
ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலமையை மேலும் புரிந்து கொள்ளவதற்கு 1970 களில் நிலவிய பூகோள அரசியலை எமது நாடு இலங்கையுடன் இணைத்து பார்போம்…
வல்லரசுகள் ஆசியாவிற்கான நுளை வாயிலாக மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானை பாவிக்க முற்பட்ட சம காலத்தில் ஆசியாவின் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் அமெரிக்கா தனது செல்வாக்கை நிறுவ முயன்ற நிகழ்வும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அதற்கு ஏதுவாக அன்றைய ஜேஆர் இன் தேர்தல் வெற்றியும் அவரின் அமெரிக்க நலன் சார்ந்த ஆட்சியும் அமைந்தன. இதன் முக்கிய அம்சம் திறந்த பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியதும் ஆகும்.
ஜேஆர் அமெரிக்காவிற்கான செய்தித் தொடர்பு நிலையம் ஒன்றை சிலாபத்தில் அமைக்க அனுமதி வழங்க முற்பட்ட நிலையில் இதற்கு இந்தியாவின் பிரதம மந்திரி இந்திரா காந்தி தனது ஆட்சேபனையை தெரிவித்தார். இதனையும் மீறி இலங்கையில் அமெரிக்காவின் பிரசன்னத்திற்கு பச்சை கொடி காட்டிய ஜேஆர் இற்கு பாடம் கற்பிக்க முயன்றார் இந்திரா காந்தி.
சோசலிச சோவியத் முகாமுடன் நெருங்கிய உறவை கொண்டிருந்த இந்திரா காந்தியின் செயற்பாடுகளை ‘இந்திரா காந்தியின் சோசலிச செயற்பாடுகள்” என்று பேசும் அளவிற்கு நிலமைகள் இருந்தன அன்று. அந்த அளவிற்கு சோவித்த யூனியனுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கமும் பரஸ்பர இராணுவ பொருளாதார பரிமாற்றங்களும் இருந்தன. இந்தியாவை மீறி இலங்கை விடயத்தில் யாரும் தலையிடுவதை அனுமதிக்காத செல்வாக்கு பலமும் அன்று இந்தியாவிடம் இருந்தது.
இலங்கையில் இன ஒடுக்கு முறையிற்கு உள்ளாகியிருந்த சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுதல் என்ற முடிவிற்குள் தம்மை தகவமைத்து செயற்பாட்டை தொடங்கியிருந்து 1970 களின் பிற்கூற்று நிலமைகளை இந்திரா காந்தி ஜேஆருக்கு பாடம் கற்பிப்பதற்கு தனக்கு சாதகமாக பாவிக்க முற்பட்டார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்றவைதான் ஈழவிடுதலை அமைப்புகளுக்கான ஆதரவும் இந்தியாவின் பயிற்சிகளும் ஆகும்.
சற்று ஆழமாக பார்த்தால் புரியும் ஆசியாவிற்கு தமது காலடியை வைக்க மத்திய ஆசியா ஊடாக ஆப்கானிஸ்தானிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையையும் அமெரிக்கா, சோவியத் யூனியன் என்ற இரு முரண்பட்ட முகாங்களின் வல்லரசுகளும் முனைந்ததன் வெளிப்பாடுகள் 1970 களின் நடுப்பகுதியில் கரு கொண்டிருந்தன. அதற்கான செயற்பாடுகள் இவ்விரு நாடுகளிலும் நடைபெற்றன.
சோவியத் யூனியன் இலங்கையை தனது நட்பு நாடான இந்தியா ஊடாகவும் ஆப்கானிஸ்தானை தனது எல்லை நாடாகவும் பாவித்தது. அமெரிக்கா இலங்கையை தனது வலதுசாரிக் கூட்டாளி ஜேஆர் ஊடாகவும் ஆப்கானிஸ்தானை தனது இராணுவக் கூட்டாளி பாகிஸ்தான் ஊடாகவும் கையாண்டன.
இந்தியாவுடனான பகையை கடன் தீர்க்க பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் முஸ்லீம் அடிப்படைவாத தீவிரவாதத்தை தனக்கு சாதமாக அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் பாவித்தது. கூடவே அமெரிக்காவும் இந்திய சோவியத் நட்பிற்கு பாடம் கற்பிக்க இதனையே பயன்படுத்தியது.
இதன் வெளிபாடுகளும் அமெரிக்காவின் சோவியத்திற்கும் சோசலிசத்திற்கும் எதிரான செயற்பாடுகளை செயற்படுத்த ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லாவின் அரசை அழிக்க உருவாக்கப்பட்டவைதான் ஆப்கானிஸ்தான் முஹாஜிதீன்களும் அதனைத் தொடர்ந்து உருமாற்றம் அடைந்த தலிபான்களும் ஆகும். இதற்கான முழுப் பொறுப்பும் அமெரிக்கா அதன் கூட்டாளி நாடுகள் நேட்டோவையும் சாரும். இந்த சர்வ தேச பின்னணியின் அடிப்படையிலேயே ஆப்கானின் பிரச்சனையை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஈழவிடுதலை அமைப்புகளில் ஒரு பிரிவினர் இடதுசாரிக் கருத்தியலை தமது அடிநாதமாக கொண்ட செயற்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு கரம் கொடுப்பது போன்று தனது சொல் கேளாத அமெரிக்காவின் பிரசன்னத்தை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உருவாக முயன்ற இலங்கை அரசிற்கு பாடம் புகட்ட ஆயுதப் பயிற்சியும் ஆதரவும் வழங்கிய நிகழ்வுகளைப் போல் 1970 களின் பிற்பகுதியில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றன.
ஆப்கானிஸ்தானில் முழு ஆப்கானித்தானும் முஸ்லீம்கள் என்ற அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி போராட்டத்தை தகவமைத்தாக பொது பார்வையில் பார்க்கப்பட்டாலும் இங்கும் பஷ்தூன் மக்களின் பெருபான்மை நலன்களை முன்னிறுத்திய போராட்டமாக அது இன்றுவரை பெரும்பாலும் கருக்கொண்டு செயற்பட்டு வருவது கவனத்தில் எடுகப்பட வேண்டிய விடயம்.
பாகிஸ்தான் மதராசா பள்ளியில் கற்ற மாணவர்களின் பிரசன்னம் அதிகம் உள்ள தலிபான்களின் அடிநாதமாக விளங்குவதும் இதுதான். அதுதான் தலிபான்களைத் தவிர்த்து வேறு விடுதலை அமைப்புக்களும் உருவாகி செயற்படுவதற்கான காரணமும் ஆகும்.
இலங்கையில் பெரும்பான்மை பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான சிறுபான்மை மக்களின் போராட்டமாக ஈழவிடுதலைப் போராட்டம் கருக் கொண்டிருந்தது. இங்கு பிரிவினைவாதம் முன் நிறுதப்பட்டதால் தனி நாடு என்று கோரிக்கை சார்ந்த போராட்டம் ஒரளவிற்கு மேல் சோவியத் இந்திய ஆதரவுச் செயற்பாடுகள் க(ம)ட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தன.
1970 களில் தாம் சீனச் சார்பான இடதுசாரிக் கருத்தியலாளர்கள் என்ற வடிவத்தில் தமிழ் பேசும் மக்களை இணைத்துக் கொள்ளாமல் முழு இலங்கையிற்குமான புரட்சி என்று போதுமான அளவு தயாரிப்புகளில் ஈடுபடாத ஜேவிபின் இலங்கையின் அரசை கைப்பற்றும் புரட்சி இந்திய இராணுவத்தின் உதவியுடன் தோற்கடிக்கப்பட்டதன் பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் பேசும் மக்களையும் இணைத்துக் கொண்டு போதிய தயாரிப்புகளுடன் சோவியத் சார்பு நிலைப்பாட்டுடன் புரட்சி ஒன்றை இலங்கையில் நடாத்தியிருந்தால்…. ஜேவிபின் இலங்கை அரசைக் கைப்பற்றுதல் வெற்றி பெற்றிருக்குமோ என்ற கருதுகோளை புறந்தள்ள முடியவில்லை.
அன்றை அமெரிக்க சோவியத் இந்தியா சீனாவின் அரசியல் ஒழுங்குகள் இதற்கான வாய்புக்களை அதிகம் கொண்டிருந்தன.
இங்கு ஜேவிபி பிழையான தந்திரோபாய அடிப்படையிலும் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்து ஆனால் கிட்டத்தட்ட சம காலத்தில் ஆப்கானிஸ்தானில் ஆப்கானிய கம்யூனிஸ்ட்களின் மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றியும் இடதுசாரி ஆட்சியும் அமைந்ததற்கான வாய்புகளையும் நாம் இவ்வாறுதான் இலங்கை நிலமையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
இந்த சமாகால பூகோள, பிராந்திய, ஆசிய, இந்து சமுத்திரச் சூழலை அடிப்படையாக கொண்டுதான் ஆப்கானிஸ்தான் வரலாறு. நஜிபுல்லாவின் கொலையும் அதனைத் தொடர்ந்த உள்ள நாட்டுப் போரின் இறுதியில்தான் 1996 ல் தலிபான்களின் முதல் தவணை ஆட்சி ஆப்கானில் உருவானது.
இது முஹாஜீதீன்கள் பஷ்தூன்களை பெருபான்மையாக கொண்ட பழங்குடி மக்கள் பாகிஸ்தான் மதராசில் கல்வி கற்ற மாணவர்களை கொண்டு உருவானவர்களால் தலிபான என்ற அமைப்புதான் அது. இதற்கான தலமைப் பொறுப்பை முஹாஜீதின் தலமைப் பொறுப்பில் இருந்த முகமது உமர் நியமிக்கப்பட்டார்.
இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை அடி நாதமாக கொண்டு உருவான அரசு பல வகையிலும் அந்த மக்களுக்கான சரியான ஆட்சியை வழங்கவில்லை. ஆப்கானிஸ்தானில் வாழும் பலவேறு இனக்குழுக்ளை ஒருங்கிணைத்து சமமாக கையாளுதல் ஆண் பெண் சத்துவம் குறிப்பாக பெண்களுக்கான கல்வி உரிமை உட்பட்ட சகலதையும் மறுத்த நிலமை ஆட்சியில் கோலோச்சியது.
போதை பொருட்களை உலக சந்தையில் அதிகம் ஊக்கிவித்த உற்பத்திச் செயற்பாடுகள்… பாகிஸ்தானின் இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாத்தை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்…. இதில் அனேகம் அமெரிக்காவின் வேண்டுதலை பாகிஸ்தான் ஊடாக செயற்படுத்தியவை அடங்கும இந்தியா மீதான இஸ்லாமிய மத அடிப்படைவாதத் தாக்குதல்கள் என்று பலதையும் செயற்படுத்தும் ஒரு தளமாக ஆப்கானிஸ்தானும் அதன் தலிபான் அரசும் செயற்பட்டன.
மாறாக பல வருடங்களாக யுத்தம், வல்லரசுகளினால் உருவான ஸ்திரமற்ற அரசு என்று சின்னா பின்னப்பட்டுப் போன நாட்டை கட்டியமைக்க அவர்களால் முடியவில்லை. கூடவே அவர்களுக்கு நேரடி ஆதரவுக்கரமான பாகிஸ்தானின் விருப்பமும் அதுவாக இருக்கவில்லை.
மதத் தீவிரவாதத்தின் தீவிரவாதிகளின் முகாங்களை அமைக்க உதவும் ஒரு நிலமாக மலைப் பிரதேசமாக அதிகம் ஆப்கானிஸ்தான் பாவிக்கப்பட்டது.
ஒரு ஜனநாயக முற்போக்கு மக்கள் நலன்சார்ந்த அரசை செயற்பாட்டை தலிபான்கள் முன்னெடுக்கவில்லை. இதனை மாற்றயமைக்கும் வல்லமையும் மக்களிடம் இருக்கவில்லை. தலிபான்களுக்கு எதிராக செயற்பட்ட ஏனைய சிறுபான்மை மக்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்திய வடக்கு கூட்டணியும் இதனை செய்து முடிக்க முடியவில்லை.
இந்நிலையில் 9/11 என்று அறியப்பட்ட அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலும் இதனைச் செயற்படுத்தியதாக உரிமை கோரிய அல்கைதாவின் இருப்பிடம் ஆப்கானிஸ்தான் என்றும் அமெரிக்காவினால் கூறப்பட்டு பின் லாடனை தம்மிடம் ஒப்படைக்குமாறு தலிபான்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு பின்னால் வளங்களை திருடுவதற்கான சந்தர்பங்களைப் பார்த்திருந்தி அமெரிக்க அரேபிய எண்ணையும் ஆப்கானிஸ்தான் மலைகளில் செறிந்திருக்கும் 7 ட்ரிலியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலான வளங்களையும் திருடுவதற்கு இரட்டைக் கோபுரத் தாக்குதலின் சூத்திரதாரி ஒசமா பின் லாடன் ஆப்கானிஸ்தரின் மறைந்திருப்பதாக கூறிக் கொண்ட ஆப்கானிஸ்தானிலும்… அபாயகரமாக இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கின்றார், சதாம் குசைன் என்று ஈராக் மீதும் படையெடுத்து.
இத்தனைக்கு வரலாற்றுப் போக்கில் ஒசமா பின் லாடன் சவூதியரேபிய பிரஜை மேலும் அவர் கொல்லப்பட்டது அமெரிக்காவின் உற்ற இராணுவத் தோழன் பாகிஸ்தானில். இவ்விரு நாடுகளுடனும் இன்று வரை அமெரிக்கா நல்ல நண்பன் என்ற உறவிலேயே இருக்கின்றது என்பது வேடிக்கையான விடயம். மனித குலம் அமெரிக்காவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டியது இந்தக் குற்றங்களின் அடிப்படையில் என்பதுதான் இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம்.
என்னென்ன காரணங்களுக்காக அமெரிக்கா தனது படைகளை அனுப்பி ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் லிபியாவை கைபற்றியேதா அவை ஏதும் உண்மை இல்லை என்றாகிவிட்ட நிலையில் ஐ.நா.வின் மனித உரிமை சபையில் இந்த குற்றங்களை புரிந்தமையிற்காக அமெரிக்க ஐரோப்பிய நேட்டோ கூட்டமைப்பை நிறுத்தப் போவது யார்…?
இவ்வாறான பூகோள அரசியல் நிலமையில் இலங்கை மக்கள் சிறப்பாக தமிழ் பேசும் மக்கள் தமக்கான அரசியல் தீர்வை இதே அமெரிக்கா அதன் நட்பு சக்திகள் பெற்றுக் கொடுக்கும் என்று இலவுகாத்தி கிளியாக இருப்பது ஆப்கானிஸ்தான் பாடங்களை நாம் புரியாதவர்கள் என்றே ஆகிவிடும்.
மிகுதி அடுத்த பதிவில்…..