இந்தியா – கனடா

இந்தியா – கனடா

இந்தியாவிலிருந்து தனது தூதரக அதிகாரிகளை மீளப்பெற்றது கனடா !

காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் சர்ச்சை நீடிக்கும் நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுவிட்டது. இந்தியா விதித்த கெடு முடிவடைந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில்,

“தங்கள் நாட்டில் உள்ள எங்களின் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு வெளியேற்றப்படாத அதிகாரிகளின் பொறுப்புகள் நீக்கப்படும் என்றும் ஒருதலைபட்சமாக இந்தியா கூறியிருந்தது. இந்த முடிவு உரிய காரணம் இல்லாதது, முன்னெப்போதும் நிகழ்ந்திராதது, தூதரக அதிகார உறவுகள் குறித்த வியன்னா மாநாட்டு ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். தூதரக அதிகார விவகாரங்களின் விதிகளை உடைக்க நாம் அனுமதித்தால், இந்த கிரகத்தில் எந்த ஓர் இடத்திலும் எந்த தூதரக அதிகாரியும் பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்த காரணத்துக்காக நாங்கள் இந்தியாவுக்கு எந்த பதிலடியும் கொடுக்கப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடனாவின் 41 தூதரக அதிகாரிகளும், 42 உதவியாளர்களும் பணியாற்றி வந்த நிலையில், அவர்கள் அனைவருமே திரும்ப பெறப்பட்டுள்ளனர்.

 

இந்தியா – கனடா மோதல் எதிரொலி – இடைநிறுத்தப்பட்ட விசா சேவை !

இந்திய கனடா மோதலையடுத்து கனேடிய பிரஜைகளுக்கான விசா சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசாங்கத்திற்கு சம்பந்தம் இருப்பதாக கனடா அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

 

இதற்கு இந்திய அரசாங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன், சமீபத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கனடாவுக்கு செல்லும் இந்தியர்கள் மற்றும் அங்கு வாழும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியா தெரிவித்தது.

ஆனால் இந்தியாவின் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த கனடா பொது பாதுகாப்பு அமைச்சர், கனடா ஒரு பாதுகாப்பான நாடு என்று தெரிவித்தார்.

 

இந்நிலையில், கனேடிய நாட்டு மக்களுக்கான விசா சேவையை இந்தியா தற்காலிகமாக அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கு இடையே இராஜங்க மோதல் அதிகரித்து வரும் நிலையில் செயல்பாட்டு காரணங்களுக்காக விசா சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.