இரட்டை பிரஜாவுரிமை

இரட்டை பிரஜாவுரிமை

இரட்டை குடியுரிமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இரட்டைக் குடியுரிமை தொடர்பான முடிவுகளை நீதிமன்றத் தீர்மானங்கள் மூலம் மட்டுமே எடுக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகச் செயற்பட முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் இரட்டைக் குடியுரிமை உள்ளவரா இல்லையா என்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணைக்குழு, அத்தகைய நபர்கள் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் போது இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அவ்வாறான வேட்பாளர்கள் இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்கினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றில் இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் பத்து எம்.பி.க்கள் – பறிபோகுமா பதவி .?

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, 22வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்தால் தமது எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கூற்றுப்படி, தற்போதைய நாடாளுமன்றில் இரட்டைக் குடியுரிமை கொண்ட சுமார் பத்து எம்.பி.க்கள் உள்ளனர்.

ஒரு சிலரைத் தவிர, அந்த எம்.பி.க்கள் யார் என்பது தனக்குத் தெரியாது என்று அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறினார்.

சிறிய திருத்தங்களுடன் இந்த திருத்தத்தை அங்கீகரித்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், நாட்டின் ஜனநாயகத்திற்கு இது ஒரு முக்கியமான தருணமாக அமையும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர்..” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

“புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளதால்  வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேணும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(10) உரையாற்றிய போதே அரசாங்கத்திடம் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“அரசாங்கத்திடம் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை இந்த வேளையில் முன்வைக்க விரும்புகின்றேன். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பலரும் இரட்டைப் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர்.இரட்டைப் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்வது இலகுவாக இருந்தாலும், அதற்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இலங்கையில் தற்போது டொலருக்கான பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அரசாங்கம் இரட்டைப் பிரஜாவுரிமைக்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள அமைச்சர் உள்ள நாட்டில், வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர். எனவே அவர்களுக்கு விரைவாக இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

குறிப்பாக தபால் மூலமாகவேணும் அவர்கள் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கையினை அரசாங்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தும் என நம்புகின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.