ஹாங்காங், உய்குர் இன முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட விவகாரங்களில் சீனா மற்றும் இங்கிலாந்து இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில் சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற இங்கிலாந்தை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளரை போலீசார் அடித்து, உதைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இங்கிலாந்தின் பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற ரிஷி சுனக் முதல் முறையாக தனது வெளியுறவு கொள்கை குறித்து நேற்று உரையாற்றினார். அப்போது சீனாவுடான இங்கிலாந்தின் உறவு குறித்து அவர் கூறும்போது,
“முன்னாள் பிரதம மந்திரி டேவிட் கேமரூனால் ஏற்படுத்தப்பட்ட இங்கிலாந்து-சீனா உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது. வணிகம் தானாகவே இரு நாடுகளுக்கிடையே சமூக, அரசியல் சீர்திருத்தத்துக்கு வழிவகுக்கும். எங்கள் மதிப்புகள், நலன்களுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருக்கிறது. உலகளாவிய பொருளாதார உறுதித்தன்மை, பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் வெறுமனே புறக்கணிக்க முடியாது. ஆனால், இது இன்னும் பெரிய சர்வாதிகாரத்தை நோக்கி நகரும்போது இன்னும் தீவிரமாக வளரும். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல நாடுகள் இதை புரிந்துகொண்டிருக்கின்றன. சீனா உள்நாட்டு மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு முதல் அச்சுறுத்தல்” என கூறினார்.