இனச்சுத்திகரிப்பு

இனச்சுத்திகரிப்பு

வரலாற்றில் தமிழர்களை வெட்கித் தலைகுனிய வைத்த நாள்: 1990 ஓகஸ்ட் 30 : சுதர்சன் சரவணமுத்து

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் யாழ் முஸ்லீம் மக்களின் இருண்ட நாள்!

1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி:
வீதியெங்கும் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின,சுமார் 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர்.

ஒரு இனம் அல்லது சமயக் குழுவினை மற்றுமொரு இனம் அல்லது சமயக் குழு திட்டமிட்டமுறையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து வன்முறையால் அல்லது பயங்கரவாதத்தால் அழித்தொழித்தல் அல்லது வெளியேற்றுதல் ‘இனச்சுத்திகரிப்பு’ எனப் பொருள்பட்டால், சிங்கள அரசு 1983 இல் தமிழர்களை விரட்டியடித்ததை விட, புலிகள் 1990 இல் முஸ்லீம்களை 2 மணித்தியாலயத்தில் தம் பிறப்பிட பூமியிலிருந்து விரட்டப்பட்ட இனச்சுத்திகரிப்பு என்பது எப்போதும் மன்னிக்கவே முடியாதது.

ஒரு சிறுபான்மையாக இருந்த இனம், பெரும்பான்மையினரின் அடக்குமுறைக்கெதிராகப் போராடியவர்கள் தமக்கு சிறுபான்மையினராக வாழ்ந்து வந்த சமூகத்தின் மீது அதிகாரம், வன்முறை, அடக்குமுறை, இனஅழிப்பு என மேற்கொண்டதன் நியாயம் என்ன? ஒரு சிலர் தவறிழைத்தார்கள் என்பதற்காக முழு முஸ்லிம்களையும் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்த செயலை யாரும் என்றும் நியாயப்படுத்த முடியாது.

ஹிட்லருக்கு பணக்கார யூதர்கள் மீது எப்படி வெறுப்பு இருந்ததோ, அதே போல இலங்கையில் வாழும் பணக்கார முஸ்லீம் சகோதரர்கள் மீதும் புலிகளுக்கு வெறுப்பு இருந்தது, சிங்களவன் யாழ்பாண நூலகத்தை எரித்தற்கும், புலிகள் முஸ்லீம் சகோதர்களை தாம் பிறந்து வாழ்ந்த இடத்தை விட்டு விரட்டியடித்ததற்கும், புலிகளின் பள்ளிவாசல் கொலைகளுக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? மனித தன்மையுள்ளோர் இதனை ஏற்க முடியுமா?

ஆண்டுகள் பல கடந்த நிலையிலும் கூட அந்த கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக் குழந்தைகளோடு எதிர்காலமே என்னவென்று தெரியாத நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி:
வீதியெங்கும் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின, சுமார் 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர்.

காலை 10 மணியளவில் புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டனர் புலிகள்.

அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினார்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். அப்போது இளம்பருதி என்ற புலி மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். “முஸ்லிம் மக்களே நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று இளம்பருதி என்ற புலி அறிவித்தது.

ஜின்னா மைதானமே கதிகலங்கியது. பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினார்கள். சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள். வாதாடினார்கள். இது எங்களுடைய சொந்த இடம் என கூச்சலிட்டு கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள்.

புலிகளுக்கு ஏது மனசாட்சி:
புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் ொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச்சத்தத்தினால் அதிர்ந்தது.

அனைவரும் பயந்து நடுநடுங்கி அழுது வீங்கிய முகங்களுடன், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறினார்கள்.
புலிகள் அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள்; காதணிகளைக்கூட விடவில்லை.

சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர்.

ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர்.

சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலா புறமும் சிதறி வாழ வைத்தார்கள் இந்தப் புலிகள்.

மனோகரா தியேட்டரில் அடைக்கப்பட்ட பலர் மந்தைகளாக புலிகளின் வாகனங்களில் ஏற்றப்பட்டு கேரதீவுக்குள் விடப்பட்டார்கள். கடல்ப் பயணத்திற்கு பழக்கமற்ற அப்பாவி மக்கள் தம்வசம் வைத்திருந்த ஆடை மூட்டைகளுடன் கடலுக்குள் விழுந்து நனைந்தார்கள். பற்றைக்காடுகளும் முட்புதர்களும் சேற்று நிலங்களும் கடந்து நடைப்பயணமாக பல மணித்தியாலங்கள் அலைந்து வவுனியா பூந்தோட்ட அகதிமுகாமில் தஞ்சமடைந்தார்கள். ஒரு காலத்தில் குட்டி சிங்கப்பூரென வர்ணிக்கப்பட்ட சோனகத் தெருவின் வர்த்தகர்களான முஸ்லீம் சகோதரர்களை, நிவாரணப் பொருட்களையும், நிவாரண உணவுகளையும் கையேந்த வைத்தனர் புலிகள்.

யாழ் பூமிக்கு அவர்களும் சொந்தக்காரர்கள்தான். இது அவர்களது பாரம்பரிய பூமி. பல வருடங்களாக முஸ்லிம்களும் தமிழர்களும் மொழியால் ஒன்றிணைந்து ஒற்றுமையாய் இருந்தார்கள். அவர்கள் மதத்தால் இனத்தால் வேறுபட்டவர்கள் என்பதால் வெளியேற்றப்பட்டார்கள்.

ஒரு மாகாணத்திலிருந்து முழு இனமும் வெளியேற்றப்படுவது சர்வதேச சட்டத்தில் குற்றமென்று தெரிந்தும் கூட அன்றைய காலகட்டத்தில் அவர்கள் வெளியேற்றப்பட்டதை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்த, எந்த ஊடகமும், எந்த அரசியல் வாதிகளும் முன்வரவுமில்லை, அதற்கு முயற்சிக்கவுமில்லை.

நடை பெற்ற சம்பவத்திற்கு இதுவரையும் எந்தவொரு ஊடகமும் மன்னிப்பும் கோரவில்லை. அந்த அளவுக்கு மனிதாபிமானம் அற்ற. ஊடக தர்மம் அற்ற ஊடகங்கள் தான் இன்றும் உள்ளது. ஆக குறைந்தது ஒரு கண்டன கூட்டத்தைக் கூட ஏற்பாடு செய்யவில்லை.

ஆனாலும் யாழ் பூமியிலிருந்து முஸ்லீம் மக்களை புலிகள் வெளியேறும்படி கேட்டபோது, இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும் கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.

புலிகளின் ஆயுதங்களையும் மீறி ஒரு சில தனிநபர்கள், ஒரு சில முஸ்லீம் குடும்பங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முன்வந்தனர், அதில் ஒருவர் எனக்கு படிப்பித்த, நான் பிறந்த இடத்தில், பிரபல தனியார் ரியூட்டரி நடாத்திய, எனக்கு மிகவும் பிடித்த மனித நேயம் மிக்க ஆசிரியர் உதவ முன் வந்தது குறிப்பிடத்தக்கது.

புலிகள் முஸ்லீம் மக்களுக்குச் செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல. ஆனாலும் புலிகளின் பெரும் படுகொலைகளில் ஒன்று அந்த காத்தன்குடி பள்ளிவாசல் படுகொலை. தொழுகையிலிருந்த அந்த முஸ்லீம்கள் மீதான படுகொலை பெரும் ரத்த அடையாளம். அவர்களின் மிகக் கொடூரமான வெறிக்கு பெரும் சாட்சி. புனிதமான மசூதி அன்று இரத்த காடாயிற்று. குரான் ஒலித்த இடம் அன்று ஓப்பாரி ஓலத்தில் அழுதது.

இச்சம்பவத்தில் 3 வயது குழந்தையினை புலிகள் கொன்ற கோரமும் உண்டு. 10 வயதிற்குட்பட்ட 30 சிறுவர்கள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். அந்த பள்ளிவாசலில் பிஞ்சுகள் உட்பட ஏராளமானோர் கொல்லபட்டு மசூதி ரத்தத்தில் நனைந்தது. இதனை எல்லாம் கடந்து புலிகள் சாதித்தது என்ன? தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு அமைவாக அடுத்த சில ஆண்டுகளிலேயே புலிகள் யாழ் மண்ணில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அடுத்த இரு தசாப்தங்களிற்குள் புலிகள் இவ்வுலகில் இருந்தே களையப்பட்டனர்.

உலகம் இவற்றை அறிந்ததால்தான் இவர்களை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றது. இறுதி யுத்தத்தில் ஈரான், பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகள் மட்டுமல்ல புலிகள் தலைமேல் வைத்துக் கொண்டாடிய மேற்கு நாடுகளும் இலங்கை அரசோடு இணைந்து பிரபாகர சம்காரம் செய்தனர்.

என்னிடம் ஆயுதம் இருக்கின்றது. இது என் நாடு. அதனால் எல்லோரையும் கொன்றுகொண்டே இருப்பேன் என்பது போராட்டம் ஆகாது. அதன் பெயர் காட்டுமிராண்டித்தனம். ஏன் உங்களிடம் ஆயுதமிருந்தால் எதுவும் செய்வீர்களா? எங்களிடம் இருக்கும் ஆயுதங்களை காட்டட்டுமா? என உலக நாடுகள் திரண்ட பொழுது புலிகள் காணாமல் போனார்கள்.