“சீனர்களின் செல்வாக்கை வடக்கு கிழக்கில் நாம் விரும்பவில்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கே அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
இங்கே சிலர் கேட்கின்றனர் சீனாவை ஏன் எமக்கு ஆதரவாக சேர்க்க கூடாது என்கின்றனர். இதற்கு நான் பகிரங்கமாகவே கூறுகின்றேன் சீனர்களின் செல்வாக்கை வடக்கு கிழக்கில் நாம் இரு காரணங்களிற்காக விரும்பவில்லை. அதில் ஒன்று எமது அரசியல் விடிவிற்காக நாம் செய்யும் போராட்டம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைக் கோட்பாட்டில் தங்கியுள்ளது. இது இரண்டுமே சீனாவிற்கு தெரியாது என்பதாகும்.
இரண்டாவது விடயம் இலங்கை தென் சீனக் கடலில் தீவாக இருந்திருந்தால் சீனாவின் கடலில் இருந்திருந்தால் அதனை அந்த பிராந்தியத்தின் நியாயமான கரிசணையாக அது இருந்திருக்கும். ஆனால் இலங்கை இந்தியாவின் அருகில் உள்ள ஓர் தீவு. இந்தியாவின் நியாயமான பாதுகாப்பு கரிசணையை நாம் உள் வாங்கியிருக்கின்றோம். அதுவும் இந்தியாவிற்கு மிக அண்மையில் உள்ள பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை நாம் விரும்பவில்லை. ஏனெனில் சீனா இந்தியாவின் நட்பு நாடு அல்ல.
இதைச் சொல்லித்தான் சீனர்களின் இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தில் மிகவும் கரிசணை கொண்டுள்ள அமெரிக்காவுடனும் பேசினோம், இந்தியாவுடனும் பேசினோம். அதாவது உலக வல்லரசும், பிராந்திய வல்லரசும் இதனை விரும்பவில்லை. இதன்போதே வடக்கு கிழக்கில் சீனா நிலைகொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இரு நாட்டிடமும் உண்டு. அதற்கு நாங்கள் கேட்கின்றோம் அந்த இடத்தில் இருப்பது நாங்கள் எனவே சட்ட அதிகாரம் எங்களிடம் இருந்தால், அது நாங்கள் கேட்கும் வடிவில் கொடுக்கப்படுமாக இருந்தால் எங்கள் நிலம் மீதான சட்ட அதிகாரம் எங்கள் கைகளில் இருக்குமானால் நீங்கள் அந்தப் பயத்தைகொள்ளத் தேவையில்லை என்கின்றோம்.
சட்டம், ஒழுங்கு எங்களுடைய கையில் இருக்குமானால் இவை தொடர்பில் அவர்கள் பயம்கொள்ளத் தேவையில்லை என்றோம். அநேகமாக எல்லா நாடும் தமது நலனிலேயே செயல்படுவார்கள் அதில் வியப்பில்லை. சிலவேளை ஒரு பிரதேசத்தில் குழப்பம் இருந்தால்தான் அங்கே தமது தலையீட்டை தொடர முடியும் என்ற எண்ணம் இருக்கலாம் நாம் கூறியுள்ளோம் இங்கே தொடர்ச்சியாக குழப்பநிலை இருந்தால் இலங்கை அரசிடமே நில அதிகாரம், பாதுகாப்பு அதிகாரம் எல்லாம் இருக்கப்போகின்றது. அது உங்களிற்கும் சாதகம் இல்லை. இதனை தீர்த்து வைத்தால் மட்டுமே உங்களிற்கு சாதகம் என்றோம். தற்போதும் சந்திப்புக்கள் தொடர்கின்றது இவை படம் எடுத்து முகநூலில் போடும் சந்திப்பு அல்ல. அப்படியும் இடம்பெறுகின்றது. இதே நேரம் ஜனவரியில் முக்கிய விடயங்கள் இடம்பெறவுள்ளது இடம்மெறும்போது தெரியும் என்றார்.