இரணைமடு கட்டுமானம்

இரணைமடு கட்டுமானம்

யாழுக்கு தண்ணீர் வழங்குவதை லண்டன் கற்பக விநாயகர் தடுப்பது ஏன்? லண்டன் கற்பக விநாயகர் ஆலயமும் அதன் அரசியலும் !

லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் குறிப்பாக அதன் தலைவர் எம் கோபாலகிருஷ்ணன், கற்பக விநாயகரை தமிழ் அரசியலோடு அதன் ஆரம்பம் முதல் இணைத்துள்ளார். சுன்னாகம் கிணறுகளில் கழிவு எண்ணெய் வந்ததற்குப் பின்னிருந்த ஊழல் மோசடியாளர்களான பொன் ஐங்கரநேசன், மாவை சேனாதிராசா, மற்றும் யாழுக்கு தண்ணீர் வழங்குவதைத் தடுக்கும் பா உ சிறிதரன் ஆகிய ஊழல் மோசடி அரசியல்வாதிகளை கற்பக விநாயகரின் திருவிழாக்களில் காணலாம். தமிழ் மக்களின் மட்டுமல்ல மனித குலத்தின் அடிப்படைத் தேவைகளான தண்ணீரில், தமிழ் மக்களின் பொது எதிரிகளாக கடந்த ஆட்சிக்காலங்களில் இருந்த பேரினவாத சக்திகளே கை வைக்கவில்லை. தாகத்திற்கு தண்ணீர் வழங்குவது என்பது மிகச் சிறந்த அறம். அந்தக் குடி தண்ணீரை யாழ்ப்பாண மக்களுக்கு வழங்க மறுத்து விலாங்கு மீன் போன்று அரசியல் செய்யும் சிறிதரன் கற்பக விநாயகர் ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றார். அவரோடு ஐங்கரநேசன் மற்றும் மாவை ஆகியோரும் கொண்டாடப்படுகின்றனர். கற்பக விநாயகரின் உண்டியல் பணமும் அர்ச்சனைப் பணமும் கூட யாழ் மக்களின் தாகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.

தற்போது காஸாவில் இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனர்களின் தண்ணீர், உணவு, உறைவிடம் என எல்லாவற்றிலும் தன் கையை வைத்து ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையை எப்படிச் செய்யலாம் என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது. இதற்கு மாறாக தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் தலைவர்களாக அறியப்படும் பா உ சிறிதரன், பொன் ஐங்கரநேசன், மாவை சேனாதிராசா போன்றவர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே முதுகில் குத்துகின்றனர். அவர்களின் மக்கள் விரோத அரசியல் நடவடிக்கைகளுக்கு லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் வருமானம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூட லண்டன் கற்பக விநாயகரின் தேர்த்திருவிழாவில் பா உ சிறிதரன் கலந்துகொண்டார். சிறிதரனுடைய அரசியலுக்கு நிதி வழங்குபவர்களில் லண்டன் கற்பக விநாயகர் ஆலயமும், அதன் தலைவர் எம் கோபாலகிருஷ்ணனும் ஐபிசி பாஸ்கரனும் முக்கியமானவர்கள்.

கிளிநொச்சி விவசாயிகளை யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு எதிராகத் தூண்டிவிட்டவர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். கிளிநொச்சி விவசாயிகளை வஞ்சித்து யாழ்ப்பாண மக்களுக்கு தண்ணீர் கேட்கவில்லை. இரணைமடு அணைக்கட்டை நான்கு அடிக்கு உயர்த்தி நீர்க்கொள்ளளவை அதிகரித்த பின்னரேயே மேலதிக நீரை யாழ் கொண்டு செல்ல கேட்கின்றனர். அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒப்புக்கொண்டிருந்தனர். தற்போது ஆண்டுதோறும் 20 மில்லியன் கனமீற்றர் தண்ணீர் இரணைமடுவில் இருந்து கடலுக்குள் விடப்படுகின்றது. ஆனால் யாழ் மக்களுக்கு ஆண்டுக்கு 10 மில்லியன் கன மீற்றர் தண்ணியே தேவைப்படுகின்றது என்றும் அதனை வழங்குவதால் கிளிநொச்சி மக்களுக்கோ விவசாயிகளுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை என்கிறார் நீர் முகாமைத்துவ நிபுணர் கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமார். பா உ எஸ் சிறிதரன் மற்றும் பொன் ஐங்கரநேசன் போன்ற மோசடி அரசியல்வாதிகளும் அவர்களோடு கிளிநொச்சி நீர்த்திணைக்களத்தில் உள்ள அதிகாரிகளும் சேர்ந்தே இந்த மோசடியில் ஈடுபடுவதாக கலாநிதி எஸ் சிவகுமார் குற்றம்சாட்டுகின்றார். கடலுக்குள் செல்லும் தண்ணீரை யாழ் மக்களுக்கு குடிக்கக் கொடுக்க மறுப்பது மிகப்பெரிய அநீதி என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், யாழ் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கான பங்களிப்பை அவசரமாச் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அரசியல் வாதிகளுக்கு அழுத்தங்கள் வழங்க வேண்டும் என்கிறார் ஜேர்மனியில் வாழ்கின்ற சுப்பிரமணியம் உதயஜோதி. இங்கு பிரதேசவாதம் பேசுவது அர்த்தமற்றது எனவும் யாழ்ப்பாண தரையமைப்பு தண்ணீரைத் தேக்கி வைக்கக்கூடிய தரையமைப்பு அல்ல என்றும் தெரிவிக்கும் அவர், யாழ்ப்பாணத்து கிணற்று நீரின் அடர்த்தி அதிகமாக இருப்பதை அங்குள்ள கிணற்று நீரைக் குடிப்பவர்கள் உணருவார்கள் எனவும் தெரிவித்தார். யாழ்ப்பாணக் கிணற்று நீரில் நைற்றஜன் அளவு அதிகம் இருப்பதையும் தற்போது இடநெருக்கடி காரணமாக கிணற்றுக்கும் மலசலகூடத்துக்கும் உள்ள நெருக்கம் காரணமாக மலசலகூடக் கிழிவுகள் கிணற்று நீரோடு கலப்பதன் ஆபத்தை காலஞ்சென்ற பேராசிரியர் நடராஜா சிவராஜா தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார்.

இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் நீரால் ஏற்படும் நோய்கள் அதிகரித்துள்ளதும் யாழ் மருத்துவர்களால் அடையாளம் காணப்பட்டு உள்ளது. சில மரணங்களும் இதன் காரணமாக ஏற்படுகின்றது. இது தொடர்பான சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் இதன் பாராதூரமான நிலை வெளிவரும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு உதவுகின்ற போது பொறுப்புடன் நடந்தது கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர். ஆலயங்களுக்குச் செல்லும் பக்தர்களும் தாங்கள் பொது நன்மைகருதிச் செலுத்தும் பணம் சரியான முறையில் செல்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுதொடர்பில் லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் தனது கருத்தை வெளிப்படுத்தினால் அதனை பதிவு செய்ய தேசம்நெற் தயாராக உள்ளது.

 

புலிகள் வழங்க அனுமதித்த தண்ணீரைத் தடுத்த பா உ சிறிதரன் – கிளி க்கு விவசாயி முகம் யாழுக்கு புலி முகம் சிறிதரன் பிழைக்கத் தெரிந்த ஒரு விலாங்குமீன் !

புலிகள் வழங்க அனுமதித்த தண்ணீரைத் தடுத்த பா உ சிறிதரன் – கிளி க்கு விவசாயி முகம் யாழுக்கு புலி முகம் சிறிதரன் பிழைக்கத் தெரிந்த ஒரு விலாங்குமீன் !
இரணைமடுத் தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்லும் திட்டத்துக்கு, கிளிநொச்சி விவசாயிகளுடன் கலந்தாலோசித்து, தங்களுடைய முழு ஆதரவையும் தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கி இருந்தனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகள் மௌனித்ததும் அரசியலுக்குள் குதித்த சிறிதரன் 2010இல் ஈபிஆர்எல்எப் பட்டியலில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றதும் புலிகளின் முடிவை, தன்னுடைய சொந்த அரசியல் நலன்களுக்காக, தன்னுடைய வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்காக கிளிநொச்சி – யாழ்ப்பாணம் என்ற பிரதேசவாதத்தைக் கிளப்பிவிட்டு யாழ்ப்பாணத்துக்கு தண்ணி தரமாட்டோம் என்று கிளிநொச்சி விவசாயிகளை யாழ்பாணத்துக்கு எதிராகத் திருப்பி விட்டுள்ளார்.
ஆரம்பத்தில் வடமாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சி வி விக்கினேஸ்வரன் எடுத்த உருப்படியான விடயங்களில் ஒன்று இரணைமடுத் தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டு வர வேண்டும் என்று கோரியது. ஆனால் பா உ சிறிதரன் வழங்கிய அழுத்தத்தால், இந்த முடிவை மாற்றிக் கொண்டார் சி வி விக்கினேஸ்வரன். இவருடைய தலைமையில் இருந்த வடமாகாண சபை, மோசடி மற்றும் ஊழல்கள் காரணமாக கலைக்கப்பட்டது. அதற்கு சில தினங்களுக்கு முன் மற்றுமொரு பெரும் மோசடியைச் செய்து யாழ்ப்பாணத்துக்கு தண்ணீரைக் கொண்டுவரும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்துடன் இவர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்ட வரைபை மாற்றியுள்ளனர். கிளிநொச்சியில் பா உ சிறிதரனின் நண்பர் குருகுலராஜா இருந்த காலம் முதல் கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் பின் தங்கி 23, 24வது மாவட்டமாக இருந்து வந்தது. யாழ்ப்பாணத்துக்கு தண்ணீரைத் தடுத்து கோடிக்கணக்கான நிதியை வீணாக்கி தமிழ் மக்களைத் தண்ணீருக்குத் தவிக்க விட்டு தன்னுடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்கின்றார் சிறிதரன்.
இரணைமடுத்திட்டம் தமிழீழ விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் தங்கள் அதிகாரத்தை வைத்திருக்கும் போதே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இதற்கான முதலீட்டை – கடனை வழங்குவதற்கு முன் ஆசிய அபிவிருத்தி வங்கி இத்திட்டத்திற்கு விடுதலைப் புலிகளுடனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தது. அதன் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் கிளிநொச்சி விவசாயிகளுடன் உரையாடி விவசாயிகள் சம்மேளனத்தை உருவாக்கி தலைவராக ஒருவரை சு ப தமிழ்செல்வன் நியமித்தார், கிளிநொச்சி விவசாயிகளுடைய குறைகளைக் கேட்டு அறிந்தனர். அந்த அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையின்படி இரணைமடு அணைக்கட்டு உயர்த்தப்பட்டு அவர்களுடைய ஏனைய நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் இன்னமும் கிளிநொச்சியில் வாழ்கின்றார்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமயிலான ஈபிஆர்எல்எப் ‘மண்டையன் குழு’ என விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டப்பட்ட, இவர்களுடன் கைகோர்த்தார் சிவஞானம் சிறிதரன். தற்போது எஸ் சிறிதரன் கனடா சென்று திருப்பி இருக்கின்றார். ஆனால் அவரை அரசியலுக்குள் கொண்டு வந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் குடும்பம் கனடாவில் இருந்தும், அவர் கனடா செல்ல முடியாது.
காரணம் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக வெளிவந்த முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக இருந்த திருச்செல்வத்தின் ஒரே மகனைப் படுகொலை செய்தவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் என்று தற்போது கனடாவில் வாழும் திருச்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். திருச்செல்வத்தை போடுவதற்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர் எல்எப் தேடிச்சென்ற போது திருச்செல்வம் ஓடி ஒழிந்துவிட்டார். அப்போது ஏ ஏல் படித்து நான்கு பாடத்திலும் ஏ சித்திபெற்று பிரபல்யயமாகப் பேசப்பட்ட அம்மாணவன் அகிலன் திருச்செல்வம், தந்தைக்குப் பதிலாக கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். மலவாசல் வழியாக சோடாப் போத்தல் செலுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். அப்பேர்ப்பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரனால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர் சிறிதரன். அப்போது இவர்கள் எல்லோரும் வீட்டுச் சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டனர். தேர்தலில் வெற்றி பெற்றதும், சிறிதரன் தன்னுடைய நீண்ட கால அரசியல் எதிர்காலத்தை தக்கவைக்க ஈபிஆர்எல்எப் இலிருந்து தமிழரசுக் கட்சிக்கு கட்சி தாவினார். ஒரு கூட்டணிக் கட்சியிலிருந்து இன்னொரு கூட்டணிக் கட்சிக்குத் தாவினார்.
தேர்தலில் வென்ற புதிதில் இரணைமடுத் திட்டம் ஆரம்பமாகியது. சற்று அமைதியாக இருந்து யாழ்ப்பாணத்துக்கு தணணீர் கொண்டு செல்வதற்கு உடன்பட்டவர் பின்னர் நீண்டகால அரசியல் நோக்கில் கிளிநொச்சியை தன்னுடைய கட்டுப்பாட்டு பிரதேசமாக்க பிரச்சினையை கிளற ஆரம்பித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாமலாக்கப்பட்டதும், ஆசிய அபிவிருத்தி வங்கி மீண்டும் திட்டத்துக்கான ஆதரவை உறுதிப்படுத்த மற்றுமொரு புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டி வந்தது. அதனால் ஒரேயொரு தடவை இயங்கிய விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாண சபையில் செல்வாக்குத் செலுத்திய பா உ சிறிதரன் முதலமைச்சர் மற்றும் பொன் ஐங்கரநேசன் ஆகியோரை வளைத்துப் போட்டு இத்திட்டத்திலிருந்த நீர்வளத்துறை அதிகாரிகளுடனும் சேர்ந்து தண்ணீர் மோசடியில் ஈடுபட்டனர். இருந்த திட்டங்களை குழப்பியடித்து புதிய திட்டங்களை உருவாக்கி அதிலிருந்து லாபமீட்டினர். இதில் மாவை சேனாதிராஜாவும் பொன் ஐங்கரநேசனும் சுன்னாகத்தில் கழிவு எண்ணை யாழ் கிணறுகளுக்குள் வந்த விடயத்திலும் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தமை தெரிந்ததே.
இந்தப் பின்னணியில் சிறிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட விவசாயிகள் பிரதிநிதி மீது துரோகப்பட்டம் கட்டி அவரைப் பதவி விலக வைத்தார். அதன்பின் யாழ்ப்பாணத்திற்க்கு தண்ணீர் கொண்டு செல்லாமல் இருக்க புதிய நிபந்தனைகளை தன்னுடைய வலதுகரமான இரணைமடு விவசாயிகள் சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகனை வைத்து மேற்கொண்டார். அவையாவும் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கிளிநொச்சித் தண்ணீரை கடலுக்கு வேண்டுமானால் அனுப்புவோம் ஆனால் யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப மாட்டோம் என பா உ சிறிதரன் கோஸ்டியினர் ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.
இரணைமடு நீரை யாழ் கொண்டு செல்ல வேண்டாம் என நேரடியாகவோ மறைமுகமாகவோ தடுக்கின்ற பா உ சிறிதரன், சிவமோகன் மற்றும் சமூக ஊடகவியலாளர், மற்றும் சுயேட்சை வேட்பாளர் த கிருஷ்ணன் ஆகியோருடன் நேர்காணலுக்காக தொடர்பு கொண்ட போதிலும் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களுடைய கருத்துக்களையும் மக்கள் முன்வைக்க வாய்ப்பளிக்க விரும்புகின்றோம்.