இலங்கை 1948இல் பெயரளவில் சுதந்திரம் பெற்றாலும் கல்வி, பொருளாதாரம், சிந்தனைமுறை போன்ற விடயங்களில் இன்னமும் காலனித்துவத்தின் பிடியில் இருந்து வெளிவர முயற்சிக்கவில்லை. அதற்குக் காரணம் இலங்கையில் இன்னமும் பிரித்தானியாவின் காலனித்துவக் கல்வி முறையே நடைமுறையில் உள்ளது. பொருளாதாரமும் பிரித்தானிய – அமெரிக்க நாடுகளில் தங்கியிருக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் பிணைக்கப்பட்டே கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை ஒரு பொருளாதார நெருக்கடியை சந்திக்க நிர்ப்பந்திக்கப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்தப் பொருளாதார நெருக்கடியினால் சரியான பொருளாதாரப் பாதையில் இலங்கை சென்றுவிடக்கூடாது என்பதற்காக பிரித்தானிய – அமெரிக்க நவகாலனித்துவம் போராட்டத்தைத் தூண்டிவிட்டு இன்று மீண்டும் இலங்கையை தங்களது நலனுக்கு சேவை செய்ய நிர்ப்பந்திக்கின்றது. இங்கு பதிவு செய்ய வந்தவிடயம் பொருளாதாரம் அல்ல.
செப்ரம்பர் 16, 2022 அன்று ‘மௌனமான உடைவுகள் …‘ தொடரில் சோதணைகளும் … சாதனைகளும் … வேதனைகளும் என்ற தலைப்பில் அழகு குணசீலன் மட்டக்களப்பின் கல்வி பற்றி பேசி கல்வி தொடர்பான பரந்த ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதற்கான எதிர்வினையே இது. அழகு குணசீலனின் பதிவின் சாரம்சம் இது தான்: சிறிய தொகையான மாணவர்கள் பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைக்கின்றார்கள் பெரும்பாலானவர்கள் வசதிகள், வாய்ப்புகள் இல்லாமல் தோல்வி அடைகிறார்கள். வேதனை அடைகின்றார்கள். அரசியல் வாதிகளும் கனவான்களும் சாதனைகளுக்கு மட்டுமல்ல வேதனைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டுமென்கிறார் அவர். இதற்கு ஏற்றத் தாழ்வான சமூக, பொருளாதார, அரசியல் சூழலலே காரணம் என்று மிகச் சரியாகவே அடையாளம் கண்டுள்ள அவர் சமூக நீதியைக் கோருகின்றார்.
இந்தக் காலனித்துவக் கல்விமுறை என்பதே ஏற்றத் தாழ்வான சமூக, பொருளாதார, அரசியல் சூழலை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட கல்வி முறை. இந்தக் கல்வி முறை ஒரு போதும் சமூக நீதியைக் கொண்டுவராது. இந்தக் கல்வி முறையை நீங்கள் சீர்செய்ய முடியாது. இந்தக் கல்வி முறை முற்றாகத் தகர்க்கப்பட வேண்டும். வறுமையின் பிடியில் கல்வி கற்று அமெரிக்க ஹவார்ட் பல்கலைக்கழக விரிவுரையாளரான போலோ பெரேரே இக்கல்வி முறையை ‘வங்கி வைப்பீட்டு முறைமை’க்கு ஒப்பிடுகின்றார். அதாவது ஆசிரியர்கள் மாணவர்கள் மீது தகவல்களை வைப்பிடுகின்றார்கள். திணிக்கின்றார்கள். இன்னும் விரிவாக ஆராய்ந்தால் (அரசியல்) அதிகார வர்க்கத்தினால் அதன் நலன்களுக்கு சேவை செய்யும் கல்விமுறை மாணவர்கள் மீது திணிக்கப்படுகின்றது என்கிறார் போலோ பெரேரே.
இந்தக் கல்விமுறையானது ஒடுக்குபவர்களால் ஒடுக்கப்படுபவர்கள் மீது திணிக்கப்படும் கல்வி முறையாகும். இக்கல்விமுறையானது ஒரு போதும் சமூக நீதியைக் கொண்டுவரமாட்டாது. இன்று மேற்குலகில் ஊட்ப்படுகின்ற கல்விமுறை கூட பெரும்பாலும் பெரும் கோப்ரேட் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை உருவாக்குகின்ற கல்விமுறையே. இக்கல்வி முறையில் முகாமையாளர்கள் நேர்மையானவர்களாகவும் தொழிலாளர்கள் களவாணிப்பயல்களாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர். இக்கல்விமுறை பரந்த சிந்தனையை தடுக்கின்றது. கட்டத்துக்கு வெளியே சிந்திப்பதைத் தடுக்கின்றது. ஆக்கத்திறனைத் தடுக்கின்றது. சமூகப் பார்வையைத் தடுக்கின்றது.
போலோ பெரேரே உடைய வாதத்தை ஆதரிக்கின்ற வகையிலேயே பிரித்தானிய பிரதமர்களின் தெரிவு அமைந்துள்ளது. தற்போதைய பிரித்தானிய பிரதமர் லிஸ் ரஸ்ட் வரையான 56 பிரதமர்களும் பெரும்பாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய கல்லூரிகளில்: ஈற்றின் கொலீஜ், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகங்கம் ஆகியவற்றிலேயே கல்வி கற்றுள்ளனர். பிரித்தானியாவில் இன்றும் கிரம்மர் ஸ்கூல், ஸ்ரேற் ஸ்கூல் என்ற பிரிவினை உண்டு. தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் பெரும்பாலும் உள்ள கிரம்மர் ஸ்கூலுக்கு தெரிவுப் பரீட்சை மூலம் திறமையான மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள்.
இப்பாடசாலைகளுக்கு அரசு மேலதிக சலுகைகளை வழங்குகின்றது. இம்முறைமை பிரித்தானிய கொன்சவேடிவ் அரசினுடைய கொள்கை. வசதியானவர்களை திறமையானவர்களை ஊக்குவித்து அவர்களை அதிகார மையமாக்குவது. ஸ்ரேற் ஸ்கூல் என்பது அவ்வப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்கான அரச பாடசாலைகள்.
இதே மாதிரியான கல்விமுறையை இலங்கையிலும் காணலாம். யாழ்ப்பாண இந்துக் கல்லூரி, கொழும்பு ரோயல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் கற்றவர்கள் பொதுவாக அதிகார மையங்களாக உருவாகுவார்கள். முல்லைத்தீவில் என்னதான் படித்து வந்தாலும் பருந்தாக முடியாது. இது தான் தற்போதைய கல்விக்கொள்கைக்கு பின்னால் உள்ள நோக்கம். அதாவது அவரவர் அவரவர் இடத்திரேயே இருக்க வேண்டும். ஏழை ஏழையாகவும் பணக்காரன் பணக்காரணாகவும் இருக்க வேண்டும். வளர்முக நாடு வளர்முக நாடாக கடன் கார நாடாகவே தான் இருக்க வேண்டும். பொருளாதாரப் பிரச்சினைக்கு ஐஎம்எப் மற்றும் உலக வங்கியிடம் கடன் வாங்கித்தான் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று தான் இந்தக் கல்விமுறை ஊட்டி இருக்கின்றது. அதற்கு வெளியே மாற்றீடு பற்றிச் சிந்திப்பதற்கான சிந்தனை முறை இவர்களிடம் இராது. ஒரு உள்ளங்கையில் அடங்கும் அப்பிளை வைத்து அவர்கள் ஒரு தொகை பண்டங்களைத் தயாரிக்கின்றார்களே நாங்கள் அப்பிளைப் போன்று பத்து மடங்கு பெரிய பிலாப்பழத்தை வைத்து பெரிதாக எந்தப் பண்டத்தையும் செய்வதில்லை. காலணித்துவச் சிந்தனையும் காலணித்துவக் கல்விமுறையும் அதற்கு எங்களை அனுமதிக்காது.
பிரித்தானிய – அமெரிக்க கூட்டினால் தூண்டப்பட்டு நடைபெற்ற போராட்டத்தினால் பதவி துறந்த கோட்டபாய ராஜபக்ச அரசால் இவ்வாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருந்தது. சில ஆண்டுகளாகவே பல மில்லியன்கள் செலவிடப்பட்டு, பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு பெருமளவில் பயிற்சிகளும் வழங்கப்பட்டு இருந்தது. ரணில் விகிகரமசிங்க பதவியேற்று ஒரு சில தினங்களிலேயே புதிய பாடத்திட்ட அமுலாக்கத்திற்காக உருவாக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டது. புதிய பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கும் பிரித்தானியாவின் காலனித்துவ கல்விமுறையான போட்டிப் பரீட்சையின் முக்கியத்துவத்தை மூப்பது வீதமாகக் குறைத்து மாணவர்களுக்கு நேரடியான செய்முறைத் திட்டங்கள் எழுபது வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
தற்போது நடைமுறையில் உள்ள போட்டிப் பரீட்சைமுறை மாணவர்கள் பரீட்சைகளில் சித்தியடைவதையே இலக்காகக் கொண்டுள்ளது. நடைமுறையில் தொழில்துறைகளுக்குக் கூட இக்கல்விமுறை பெரிதாக உதவவில்லை. இப்பரீட்சைகளில் மிகத்திறமையாக சித்தியடைந்த மாணவர்கள் கூட தங்களுக்கோ சமூகத்திற்கோ எவ்வித பயனும் இல்லாமல் வாழ்கின்றனர். அல்லது தற்கொலை செய்கின்றதை காண்கிறோம். இந்தக் கணணி உலகில் கூட பல மாதங்கள், ஆண்டுகள் கற்றதை மனனம் செய்து, ஞாபகத்திற்குக் கொண்டுவந்து பரீட்சை எழுதித் தான் ஒரு மாணவன் தன்னுடைய ஆளுமையை திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆயினும் இந்நடைமுறை இறுக்கமாக பின்பற்றக் காரணம் கல்வியை பலருக்கும் எட்டாக் கனியாக வைத்திருப்பதனூடாக சமூக ஏற்றத்தாழ்வுகளை தக்கவைத்து தற்போதைய சமூகக் கட்டமைப்பைப் பேணுவதே.
கடந்த அரசின் புதிய கல்வித்திட்டம் அமூல்படுத்தப்படுமானால் சுதந்திரத்திற்குப் பின் இலங்கையின் கல்விக் கொள்கையில் ஏற்பட்ட பாரிய திருப்பு முனையாக அது அமையும். போலோ பெரேரே குறிப்பிடும் விடுதலைக் கல்வி என்பதும் இது சார்ந்ததே. மாணவர்களை பிரச்சினைகளை எதிர்கொள்ள வைப்பதன் மூலம் அதற்கான தீர்வுகளைத் தேடத் தூண்டுவது. அதுவே மாணவர்களை அடிமைத் தளைகளில் இருந்து விடுதலை செய்யும் என்கின்றார்.