இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள்

இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள்

“மலையக தமிழர்கள் “இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள்” என்ற இன அடையாளத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது.” –

“மலையக தமிழர்கள் “இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள்” என்ற இன அடையாளத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது.” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சிறுவர்களின் நலன் கருதி பொகவந்தலாவ டின்சின் தோட்டப் பகுதியில் நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறுவர் அபிவிருத்தி நிலையம் நேற்று சனிக்கிழமை (15 ) திறந்து வைக்கப்பட்டது.

உலக வங்கியின் அனுசரணையுடனும், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நெறிப்படுத்தலின் கீழ் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின்  மேற்பார்வையில், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக நிறுவப்பட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த சிறுவர் அபிவிருத்தி நிலையம் அமைச்சர் தலைமையில் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இவ்வருடம் சனத்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது மலையக தமிழர்கள் பலர், இலங்கை தமிழர்கள் என்பதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதனால் மலையக தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவிட்டது. சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் பேரே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல கணக்கெடுப்புக்கு வரும் சில அதிகாரிகளும், தோட்டத்தில் வாழ்பவர்கள்தான் இந்திய தமிழர்கள், நகரத்தில் வாழ்பவர்கள் இலங்கை தமிழர்கள் என எண்ணிக்கொண்டு கணக்கெடுப்பு நடத்துகின்றனர். மேலும் சிலர் தமிழில் பேசினால் அவர்கள் இலங்கை தமிழர்கள் என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இம்முறை இவ்வாறான தவறுகளுக்கு இடமளிக்க கூடாது. எனவே, மலையக தமிழர்கள் தம்மை மலையக தமிழர்களாகவே கணக்கெடுப்புக்குள் உள்ளடக்க வேண்டும். அப்போதுதான் எமது இனத்தின் இருப்பு பாதுகாக்கப்படும்.

மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை இளைஞர்கள் ஏற்படுத்த வேண்டும். இது காங்கிரஸுக்கான கணக்கெடுப்பு அல்ல, மக்களுக்கானது. எனவே, இந்த விடயத்திலும் எவரும் அரசியல் நடத்தக்கூடாது.

அதேவேளை, மலையக அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்றால் அதற்கான நடவடிக்கை அவசியம். மக்களுக்கு சேவை செய்யவே நாம் வந்துள்ளோம். அதற்காகவே மக்கள் வாக்களிக்கின்றனர். சேவை வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும். எனவே, அரசியல்வாதிகளை கடவுளாக பார்க்கும் நிலை மாற வேண்டும். சமூக நீதி கோட்பாடு முக்கியம் என்றார்.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளருமான எம்.ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரிவின் தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், உப தலைவர் பிலிப்குமார், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, உயர் அதிகாரிகள், இளைஞர்கள், யுவதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.