ஆசிய அபிவிருத்தி வங்கி

ஆசிய அபிவிருத்தி வங்கி

சர்வதேச நாணய நிதியத்தை மீறி எங்களால் செயற்படமுடியாது – அரசாங்கம் திட்டவட்டம் !

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய கடன் வழங்குநர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு தினத்திற்கும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும் எந்த ஜனாதிபதி நாட்டை ஆண்டாலும் அரசாங்கத்தின் ஆயுட்காலம் இரண்டு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு விடும். தடம் புரண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்த வருடத்தில் மீள நிவர்த்தி செய்துள்ளது. பிறந்துள்ள புதிய வருடம் தீர்க்கமான ஒரு வருடமாகும்.

 

தற்போது நிலவும் பொருளாதார சவால் 2027 ஆம் ஆண்டு வரை தொடரும். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டம் 2027 ஆம் ஆண்டு நிறைவு பெறும் வரை சட்டப்படி செயற்பட்டாலே நெருக்கடியை நிவர்த்தி செய்ய முடியும்.

சர்வதேச இணக்கப்பாட்டுடனான சட்டங்கள் மற்றும் நிதி முறைமைக்கு இணங்க நாடு என்ற ரீதியில் நாம் நிதி சந்தைக்கு சென்று பிணைமுறியை விநியோகித்து கடனைக் கோரினாலும் 2027 ஆம் ஆண்டு எமக்கு 1500 மில்லியன் டொலர்களை மட்டுமே கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

2027 ஆம் ஆண்டு வரை மூன்று, நான்கு வருடங்களுக்கு இந்த சவால்கள் தொடரும்.

பெருமளவு இறக்குமதியிலேயே தங்கியுள்ள பொருளாதாரத்தை கொண்டுள்ள எமது நாடு எரிபொருள், உரம், மருந்து, இரசாயன பொருட்கள், அரிசி, மா, சீனி, கிழங்கு, வெங்காயம், பருப்பு, மிளகாய் உள்ளிட்ட நுகர்வு பொருட்கள் மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றையும் இறக்குமதி செய்தே ஆக வேண்டும்.

அவற்றை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கத்தின் கையிருப்பின் அடிப்படையில் கடன் பத்திரத்தை விநியோகிப்பது அவசியம். இந்த பொருட்களைக் கொள்வனவு செய்யாமல் இரண்டு வாரங்களையும் எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியாது.” என்றார்.

இலங்கையின் தொழில் முயற்சியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 30 பில்லியன் ரூபா நிதி !

தற்கால தலைமுறையை புதிய உலகிற்கு பொருத்தமான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.

வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில் முயற்சியாளர்களுக்காக 30 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் 2.8% தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொறுப்பு எம்மைச் சார்ந்துள்ளது. 2024 – 2028 வரையான காலப்பகுதியில் தொழில் முயற்சியாளர்களின் அளவை 10% ஆக உயர்த்துவதே எமது இலக்காகும். ஒவ்வொரு துறைகளின் கீழும் காணப்படும் சிறு மற்றும் மத்திய தரத்திலான துறைகளைப் பலப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். அதற்காக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்ளை ஒன்றிணைத்து பல வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம்.

அதேபோல் சாதாரண தர பரீட்சையின் பின்னர் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் தொழில் சந்தைக்குள் நுழைகிறார்கள். இருப்பின் அவர்களுக்கான வாய்ப்பு தொழில் சந்தையில் கிடைப்பதில்லை. அதனால் அவர்களையும் தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதே எமது நோக்கமாகும். முச்சக்கர வண்டியுடன் வீதியிலிறங்கும் சமுதாயத்தை அதிலிருந்து மீட்டெடுத்து உரிய தெரிவையும் பயிற்சிகளையும் வழங்குவதே எமது நோக்கமாகும்.

வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து சிறிய கடன் முன்மொழிவுகளின் கீழ் 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் கீழ் தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதோடு, அவர்களை புதிய உலகிற்கு பொருத்தமான தலைமுறையாக மாற்றுவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினதும் எம்முடையதும் நோக்கமாகும்.

அதேபோல், உலகச் சந்தையில் 2024-2025 ஆண்டுக்காக விடுவிக்கப்படவுள்ள 789 பில்லியனிலிருந்து 1% பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும் அது நாட்டுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாகும்” என்று தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக ஆசிய வங்கி வழங்கிய நிதியில் 1300 மில்லியன் ரூபா நிதியை திருடிய அரசாங்க அதிகாரிகள்!

பெரும்போக நெற்செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட நிதியை, வங்கியில் வைப்பிலிட போலி கணக்கு இலக்கங்களை சமர்ப்பித்த 11 அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விவசாய ஆராய்ச்சி, உற்பத்திக்கான பிரதி அதிகாரிகளும் தொழில்நுட்ப அதிகாரிகளும் அவர்களில் அடங்குவதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு குறித்த அதிகாரிகள் தவறான விவசாய கணக்கு இலக்கங்களை வழங்கியதன் காரணமாக 1300 மில்லியன் ரூபா நிதி கணக்கில் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்குவதற்காக 8000 மில்லியன் ரூபா நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது.

01 ஹெக்டேருக்கு 10,000 ரூபா, 02 ஹெக்டேருக்கு 20, 000 ரூபா வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதனூடாக 12 இலட்சம் விவசாயிகள் பயனடையவுள்ளனர்.

இலங்கையில் தொடரும் மருந்து தட்டுப்பாடு – உதவிக்கரம் நீட்டும் ஆசிய அபிவிருத்தி வங்கி !

இந்நாட்டுக்கு தற்போது தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.

அதன்படி, 21.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் கடன்களுக்கு மகிந்தராஜபக்ஷவே காரணம்.” – ஹர்ச டி சில்வா காட்டம் !

“இலங்கை இன்று செலுத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கடனுக்கும் காரணம் மகிந்தராஜபக்ஸவே.” என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தற்போதைய அரசாங்கம் வருடாந்தம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பில்லியன் டொலர் கடனும் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த சமயத்தில் பெற்றுக்கொண்டவை. சுற்றுலாத்துறை மூலம் இலங்கை  ஒருபோதும் 5 பில்லியன் டொலர்களை அந்நிய செலாவணியாக பெற்றுக்கொண்டதில்லை.

சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கப் பெறும் 5 பில்லியன் டொலர் தற்போது முற்றாக இல்லாமல் போயுள்ளதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையின் ஊடாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 5 பில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றதில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாக 4.5 பில்லியன் என்ற அதிகபட்ச அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றது. மாறாக ஏனைய வருடங்களில் சராசரியாக 2.4 பில்லியன் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாகக் கிடைக்கப் பெறும். இலங்கையின்  அந்நிய செலாவணி கிடைக்கப் பெறும் அதேவேளை இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது 1.6 பில்லியன் டொலர் செலவிடப்படுகிறது.

தற்போது சுற்றுலாத்துறை மூலமான அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான காரணம் கொவிட் தொற்று அல்ல. அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமேயாகும். கொவிட் தொற்றின் பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையில் 0.7 வீதமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளில் 4.5 வீதமளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி தடுப்பூசி கொள்வனவு உள்ளிட்ட கொவிட் செலவுகளுக்காக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்டவற்றிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றன.

கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களையே தற்போது தாம் செலுத்திக் கொண்டிருப்பதாக அரச தலைவர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. காரணம் கடந்த ஆண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2010 இல் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்ற கடனாகும். அதேபோன்று இவ்வாண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2011 இல் மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்டதாகும். இவ்வாண்டு ஜூலை மாதமளவில் பெற்றுக் கொண்ட ஒரு பில்லியனும் 2012 இல் தனது சகோதரன் பெற்றுக் கொண்ட கடன் என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும். நாடு தற்போது பாரிய அபாயத்தில் உள்ளது என்பதை அவர் உணர வேண்டும். தாம் ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்தை நாடப் போவதில்லை என்றும், அஜித் நிவாட் கப்ரால் முஸ்லிம் நாடுகளிடம் கடன் பெறுவார் என்றும் அரச தலைவர் செயலர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இங்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். அவ்வாறிருக்கையில் எவ்வாறு முஸ்லிம் நாடுகளிடமிருந்து உதவியை எதிர்பார்க்க முடியும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.