அஸ்வெசும நலன்புரி திட்டம்

அஸ்வெசும நலன்புரி திட்டம்

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக இதுவரை 383,232 மேன்முறையீடுகள் !

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை அரசாங்கம் கவனத்தில் எடுத்து மக்களுக்கு உரிய முறையில் நன்மைகளை வழங்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி இன்று (28) அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பல தரப்பினரும் தாக்கல் செய்திருந்தனர்.

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக இதுவரை 383,232 மேன்முறையீடுகளும் 5,045 ஆட்சேபனைகளும் பெறப்பட்டுள்ளன.

ஜூலை 10ம் திகதி வரை மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அவகாசம் உள்ளது.

இதேவேளை இலங்கையின் மலையகம் – வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளிலும் குறித்த நலன் குறித்திட்டத்தில் உள்வாங்கப்படாத மக்கள் தெருக்களில் இருந்து போராட்டங்களை மேற்கொண்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் – இரண்டு லட்சம் மேன்முறையீடுகள் – புறக்கணிக்கப்பட்ட ஏழைகள் !

‘அஸ்வெசும’ எனும் ஆறுதல் நலன்புரி திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை 190,000 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதன்படி, இதுவரை 188,794 முறையீடுகளும் 3,304 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்கு, பொது மக்கள், வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயற்படும் ‘1924’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

 

‘அஸ்வெசும’ னும் ஆறுதல் நலன்புரி திட்டத்தின் கீழ் மக்கள் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் தனிப்பட்ட முறையில் கையளிப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.

இன்று (27)  காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் அவ் வீதியுடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.