ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சூரத் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதில் ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி நாடு முழுக்க பிரசாரம் செய்தார். அந்த காலகட்டத்தில் ராகுல் காந்தி அகில இந்தியா காங்கிரஸ் தலைவராக இருந்த நிலையில், அவரது தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமாகத் தோல்வியடைந்து ஒரு பக்கம் இருந்தாலும், அப்போது பிரசார சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளும் இருந்தன.
ராகுல் காந்தி மக்களவை தேர்தலுக்காகக் கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோடி என்ற பெயர் கொண்ட அனைவரும் ஒரே போல இருப்பதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, அதன் பிறகு சர்ச்சைக்குரிய வார்த்தையைக் குறிப்பிட்டார். இது அப்போதே மிகப் பெரியளவில் சர்ச்சையானது. மோடி என்ற பெயர் வைத்துள்ள அனைவரையும் ராகுல் காந்தி அவமதித்து விட்டதாகப் புகார்கள் எழுந்தன.
கிரிமினல் அவதூறு வழக்கு
இந்த விவகாரத்தில் தான் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடப்பட்டது. மோடி என்ற பெயர் கொண்ட அனைவர் குறித்தும் ராகுல் காந்தி அவதூறாகப் பேசியுள்ளதாகவும் ராகுல் காந்தி மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாகவும் குஜராத் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தீர்ப்பு
நான்கு ஆண்டுகளாக இந்த கிரிமினல் அவதூறு வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடைசியாக ராகுல் காந்தி கடந்த அக். 2021இல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வழக்கில் கடந்த வாரம் தான் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த வழக்கில் தான் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்றும் தீர்ப்பு அளிக்கும் போது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். அதன்படி ராகுல் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.