அ. டலிமா ஹலிஸ்ரா

அ. டலிமா ஹலிஸ்ரா

கடந்த வாரம் கஜேந்திரகுமார் கட்சியில் போட்டியிடுவதாக அறிவித்த வேட்பாளர் இன்று தமிழரசுக்கட்சி வேட்பாளராக மனுத்தாக்கல்- வெளியானது தமிழரசுக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் விபரம்!

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை தமிழரசுக்கட்சி தாக்கல் செய்துள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (10) மாலை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

வன்னி மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக வவுனியாவில், வைத்தியர் ப.சத்தியலிங்கம், ஆசிரியர் கா. திருமகன், சமூக செயற்ப்பாட்டாளர் தே.சிவானந்தராசா, அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.கலைதேவன் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர், து.ரவிகரன், விரிவுரையாளர் ந.ரவீந்திரகுமார், ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர் வ.கமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மன்னார் மாவட்டத்தில் சட்டத்தரணி செ.டினேசன் மற்றும் சட்டத்துறை மாணவி அ. டலிமா ஹலிஸ்ரா ஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறினேசன், மட்டு மாநகரசபை முன்னாள் முதல்வர் தியாகராசா சரவணபவன், ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர் சின்னத்துரை சர்வானந்தன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், இளைஞர் அணித் தலைவர் கிருஸ்னபிள்ளை செயோன், அருணாச்சலம் கருணாகரன், ஜெயந்தி ரவிச்சந்திரன் உட்பட எட்டு பேர் வேட்பாளராக களமிறங்குகின்றனர்.

அத்தோடு, யாழ். மாவட்டத்தில் சிவஞானம் சிறீதரன்  தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பு மனுக்களை கையளித்திருந்தது.

இதேவேளை கடந்த வாரம் தமிழ் மக்கள் முன்னணியின் சார்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார் என பெயர் குறிப்பிடப்பட்டு பதாகைகள் வெளியிடப்பட்டிருந்த சட்டத்துறை மாணவி அ. டலிமா ஹலிஸ்ரா என்பவர் இன்று தமிழரசுக்கட்சி சார்பாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. தமிழரசுக்கட்சி சார்பாக பல ஆண்டுகளாக சமூக மட்டத்தில் இயங்கி வரும் பலருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படாமல் வேறு கட்சியில் இருந்து திடீரென தமிழரசுக் கட்சுக்குள் வந்தவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.