இமாலயப்பிரகடனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு!
நேற்றைய தினம் கொழும்பு BMICH இல் நடைபெற்ற இமாலாய பிரகடனம் தொடர்பான கலந்துரையாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதேமாதிரியான ஒரு ஆர்ப்பாட்டம் கனடாவில் இமாலய பிரகடனத்துடன் தொடர்புடைய கனடிய தமிழ் கொங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த தமிழர் தெருவிழாவில், தென்னிந்தியப் பாடகர் சிறினிவாஸின் இசை நிகழ்ச்சியை குழப்பும் வகையில் நடத்தப்பட்டிருந்தது. கனடாவில் நடந்த ஆர்ப்பாட்டம் இறுதியில் வன்முறையில் முடிந்திருந்திருந்து. கனடா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியிருந்தது.
என்பிபி அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கப் போவதாக திட்டவட்டமாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்துள்ளது. இச் சூழலில் இனப்பிரச்சினைக்கும் புதிய அரசியலமைப்பு ஊடாக நிரந்தர தீர்வு காண்பதற்கு ஏதுவான சூழல் அமைந்துள்ளது. இச் சூழலை தமிழர் தரப்பு தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் ஒரு முக்கியான தருணத்தில் ஈழத்தமிழர் நாட்டிலும் புலத்திலும்; ஒற்றுமையின்றி பல்வேறு குழுக்கள், அமைப்புகள் மற்றும் கட்சிகளாக பிளவுபட்டு நிற்கிறார்கள். தமிழ் மக்களின் நலன்கருதியன்றி சுயநலமாகவும் தன்னிச்சையாகவும் செயற்படுகின்றனர். அப்படியொரு புலம்பெயர் அமைப்பான உலகத் தமிழர் பேரவையும் மற்றும் சிறந்த இலங்கைக்கான பௌத்த சங்கமும் இணைந்து உருவாக்கியதே இமாலய பிரகடனம். இந்தப்பிரகடனம் கடந்த வருடம் நேபாளம் நாட்டில் நாகர்கோட் என்ற நகரில் வைத்து வெளியிடப்பட்டது. இதன் நோக்கம் மற்றும் அவசியம் பற்றி உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்தர் இவ்வாறு கூறுகிறார்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு பௌத்த குருமாரோடு இணைந்து ஒரு தமிழ்த் தரப்பு இவ்வாறு பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருப்பது இதுதான் முதல் தடவை.
2009 இல் யுத்தம் மௌனிக்கப்பட்ட, புலிகளுக்கு பின்னான, தமிழ் மக்களின் பேரம்பேசும் பலம் குறைந்து போய்விட்டது. அதனால்தான் தாயகத்துக்கு வெளியில் இருந்து தாயகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பிரகடனங்களை உருவாக்கும் உரிமையை ஜி.ரி.எஃப் (GTF) எவ்வாறு தன்னிச்சையாக கையிலெடுக்க முடியும் என புலத்திலும் நாட்டிலும் GTF உலகத் தமிழர் பேரவை விமர்சனத்தை எதிர்கொள்கிறது. அதேநேரம் GTF புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தையும் சரி, நாட்டில் வாழும் தமிழ் மக்களையும் முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் எதிர்ப்புக்கள் எழுந்திருந்தன.
முதலில் நாட்டில் உள்ள தமிழ்க் கட்சிகள், செயற்பாட்டாளர்கள், நாட்டில் வாழும் பொதுமக்கள், சிவில் சமூக அமைப்புகளுடன் உரையாடியிருந்திருக்க வேண்டும். அதன்பின்னர் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியிலும் இது தொடர்பாக விவாதித்திருக்க வேண்டும். ஆயினும் இனப்பிரச்சினைக்கான இறுதி முடிவை எடுப்பது இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்மக்களே. புலம்பெயர் தமிழர்கள் நாட்டில் வாழும் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமையில் ஏதேற்சை அதிகாரத்தோடு செயற்பட முடியாது. ஏற்கனவே நடந்த தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் செலுத்திய செல்வாக்கால் தாயகத்தில் வாழ்ந்த மக்கள் பல நெருக்கடிக்களை சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இறுதி யுத்ததின் போது கடும் போர்ச் சூழலிலிருந்து மக்கள் வெளியேறினால் தனிநாடு கனவு பலிக்காது என கருதிய புலம்பெயர் தமிழர்கள், அவர்களை வெளியேற்ற வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். முள்ளிவாய்க்காலில் பேரவலம் நடந்து கொண்டிருக்க புலம்பெயர் நாடுகளில் அதனை நிறுத்த புலம்பெயர் அமைப்புக்கள் எந்தவிதமான இராஜதந்திர நகர்வுகளையும் செய்யவில்லை. மாறாக இந்த யுத்தத்தை புலிகள் ஆரம்பித்த போது அதனை நெய்யூற்றி வளர்த்துவிட்டவர்கள் புலம்பெயர் தமிழர்களே.
வன்னியில் விழுகின்ற செல்கள் வெளிநாடுகளில் உள்ள தங்களை எதுவும் செய்யாது என்பதாலும் தாங்களும் தங்களது பிள்ளைகளும் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதாலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத் தமிழர்களை மரண யுத்தத்திற்குள் வலிந்து தள்ளிவிட்டனர். யுத்தத்தில் போய் களமாடியவர்கள் கால், கைகளை இழந்து தவிக்கின்றனர். இந்த யுத்தத்தைக் காட்டி உழைத்த சிலர் மில்லியனெயர்கள் ஆயினர். யுத்தத்தை பிரைட்ரைஸ் சாப்பிட்டுக் கொண்டு சோபாவிலிருந்து 56 இஞ்சி ரீவியில் பெரிசாகப் பார்த்தவர்கள் தான் இப்ப பெரிய தேசியவாதிகளாக தங்களைக் காட்டிக்கொள்கின்றனர். உணர்ச்சித் தேசியம் பேசுகின்றனர். இப்பவும் இவர்களுக்காக கொஞ்சப் பேர் சாகத் தயாராக இருப்பதாகவே இவர்கள் நினைப்பு.
இவ்வாறான பின்னணியில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளாகியும் யுத்தத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம் மிகச் சீரழிந்த நிலையில் இருக்கிறது. அபிவிருத்தி மற்றும் மீள் கட்டுமானம் எல்லாம் மந்த கதியில் நடந்து கொண்டிருக்கின்றன. போராடியவர்கள் மறக்கப்பட்டுவிட்டார்கள். போராடத் தூண்டியவர்கள் நாடு திரும்பி தமது தனிப்பட்ட வியாபார முயற்சிகளை செய்கின்றனர். பணத்தை கொட்டி ஹோட்டல்கள் கட்டுகிறார்கள். இப்போது அன்றைய சிங்களப் பேரினவாத அரசு, இன்று அவர்களுக்கு உற்ற நண்பன். விடுதலைப் போராட்டத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த உயிர்களின் பெறுமதியையிட்டு யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை.