இந்தியா-இலங்கை

இந்தியா-இலங்கை

இலங்கையை அதிகார போட்டிக்குள் நுழைத்து இன்னுமொரு உக்ரைனாக மாற்ற நாம் தயாரில்லை – இந்தியாவிடம் ஜே.வி.பி !

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பூகோள அரசியல் போட்டிக்கு மத்தியில் மற்றுமொரு உக்ரைனாக மாறுவதற்கு இலங்கை தயாரில்லை என்ற விடயத்தை இந்தியாவிடம் நாம் தெரிவித்துள்ளோம் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

இராஜதந்திர தொடர்பு என்பது மெஜிக் கிடையாது.அது எமக்கு நன்கு தெரியும். வடகொரியா, கியூபா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் மட்டும்தான் எமது தொடர்பு இருக்கும் என சிலர் கூறுகின்றனர்.

இலங்கையை வடகொரியாவாக்குவதற்கு முற்படுகின்றனர் எனவும் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இது தவறு. உலகம் இன்று மாறியுள்ளது.

 

உலக பூகோள அரசியலும் மாறியுள்ளது. நாம் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா , ஜப்பான் உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் கொடுக்கல் – வாங்கல்களிலும் ஈடுபடுவோம். அதற்கான உறவு கட்டியெழுப்பட்டுள்ளது.

 

இலங்கை சீனாவிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளது, அதற்கு அடுத்தப்படியாக இந்தியாவிடம் கடன் வாங்கப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளனர்.

ஐஎம்எவ் என்பது அமெரிக்காதான். இவ்வாறு கடன்வாங்கியுள்ளதால்தான் நாடு இறுதியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, சீனா என்பன உலக அதிகார அரசியலில் ஈடுபடுகின்றன.

அந்த போட்டியில் எமது நாடு சிக்ககூடாது. நாம் இந்தியா சென்றிருந்தவேளை, நாம் மற்றுமொரு உக்ரைனாக மாறுவதற்கு தயாரில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தோம்.

 

பிராந்திய பாதுகாப்பு சார்ந்த விடயத்தின்போது சரியான இடத்தில் நாம் நிற்போம். அவர் அதனை ஏற்றுக்கொண்டார் என்றார்.

இந்திய மத்திய அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் – இலங்கைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு !

இந்திய மத்திய அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் இலங்கைக்கு கடந்த ஆண்டைவிட குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவு திட்டத்தில் பூடான், மாலத்தீவுகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்த போதும் இலங்கைக்கு 150 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர நேபாளம், மியன்மார், மங்கோலியா, மொரிஷியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு குறைந்தளவில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து தொடர்ச்சியாக 2 வது தடவையாக 200 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூறு போட்டு அதானி குழுமத்துக்கு விற்கப்படும் இலங்கையின் வடபகுதி – மீனவ சங்கம் விசனம் !

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வட பகுதியை இந்திய அரசு அபிவிருத்தி செய்வதாககூறி வடபகுதியை இந்திய அரசிற்கு விற்கப் போகிறார்கள் என மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர் மொகமட் ஆலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நாட்டில் காணப்படுகின்ற அரசியல் நிலை இதற்கு அப்பால் எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் மீனவர்களுக்கு கிடைக்காமை தொடர்பான பிரச்சனை,  இதேபோல் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட – அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சாரம் மற்றும் அதற்கு அப்பால் அதானி குரூப் எடுத்துள்ள காற்றாலை மின்சாரத் திட்டம் மற்றும் ஏனைய விடயங்கள் அத்தோடு கனியவள மண் அகழ்வு,  அதனோடு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சமகாலத்தில் சட்டவிரோதமாக செய்யப்படுகின்ற மீன்பிடி முறைகள் , வடக்கில் உள்ள மீனவ அமைப்புகளை புதுப்பித்தல் போன்ற பல விடயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம்.

கடந்த வியாழக்கிழமை ஒரு இந்தியன் குழு ஒன்று மன்னார் மாவட்டத்தில் அதானி குரூப் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து சென்றிருக்கின்றது.
தற்போது இலங்கைக்கு இந்தியாவின் எரிபொருள் விநியோகம் வழங்கப்படாது ஆனால் இந்தியா தற்போதைய நிலையில் எமக்கு உரிய உதவிகளை வழங்கத் தயாரில்லை. ஆனால் வடபகுதியில் வளங்களை பாவிப்போம் என்பது அவர்களுடைய குறிக்கோளாகக் காணப்படுகிறது.

ஆனால் தற்பொழுது இலங்கையில் உள்ள வளங்களை சரியாக பயன்படுத்த இலங்கை அரசுக்கு தெரியவில்லை. காலத்துக்கு ஏற்றவாறு எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு எடுக்கப்படாமையினால் நாடு வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டடிருக்கிறது.

இந்த அரசாங்கம் நாட்டினை கூறு போட்டு ஒவ்வொரு பகுதியாக விற்றிருக்கின்றது. அதானி என்பவர் இந்தியாவில் பாரியபணம் படைத்த ஒரு பெரிய தொழிலதிபர். அங்கே அவருக்கு நிறைய பிரச்சனைகள் அதாவது அவரால் முன்னெடுக்கப்பட இருக்கின்ற துறைமுக நகரங்கள் கூட ஒரு பிரச்சனையாக காணப்படுகிறது. அவரைக் கொண்டு வந்து வடபகுதியை விற்க போகின்றார்கள். நிச்சயமாக தற்போதுள்ள சூழ்நிலையில் வடபகுதியினை அபிவிருத்தி செய்வதாக கூறி திட்டங்களை நடைமுறைப்படுத்திஇந்தியாவுக்கு வடபகுதியினைவிற்க போகின்றார்கள்” என்றார்.

 

“இலங்கை தமிழர் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை– கருத்தை நாம் வரவேற்கின்றோம்.” எம்.ஏ.சுமந்திரன் 

“இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜெனிவா மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை – கருத்தை நாம் வரவேற்கின்றோம். நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று மாத்தளை நகரிலும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலும் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் எந்த விதத்திலும் போதாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்னேற்றகரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற இலங்கை தொடர்பான கலந்துரையாடலில் பல நாடுகள் கருத்துக்களை முன்வைத்துள்ளன. இதனை நாம் வரவேற்கின்றோம்.

அதேபோல் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என இம்மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டம் போதும் என இந்தியா ஏற்கவில்லை. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அந்நாடு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டை – கருத்தை நாம் வரவேற்கின்றோம். நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவம் வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்” – என்றார்.

“தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியா எந்த அழுத்தமும் தரவில்லை.” – ஜீ.எல்.பீரிஸ்

“தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியாவிடம் இருந்து எவ்வித அழுத்தமும் பிரயோகிகக்கப்படவில்லை.” என  இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சீனாவுடனான  உறவு குறித்தும் இந்திய ஊடகங்களிற்கு ஜி.எல்.பீரிஸ் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நல்லிணக்கம் மற்றும் வடக்கு, கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு ஆகிய விடயங்கள் தொடர்பாக சிங்கள பெரும்பான்மையினரிடமிருந்து போதுமான ஒருமித்த கருத்து எட்டப்படாவிட்டால் எந்த முடிவையும் செயற்படுத்த முடியாது.

மேலும் புதிய அரசியலமைப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவொன்று இரண்டு மாதங்களுக்குள்  அரச தலைவரிடம் வரைவை சமர்ப்பிக்கும் என தெரிவித்த அவர்,  நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சீனாவுடனான  உறவு குறித்தும் இந்திய ஊடகத்திற்கு  கருத்து வெளியிட்டிருந்தார். குறிப்பாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கும் பணம் என்பன குறைந்தமை காரணமாக நிதி அழுத்தத்திற்கு முகம் கொடுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இரு நாடுகளுக்கிடையிலான மின்சார இணைப்பு மற்றும் கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி குறித்தும் பேசப்பட்டதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் கிடைக்குமாக இருந்தால் அது பாரியளவில் நன்மை பயக்கும் என்றும் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி இரண்டு, மூன்று மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியாவிடம் இருந்து எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் அதில் அதிகாரப் பகிர்வு குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

“இந்தியப்பிரதமரிடம் தேர்தலை நடத்துங்கள் என்று தமிழ் கட்சிகள் கோருவதில் நியாயம் இல்லை.” – சிவஞானம் சிறீதரன்

“இந்திய பிரதமரிடம் தேர்தலை நடத்துங்கள் என்று கட்சிகள் கோருவதில் நியாயம் இல்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

மேலும் யார் பெரியவர் யார் சிறியவர் என்ற ஏற்றத் தாழ்வு பிரச்சினை காரணமாகவே அமெரிக்காவுக்கு ஒரு தரப்பு செல்ல இன்னொரு தரப்பு 13 அமுல்படுத்துங்கள் என்று சொல்லி விடுதிகளில் கூட்டங்களை நடத்துகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 இலங்கை வந்திருந்த பாரதப் பிரதமர் என்னுடைய 13 வருட முதலமைச்சர் கால அனுபவத்தில் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு கூட்டு சமஸ்டி முறையே பொருத்தமானதென இலங்கை நாடாளுமன்றத்தில் தெளிவாக ஒரு கருத்தைச் சொன்னார். அவ்வாறு கூறுபவரிடம் 13ஆம் திருத்தத்தை அமல்படுத்த கோரி நாம் கடிதம் எழுதுவது எந்தளவு தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

யார் பெரியவர் – யார் சிறியவர் என்ற ஏற்றத் தாழ்வு பிரச்சினை காரணமாகவே அமெரிக்காவுக்கு ஒரு தரப்பு செல்ல இன்னொரு தரப்பு 13 அமுல்படுத்துங்கள் என்று சொல்லி விடுதிகளில் கூட்டங்களை நடத்துகிறார்கள். இதன்போது முஸ்லிம் தரப்புகள் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த சகோதரர்களும் இணைந்துள்ளனர்.

முஸ்லிம்களின் அபிலாஷைகள் வித்தியாசமானது. அதேபோல மலையக தமிழர்களது அபிலாஷைகள் வித்தியாசமானது. வடகிழக்கில் வாழ்கின்ற தமிழர்களது அரசியல் அபிலாசைகள் வித்தியாசமானது. ஒரு வாரத்துக்கு முன்னர் ஒரு வரைவு தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு வாரத்துக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வரைபை ஏற்றுக் கொள்கிறோம். இது தொடர்பாக நேற்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சியினுடைய உயர்மட்டக்குழு கூட்டத்தில் அது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.

இரண்டாவது வரைபு பற்றியும் இதன்போது விளக்கம் அளிக்கப்பட்டது. முதலாவது வரைபில் உள்ள பல விடயங்கள் இல்லாமலாக்கப்பட்டு வெறும் கண்துடைப்புக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று கூறுவதாக அந்த வரைவு காணப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழு ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை எட்டுவதற்கு சமஸ்டியையே முன்வைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

நாங்கள் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என கூறவில்லை. அதேபோல நாங்கள் மாகாண சபை தேர்தலை நடத்தவும் கூறத் தேவையில்லை. தேர்தல் சட்டங்களின் படி நடத்தியிருக்க வேண்டும். இந்திய பிரதமரிடம் தேர்தலை நடத்துங்கள் என்று கட்சிகள் கோருவதில் நியாயம் இல்லை. அதை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.

வெளியில் ஓர் மாயை உண்டு அதாவது ரெலோ கொண்டு வந்த நல்ல விடயத்தை தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பதாக எண்ணுகின்றனர் அது தவறு.

இந்தியாவின் கொல்லைப்புறம் வரையில் இன்னுமோர் நாடு வந்த பின்பும் அயல் நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என இந்தியா தொடர்ந்தும் கூறப்போகின்றதா…? என்பதனை இந்தியாதான் சிந்திக்க வேண்டும் என்றார்.

“மன்னார் எண்ணெய் வளத்தை இந்தியாவிடம் கொடுங்கள்.” – செல்வம் அடைக்கலநாதன் அரசிடம் கோரிக்கை !

மன்னாரில் காணப்படுகின்ற எண்ணெய் வளத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான டெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் எண்ணெய் வளம் இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இந்த பிரதேசத்தை இந்தியாவிற்கு வழங்கி அதன் அனுகூலத்தை எமது மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இலங்கையின் நடனக்கலைஞருக்கு இந்தியாவின் பத்மஸ்ரீ விருது !

இலங்கையின் நடனக் கலையைச் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற முன்னணி நடனக் கலைஞரான தேசபந்து கலாநிதி வஜிரா சித்திரசேனவுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.கோபால் பாக்லேவினால் அலரிமாளிகையில் வைத்து இன்று (17) இந்த விருது வழங்கப்பட்டது.

வருடந்தோறும் இந்திய குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, 2020ஆம் ஆண்டிற்காக கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக கலாநிதி வஜிரா சித்திரசேனவுக்கு வழங்கப்பட்டது.

இலங்கையில் ஹிந்தி மொழியைப் பிரபலப்படுத்தி இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் வைத்துக் கடந்த 8ஆம் திகதியன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தினால் வழங்கப்பட்ட இவ்விருதை, பேராசிரியர் இந்திரா தசநாயக்க சார்பில் அவரது மகள் வத்சலா தசநாயக்க பெற்றுக்கொண்டார்.

கலாநிதி பண்டித் டப்ளிவ்.ஏ.அமரதேவ 2002 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இந்தியா இலங்கையை அச்சுறுத்தமுடியாது” – அமைச்சர் மகிந்த அமரவீர

“இந்தியா இலங்கையை அச்சுறுத்தமுடியாது” என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாரதிய ஜனநாயக கட்சி இலங்கையில் தனது கட்சியை உருவாக்க முயல்வது குறித்து அண்மையில் கருத்துகள் அதிகம் வெளியான நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவுசெய்தனர் . இன்னொரு நாட்டின் சுதந்திரத்தில் மற்றுமொரு நாடு செல்வாக்குசெலுத்துவதை அரசாங்கம் எதிர்க்கின்றது .
இலங்கை ஒரு ஜனநாயக சுதந்திர அணிசேரா நாடு என தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கை எந்த நாட்டுடனும் பிரச்சினையை உருவாக்க விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பல அரசியல் நிகழ்ச்சி நிரல்களுடனேயே இந்த கருத்துக்கள் வெளியாகியிருக்கவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.