“விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டால் வேறு எந்த அமைச்சராலும் எதிர்காலத்தில் முன்னேற்றததை ஏற்படுத்த முடியாது” என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,
இலங்கை கிரிக்கெட்டினை வலுப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் நாமல்ராஜபக்சவினை அவதானித்த வண்ணமுள்ளனர்.
ஜனாதிபதியும் பிரதமரும் நாமலின் குடும்பத்தவர்கள் என தெரிவித்துள்ள, ரணதுங்க இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட்டினை முன்னேற்றகரமான நிலைக்கு நாமலால் கொண்டு செல்ல முடியாவிட்டால் வேறு எவராலும் கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி காலத்தில் கிரிக்கெட்டில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகளை தடுப்பதற்காக பலர் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஆதரவை பெற்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாமல் ராஜபக்சவிற்கு விளையாட்டை பற்றி தெரியும் என்பதாலும் அவர் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும் யாரும் தேவையற்ற விதத்தில் செல்வாக்கு செலுத்த முடியாது என ரணதுங்க தெரிவித்துள்ளார்.