அலி ஷப்ரி

அலி ஷப்ரி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுதலை – அலி சப்ரி !

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ் பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லையெனவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே உள்ளதாகவும் நீதி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குவது மற்றும் விடுதலை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரை வழங்குவது குறித்து ஆலோசனைக் குழுவொன்றை முன்னாள் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையில் அமைத்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த குழுவிற்கு 44 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விண்ணப்பங்கள் ஆராயப்பட்டதன் பின்னர் 27 பேரை விடுவிப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“லொஹான் ரத்வத்தை துப்பாக்கி முனையில் அரசியல்கைதிகளை அச்சுறுத்தியது இனவாதத்தாக்குதல் இல்லையாம்.” – நீதி அமைச்சர் அலி ஷப்ரி விளக்கம் !

இராஜங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, அனுராதபுரம் சிறைச்சாலையில் தம்மை முழந்தாழிடச் செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவமானது இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்லவென தமிழ் அரசியல் கைதிகள் புரிந்துகொண்டுள்ளதாகவும் லொஹான் ரத்வத்தை, தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை எனவும் நீதி அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் அலி ஷப்ரி, அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தொடர்புபட்ட சம்பவம் சிறைச்சாலையில் இடம்பெற்றது என்பதை யாரும் மறுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்த போது, சிறைச்சாலை அதிகாரிகளோ அல்லது வேறு தனிநபர்களோ அழுத்தங்களை பிரயோகித்தார்களா என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகளிடம் விசாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யாரும் தமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் கூறியதாகவும் நீதி அமைச்சர் அலி ஷப்ரி மேலும் கூறியுள்ளார். ஆகவே இந்த சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டிய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.