ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

வடமாகாண சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்தல் தொடர்பில் சந்திப்பு !

வட மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே (Dr.Satvanjal Pandey) உள்ளிட்ட குழுவினர் வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இயற்கை வளங்களை பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்ளல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

“மக்களின் வரிப்பணத்தில் மாதாந்தம் சம்பளம் பெறும் அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல.” – ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.

 

வடக்கு மாகாண ஆளுநரால் கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இணையதளங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.

 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் புதிய இணையதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, உள்ளுராட்சி ஆணையாளர் எஸ். பிரணவநாதன், உதவி ஆணையாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

இணையதள வடிவமைப்பில் ஈடுபட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகஸ்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

 

இதன்போது உரையாற்றிய ஆளுநர்,

உள்ளூராட்சி நிறுவனங்கள் தங்களுக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்க வேண்டும்.

 

உள்ளூரில் காணப்படும் வளங்களை கொண்டு தங்களுக்கான வருமானங்களை உள்ளூராட்சி நிறுவனங்கள் திரட்டிக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

தற்போது உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ள நிலையில், தங்களின் தேவைகளுக்கு போதுமான நிதியை அந்தந்த சபைகளே திரட்டுதல் வேண்டும். இதேவேளை மக்களுடன் சிநேகமான முறையில் தங்களின் சேவைகளை வழங்க வேண்டும்

 

மக்களின் வரிப்பணத்தில் மாதாந்தம் சம்பளம் பெறும் அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல எனவும், மக்களுக்கான சேவகர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் வீடற்ற 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் – ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் வடமாகாணத்தில் வீடற்ற 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பில் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் நலன் பெறும் விதமாகவே இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் குறைந்த வருமானம் கொண்ட நிரந்தர வீடற்ற குடும்பங்களை இனங்கண்டு வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் நி”ரந்தர வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் 5 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாகவும், வீடொன்றுக்கு தேவையான வசதிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இவ்வீடுகளின் கூரைகளைப் பயன்படுத்தி சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தைப் பெறுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுமொனவும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.