இந்தியா – மதம்

இந்தியா – மதம்

இந்தியாவில் மத சடங்கில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான மக்கள் இறப்பு – 02 இலட்சம் இழப்பீட்டு தொகை அறிவித்த அரசாங்கம்!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற மத சடங்கில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத நிலையில் அந்த சடங்கில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள்,குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இன்று(02) இடம்பெற்ற இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சியிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றது.

நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றபோது பலர் கீழே விழுந்தனர். நெரிசலில் சிக்கி 23 பெண்கள், 3 குழந்தைகள், ஒரு ஆண் என 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.