவர்களுக்கு சாமரை வீசுகின்ற தமிழ் அரசியல்வாதிகளும் இவ் விடயம் சம்பந்தமாக பிரதான வேட்பாளர்களிடம் கேள்வி கேட்பதற்கோ; பொது மேடைகளில் கருத்து கூறுவதற்கோ தயங்குவது தமிழர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

 

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் என்பது வெறுமனே தமது உறவுகளைத் தேடும் போராட்டம் மட்டுமல்ல.அது தமிழர் தேசத்தின் அரசியல் நீதிக்கான போராட்டத்தின் அடையாளமாகவும் உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுவோரில் நூற்றுக்கும் அதிகமானோர் தீர்வு கிட்டாத நிலையில் வேதனையில் மரணத்தை தழுவியுள்ளனர். இதனை சாதாரண மரணம் என நாம் கடந்து செல்ல முடியாது.நீதி நிலை நாட்டப்படாது நடத்தப்பட்ட திட்டமிட்ட மறைமுக கொலை எனவே அடையாளப்படுத்தல் வேண்டும்.

 

இவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்தும் போராட்டம் மரணிக்காது உள்ளமைக்கு போராட்ட அமைப்புக்களின் மனத்திடமே காரணம் எனலாம்.அப்போராட்தினை உயிரோட்டமுள்ளதாக்க தமிழர் தேசமாக எம் பங்களிப்பை செய்து எம் குரலை சர்வதேசத்திற்கு கேட்கச் செய்வோம்.

மேலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தினம் தினம் சிந்தும் அறிந்தும் எமது உறவுகளும் மாவீரர்களுமாக இலட்சங்களை தாண்டியோர் இரத்தம் சிந்திய நிலத்தில் நின்றும் பேரினவாத அரசுக்கும் இனப்படுகொலை சூத்திரதாரிகளுக்கும் கொடி பிடித்துக் கொண்டு திரியும் தமிழர் தேச அரசியல் நரிகளுக்கு எதிராக குரல் எழுப்பவும் ஒன்று திரள்வோம்.

 

இந்தியா இன்றும் எமக்கான அரசியல் தீர்வாக 13 மே திணிக்க முயல்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் யுத்தக் குற்றங்களுக்கு காணாமல் சர்வதேச விசாரணையோடு காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது அரசியல் நீதி என்பதை மையப்படுத்தி சுயநிர்ணய உரிமையை உறுதி செய்து சமஸ்ட்டியை அங்கீகரிக்குமாறு தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வலியுறுத்தவும் ஒன்று திரள்வோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைந்த வடக்கு கிழக்கிற்கான, தேச அரசியலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவது காலத்தின் கட்டாயம் – அருட்தந்தை மா.சத்திவேல்

இணைந்த வடக்கு கிழக்கிற்கான, தேச அரசியலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் வலியுறுத்தியுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இறுதி யுத்தக் காலப்பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டதாகவும் யுத்தமற்ற காலப்பகுதியில் இனவாத வன்முறைகளால் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் பொது சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நடத்தப்பட்டபோது கிழக்கின் பல இடங்களில் பொலிசார் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதோடு தாக்குதலும் நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெடுக்குநாறி மலை சம்பவம் தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா..? -அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி !

வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இன்று (09) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவிலில் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிவ பக்தர்களையும், அவர்களின் வழிபாட்டையும் அவமானப்படுத்தும் வண்ணம் பொலிஸார் வழிபாட்டுப் பொருட்களை சப்பாத்து காலால் உதைத்து தள்ளியதோடு, பெண்களை இழிவுபடுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அறுவரை கைது செய்துள்ளனர்.

 

இதில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஒட்டுமொத்த சிவ பக்தர்களுக்கும் வருத்தத்தை தெரிவிப்பதோடு, இது நாட்டின் அடிப்படை மனித உரிமையும் மற்றும் வழிபாட்டு உரிமையையும் மீறும் செயல் மட்டுமல்ல. தமிழர்கள் மீதும் இந்துக்கள் மீதும் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாத மதவாத வன்முறையின் தோற்றமுமாகும்.

 

இதில் பொலிஸார் அராஜகத்தோடு பேரினவாத அதிகார அரசியல் பக்கபலமும் அதற்கு உள்ளது என்பதை உணரக்கூடியதாக உள்ளது. இக்கொடிய மதவாத இனவாத வன்முறை தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். இதனை சமயம் கடந்து அனைத்து சமய தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமது எதிர்ப்பை கூட்டாக வெளிக்காட்ட வேண்டும்.

 

களனியை மையமாகக் கொண்டு இயங்கும் பௌத்த தகவல் நிலையம் எனும் அமைப்பு வெடுக்குநாறி மலையில் இனவாதம், மதவாதம் என்பவற்றை தோன்றுவிக்கும் வழிபாடு நடைபெறவுள்ளதாக பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இக்கடிதம் எதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது? சிவராத்திரி வழிபாடு எவ்வாறு இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் எனவும் கேட்கின்றோம்.

 

இனவாதம், மதவாதம் அடிப்படை கருத்தியலில் இயங்கும் பயங்கரவாத அரசின் கூலிகளாக இயங்கும் பொலிஸாரே இனவாத, மதவாத அதிகார வெறியினை சிவ பக்தர்களிடம் காட்டியுள்ளமை வெட்கக்கேடாகும். அங்கு கூடியிருந்த பக்தர்கள் பொலிஸ் அராஜகம் ஒழிக என்றோ அல்லது வேறு எந்த வகையிலோ தமது எதிர்ப்பை காட்டவில்லை. சமய பக்தி கோஷங்களையே அவர்கள் எழுப்பினர். இதுவா மதவாத மற்றும் இனவாத வழிபாடு.

ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே தமிழர்களின் வழிபாட்டு உரிமை மீறப்பட்டுள்ளது.

 

இலங்கை தொடர்பாக கடந்த காலங்களில் மனித உரிமை பேரவை பல அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் கடந்த காலங்களில் வழங்கியபோது அவற்றை பின்பற்றால் சர்வதேசத்தை ஏமாற்றும் ஆட்சியாளர் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடக்கும் சந்தர்ப்பங்களில் அதனை அவமதிப்பது போல் நடப்பது இது முதல் தடவை அல்ல.

 

அமைச்சர் ஒருவர் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து விரட்டி மிரட்டியதும் இவ்வாறான காலப்பகுதியிலாகும். அதேபோன்று நேற்று இந்துக்களின் சிவ வழிபாட்டை கொச்சைப்படுத்தி அராஜகம் புரிந்துள்ளனர்.

 

இது இந்நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இனவாத வன்முறையை தொடர்கிறது என்பதை சுட்டி நிற்கிறது.

 

உயிர்ப்பு தினத்தில் கூண்டுகளை வடிக்கச் செய்து உயிர்களைக் கொண்டு அரசியல் செய்தவர்கள் தொடர்ந்து வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

 

தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா எனவும் கேட்கின்றோம்.

 

தேர்தல் காலத்தில் தமிழர்களின் வாக்குகளை எதிர்பார்த்து அரசியல் செய்யும் தென்பகுதி கட்சிகள் வெடுக்குநாறி மலையில் நடந்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவும் அதனை தூண்டிவிட்டு குளிர் காய்பவர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்க வேண்டும்.

 

சர்வதேச பெண்கள் தினத்தில் அவ்வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களை அவமானப்படுத்தியதற்கு பெண்கள் தினத்தை கொண்டாடிய அனைத்து சக்திகளும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும்.

 

அத்தோடு மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிராக தம் எதிர்ப்பை தெரிவிப்பதோடு ஜெனிவா மனித உரிமை பேரவையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு தனது ஆதரவையும் நல்க வேண்டும்.

 

தமிழர் தாயகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் தமிழர் தாயகத்தை சூழ்ந்துள்ள இருளினை கருத்தில் கொண்டு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். அத்தகைய விழிப்பினை கடந்த வாரம் சாந்தனின் உடல் எடுத்துச் சென்றபோது காட்டியது போன்று ஒன்றுபட்ட சக்தியாக வெளிப்படுத்துவதற்கான காலம் உருவாகி வருகின்றது என்பதை உணர்ந்து தேசிய சிந்தனையோடு கூட்டாக செயற்படுவதையும் உறுதி செய்தல் வேண்டும் என்றுள்ளது.

“பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிக்கும் தென்னிலங்கை சக்திகள் பௌத்த சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்.” – அருட்தந்தை மா.சத்திவேல்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெற்கின் சக்திகள் போராடுவதை வரவேற்கின்றோம். அத்தோடு பௌத்த சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தாலே பாலஸ்தீனத்துக்கான போராட்டம் உண்மையானதாக அமையும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்துக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையில் வெடித்திருக்கும் போர் மிகவும் உக்கிரமானது. ஒன்றும் அறியாத சாதாரண மக்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள் என இரு பக்கமும் ஆயிரங்களை தாண்டி இதுவரை கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ளனர்.

இதனை மனித நேயம் கொண்டவர்களால் அங்கீகரிக்க முடியாது. இத்தகைய நிலை உருவாவதற்கு யுத்தத்தை விரும்பும் பயங்கரவாத நாடுகளும், அதற்கு அமைதி காத்து அனுமதி அளிக்கும் உறவு நாடுகளும், சர்வதேச அமைப்புக்களும் பொறுப்புக்கூறல் வேண்டும்.

பாலஸ்தீனத்தை இறைமையுள்ள நாடாக அங்கீகரிப்பதும் சொந்த நிலத்தில் அந்நியமாக்கப்படும் மக்களுக்கு வாழ்வுக்கான உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவதுமே தீர்வுக்கான ஒரே வழி என இன அழிப்புக்கும், இனப்படுகொலைக்கும் முகங்கொடுத்து நீதிக்காக சர்வதேசத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கும் மக்களாக ஐ.நா. சபையை கேட்டுக்கொள்கின்றோம்.

பாலஸ்தீன மக்களின் தாயக உரிமையை, இறைமையை அங்கீகரிக்காமல் அவர்களது பூமியிலேயே அவர்களை அந்நியர்களாக்கி உலக வல்லரசுகள் தமது அரசியல், பொருளாதார நலங்களுக்காக அவர்களை அழிக்க நினைப்பது பயங்கரவாதமே. அதன் உப விளைவாகவே ஹமாஸ் போன்ற இயக்கங்கள் உருவெடுத்தன. அதனை பயங்கரவாதமாக்குவதும் பயங்கரவாதமே. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேபோன்று நாடுகள் பிரிந்து போர்க்கொடி தூக்கி இருப்பது வறுமையில் வீழ்ந்துள்ள நாடுகளை மேலும் வறுமைக்குள் தள்ளுவதாக அமையும். இது உலக அமைதி, ஒழுங்கை மேலும் மோசமாக சீர்கெடச் செய்யும். இதுவும் பயங்கரவாதமே.

இலங்கையில் வட கிழக்கு தமிழர்களின் நீண்ட நாள் அரசியல் அபிலாசைகள் தீர்க்கப்படாததன் காரணமாகவே பல்வேறு விடுதலை அமைப்புகள் தோற்றம் பெற்றன. இறுதியில் பிரச்சினைக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கமே காரணம் என அவர்களை அழித்தவர்கள் இதுவரை வடகிழக்கு தமிழர்களின் இறைமையை அங்கீகரிக்காமல் பௌத்த சிங்கள மேலாண்மை வாதத்தில் இராணுவத்தின் துணையோடு, இராணுவ முகம் கொண்ட சிங்கள பௌத்த பிக்குகளை ஏவிவிட்டு நில ஆக்கிரமிப்பை தொடர்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் தினமும் வீதியில் நின்று போராடுவதற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் இன்னும் ஒரு வடிவமே மட்டக்களப்பு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டம்.

வடகிழக்கு தமிழர்களின் இறைமையை அங்கீகரிக்காமல், அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றாமல், அவர்களது பாரம்பரிய தாயக பூமியை ஆக்கிரமித்து பௌத்த பூமியாக்க துடிக்கும் பௌத்த துறவிகளுக்கு அனுமதி அளிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாலஸ்தீன-/ இலங்கை நட்புறவு அமைப்பின் தலைவராக இருப்பது தேச விடுதலைக்காக ஏங்கி நிற்கும் பாலஸ்தீன மக்களுக்கு அவமானமே. இலங்கை மக்களுக்கு அது நகைப்புக்கிடமானதே.

அது மட்டுமல்ல, பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெற்கின் சக்திகள் முகநூலில் பதிவிடுவதோடு போராட்டத்தை முன்னெடுப்பதோடு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இதனை நாம் வரவேற்கின்றோம்.

அதே நேரம் அவர்களிடம் நாம் “வடகிழக்கு தமிழர்களின், மலையகத் தமிழர்களின் இறைமைக்கும், அரசியல் அவிலாசைகளுக்கும், தாயக கோட்பாட்டுக்கும் ஆதரவாகவும் குரல் கொடுக்க வேண்டும் என கேட்பதோடு பௌத்த சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கூறுகின்றோம். அவ்வாறு நீங்கள் செய்தால் மட்டுமே பாலஸ்தீனத்துக்கான உங்கள் போராட்டம் உண்மையானதாக அமையும்.

யுத்த வடுக்களோடு வலிகளையும் சுமந்து தமிழர் தேசியம் காக்க போராடும் சமூகமாக பாலஸ்தீன மக்களின் உரிமைக்காகவும் தாயக மீட்புக்காகவும் நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

இன விடுதலைக்காக போராடும் இயக்கங்களை அழிக்கலாம்; ஒழிக்கலாம். ஆனால், கொள்கை பற்றோடு, தனியாக மண் தாகத்தோடு கொள்கை உள்ள உணர்வுகளை எவராலும் அழிக்க முடியாது. அது புதிய வடிவங்களோடு, புதிய வீச்சோடு தொடரும் என்பதே உண்மை.

உலக பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் வல்லரசுகள் தனது சுயநல அரசியலில் இருந்து விலகி உலகின் அமைதிக்காக ஒடுக்கப்படும் இனங்களின் விடுதலைக்காக ஐக்கிய நாடுகளின் ஒழுங்கு விதிகளை முறையாக கடைப்பிடித்து சமாதானத்துக்கு வழிகாட்ட வேண்டும் என வேண்டிக்கொள்கின்றோம் என்றிருந்தது.

“ மாகாண ஆளுநர்களை மக்கள் தெரிவு செய்யும் முறை உருவாக்கப்பட வேண்டும்.” – அருட்தந்தை மா.சத்திவேல்

ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெள்ளிக்கிழமை (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு ,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு ஜனாதிபதியால் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  வடக்கிற்கும், கிழக்கிற்கும் இரண்டு தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு ஊவாமாகணத்தின் முன்னாள் அமைச்சர் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தமிழர்கள் நியமிக்கப்பட்டனர் என பெருமை கொள்வோரும் உண்டு. இதில் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆளுநர்கள் ஜனாதிபதியின் தேவையை நிறைவேற்றுவர்களை தவிர மக்கள் கோரிக்கைகளை செவிமடுப்பவர்களாகவே இருப்பார்கள். செந்தில் தொண்டமான் ஊவாமாகண சபையின் அனுபவம் உள்ளவர். அவரை ஊவா மாகாணத்திற்கு ஆளுநராக நியமிக்காதது ஏன்? வேறொரு தமிழரை கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்காததன் நோக்கம் என்ன? அதுவே ஜனாதிபதியின் நரி தந்திரம்.

தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மற்றும் ஊவாமாகாணங்களுக்கு இது நாள் வரை தமிழர்களை எவரும் ஆளுநர்களாகவோ முதலமைச்சர்களாகவோ நியமிக்கப்படவில்லை. அந்த அளவு துணிவு கட்சிகளுக்கும் கிடையாது. மலையக மக்களின் வாக்குகள் வேண்டும். ஆனால் தமிழர்களை அதிகாரத்தில் வைத்து விடக்கூடாது. இவ்வாறு நியமித்தால் மலையக பிரதேசத்தை மலையக தமிழர்களின் தேசியத்தின் அடையாளமாக அடையாளப்படுத்தி விடுவார்கள் என்று பயம். இது சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் கூறலாம்.

ஏற்கனவே அமைச்சர் பதவி ஒன்று இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு தொண்டமான் குடும்பத்தவருக்கு கொடுக்கப்பட்ட நிலையில் அதே கட்சியை சேர்ந்த அதே தொண்டமான் குடும்பத்தைச் சார்ந்த இன்னொருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார். தற்போது அவர்களின் கட்சி முழுமையாக ஜனாதிபதியினதும் ஐக்கிய தேசிய கட்சியினதும் கைக்குள் சென்று விட்டது என்று கூறலாம். இதுவரை காலமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷரின் அரவணைப்பிற்குள் வளர்ந்தவர்கள் தற்போது ரணிலின் அரவணைப்புக்குள் சென்று விட்டனர். இது அடுத்த தேர்தலை இலக்கு வைத்து மலையகத்தை தமதாக்கும் செயற்பாடாகும்.

செந்தில் தொண்டமானின் நியமனத்தின் மூலம் தற்போது ஜனாதிபதி இந்தியாவையும் சமாளித்து விட்டார். புதிய ஆளுநராக பதவி ஏற்றுள்ள செந்தில் இந்தியா விரும்பும், இந்துத்துவா சிந்தனையாளர்கள் விரும்பும், தமிழகத்தோடு நெருங்கிய ஒருவரும் ஆவார். இனிமேல் இந்திய துணை தூதரகம் கிழக்கில் அமைந்தது போன்றது தான்.

வடகிழக்கினை சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களம் வேகமாக ஆக்கிரமிக்கும் காலமிது. புதிய ஆளுநர்கள் அதற்கு என்ன செய்ய போகின்றார்கள். ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும்.

“கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்த ரணில் விக்கிரமசிங்க இன்று தேசிய தைப்பொங்கல் என கூறுகிறார்.” – அருட்தந்தை மா.சத்திவேல்

“கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்து அதன் அறுவடையில் மகிழ்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய பொங்கல் என கூறிக்கொண்டு தமிழர் தாயகத்தில் காலடி எடுத்து வைக்க கூடாது.” என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரச திணைக்களங்கள் பேரினவாத சிந்தனையோடு தமிழர்களின் நிலத்தையும் வாழ்வையும் தொடர்ந்து சூறையாடிவரும் காலம் இது என குற்றம் சாட்டியுள்ள அவர், மக்கள் பூர்வீகமாக விவசாயம் செய்த நிலங்கள் இராணுவத்திடம் சிக்கி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய தை பொங்கல் என்பது அரசியல் நாடகம் என்றும் இதனை ஏற்க தமிழர்கள் ஏமாளிகள் அல்ல என்பதை போலி தேசியவாதிகள் உணர வேண்டும் என்றும் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தைப்பொங்கல் என்பது பானையும், அரிசியும், அடுப்பும் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல உழைப்பாளரின் வியர்வை, அதனால் விளைந்த விளைச்சல் உழைப்பு, உழைப்புக்கு அடிப்படை காரணமான மண் அதனுடைய உரிமை கலந்த விடயமாகும். இதிலே வாழ்வும் வளமும் தங்கி இருக்கின்றது.

கலாசார சிறப்போடு தேச உணர்வும் அதன் பாதுகாப்பும் அதற்கான உறுதியும் மேலோங்கி இருக்கின்றது. இவற்றையெல்லாம் சிதைத்தழித்து தொடர் அழிவுகளுக்கும் திட்டமிட்டு கொண்டு தேசிய பொங்கல் என்று அதிபர் தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதோ அவரின் வருகையை வரவேற்பதையோ நாம் எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது.

வியர்வை விதைத்த நிலம், உழுது விளைந்த நிலம், பொங்கலிட்டு மகிழ்ச்சியோடு உறவுகளோடு கூடி பகிர்ந்து உண்ட நிலம், இராணுவத்திடம் சிக்கி உள்ளது. அரச திணைக்களங்கள் பேரினவாத சிந்தனையோடு தமிழர்களின் நிலத்தையும் வாழ்வையும் தொடர்ந்து சூறையாடிவரும் காலமிது.

இதற்கு மத்தியில் தேசிய தை பொங்கல் என அரசியல் நாடகம். இதனை ஏற்க தமிழர்கள் ஏமாளிகள் அல்ல என்பதை போலி தேசியவாதிகள் உணர வேண்டும். தமிழர்களின் கலாசாரத்தை முற்றாக அழிப்பதற்கு போதை பொருட்களின் பாவனையும் எங்கும் வியாபித்துள்ளது.

இதற்குப் பின்னால் அரச படைகள் உள்ளதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர். நாட்டில் வேறெந்த பிரதேசத்திலும் இல்லாத அளவிற்கு முப்படையினரும் காவல்துறையினரும் அவர்களுக்கு உதவியாக இரகசிய காவல்துறையும் அவர்களின் புலனாய்வாளர்களும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் பலமாக இருக்கும் போது போதை பொருட்கள் வடகிழக்கில் அதிகரித்துள்ளதென்றால் அதற்கு பொறுப்பு கூற வேண்டியது பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்புக்கு பொறுப்பான ஜனாதிபதியுமே.

இத்தகைய கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்து அதன் அறுவடையில் மகிழ்ந்த ஜனாதிபதி தேசிய தைப் பொங்கல் என தமிழர் தாயகத்தில் காலடி வைக்க வேண்டாம் என்றே கேட்கின்றோம்.

தமிழர்களின் தேசிய பாதுகாப்பிற்காக போராடி உயிர்த்தியாகமானோரை சொந்த மண்ணிலே நினைவு கூர முடியாது. இறுதி யுத்தத்தில் வான் தாக்குதலாலும், நச்சு குண்டுகளாலும் படுகொலை செய்யப்பட்டோரை கூட்டாக நினைவு கூருவதற்கு முடியாதுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர்க்கு நீதி இல்லை. தமிழர் தேச தேசியத்தின் உயிர்த் துடிப்போடு இயங்கியவர்கள் அரசியல் கைதிகளாகி விடுதலை இன்றி வாடுகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணர்களில் ஒருவரான தற்போதைய ஜனாதிபதி தேசிய தைப்பொங்கல் என தமிழர்கள் மத்தியில் வந்து உழைப்பின் விழாவை பாரம்பரிய தேசிய நிகழ்வை அசிங்கப்படுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது.

அத்தோடு தேசிய தைப்பொங்கல் என தமிழர்களை கூட்டுச் சேர்க்கும் செயற்பாட்டிலும் பல அரசியல் கைக்கூலிகள் நம்மத்தியிலே தோன்றி இயங்கத் தொடங்கியுள்ளனர்.

இது இவர்களின் அரசியலாகும் இவர்கள் காலாகாலமாக எமக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளனர். இத்தகைய புல்லுருவிகளை அகற்றி தமிழர் தாயக அரசியலை காப்பதற்கு உறுதி கொண்டு நிலம் காக்கும் பொங்கல் எம் மண்ணிலே பொங்க சக்தி கொள்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழரின் பிரச்சினையை தீர்க்க ஞானசார தேரர் போன்ற துவேஷம் கொண்டவர்கள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” – அருட்தந்தை மா.சத்திவேல்

“தமிழர் தாயகத்தில் அக பிரச்சினையை தீர்க்க வெளி சக்திகள் அதுவும் ஞானசார தேரர் போன்ற சமய மற்றும் இன துவேஷம் கொண்டவர்கள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.”  என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூப விடயம் தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

வட-கிழக்கில் குறிப்பாக மன்னார் பிரதேசத்தில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுகுமிடையே சமய முறுகல் நீண்ட காலமாக தொடர்ந்து வரும் நிலையில் தற்போது திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூப பிரச்சினை தொடர்பாக ஒரே நாடு ஒரே சட்ட செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தலையிடுவதை தவிர்க்க மன்னார் ஆயர் உட்பட கத்தோலிக்க சமயத் தலைவர்களும், இந்து மதத் தலைவர்களும் பேச்சுவார்த்தை ஈடுபட்டு சமய நல்லிணக்கத்தை உறுதி செய்தல் வேண்டும்.

 

இந்த நாட்டில் பௌத்த மற்றும் இந்து மக்களே பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அரச சார்பற்ற அமைப்புக்கள் அறிக்கை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். இது திட்டமிட்ட அரசியல் செயல் என குற்றச் சாட்டை முன்வைப்பதன் மூலம் கிறிஸ்தவத்திற்கும் ஏனைய சமயங்களுக்கும் இடையில் முரண்பாட்டை வலியுறுத்துவதோடு திருக்கேதீச்சர சமயப் பிரச்சினையை தான் தீர்க்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மடு தேவாலயம் காணிப்பிரச்சினை ஒன்றில் இந்து மக்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதையும் நாம் அறிவோம்.

 

பௌத்த துறவிகளையும், பௌத்தர்களையும் அதிகமாகக் கொண்ட தொல்பொருளியலாளர்கள் வடகிழக்கில் இந்துக்களின் பூர்வீக வழிபாட்டு தலங்களை ஆக்கிரமித்து சிங்கள பௌத்த மயமாக்குவதை எதிர்க்காதவர், வடகிழக்கில் யுத்தக் காலத்தில் சமயத் தளங்கள் மீது போடப்பட்ட குண்டுகளால் சேதமடைந்த வணக்க தலங்கள் தொடர்பிலும், அங்கு கொல்லப்பட்டவர்கள் விடயத்திலும் வருத்தம் தெரிவித்து நீதியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்காதவர் மன்னார் திருக்கேதீஸ்வர சுரூப விடயத்தில் இந்துக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க போகிறேன் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட கபட செயலாகும்.

 

அரசியல் ரீதியாக தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகின்ற காலகட்டத்தில் தமிழர் தாயகத்தில் அக பிரச்சினையை தீர்க்க வெளி சக்திகள் அதுவும் ஞானசார தேரர் போன்ற சமய மற்றும் இன துவேஷம் கொண்டவர்கள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தோடு சமய பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக்கவும் இடமளிப்பது தமிழர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் அமைந்துவிடும்.

ஆதலால் தேசிய பிரச்சினைக்கு நீதியை தேடும் வடகிழக்கு ஆயர்கள் சமய உட்பூசல்களுக்கு இடமளிக்காது காலத்திற்கு காலம் தோன்றும் உள்ளக சமய பிரச்சனைகளை தீர்த்திட அடிமட்டத்திலும், மேல்மட்டத்திலும் கலந்துரையாடல்களை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறான சூழ்நிலை இன்மை காரணமாகவே வெளிச் சக்திகள் உள்நுளைய முயற்சிக்கின்றன. இதனை தவிர்க்கவும், சமய நல்லிணக்கத்தை உருவாக்கி தாயக அரசியல் மீட்புக்காக ஒன்றுபட்ட சக்தியாக செயல்படவும் வடகிழக்கு சமயத் தலைவர்களின் அவசர சந்திப்புக்களை மேற்கொண்டு சமய உறவையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கிட அவசரமாக செயல்படல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.