இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

எஸ்.வியாழேந்திரனின் செயலாளர்களுக்கு விளக்கமறியல்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பில் ஆற்று மண் அகழ்வதற்கான அனுமதி வழங்க கட்டிட ஒப்பந்தகார் ஒருவரிடம் 15 இலச்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் ஆகிய இருவரை நேற்று வியாழக்கிழமை (1) கல்லடி கடற்கரையில் மாறுவேடத்தில் இருந்த இலஞ்சஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலன்னறுவை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் இவர்கள் இருவரையும் இன்று(2) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இந்நிலையில் இது தொடர்பிலான விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று(2) இடம்பெற்றது.

விசாரணைகளையடுத்து சந்தேகநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும், கொழும்பு நீதிமன்றில் இது தொடர்பிலான வழக்குக்கு விண்ணப்பிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அவர்களை இங்கிருந்து கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினருக்கு நீதிமன்றம் கட்டளைப்பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் 58.9 சதவீதமாக காணப்பட்ட கிழக்கு தமிழரின் தொகை இன்று 38.6வீதமாக வீழ்ச்சி – அமைச்சர் வியாழேந்திரன் கவலை !

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னாமுனை தொடக்கம் செங்கலடி வரையான பகுதியில் வசித்து வரும் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் நேற்றைய தினம் மைலம்பாவெளி ஸ்ரீமுருகன் ஆலய வீதியில் குடிநீர் திட்டத்தின் ஆரம்ப விழா நடைபெற்றது.

அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் குறித்த குடிநீர் திட்டத்திற்கு 100மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தனியாக அபிவிருத்தியை மட்டும் இலக்காகக் கொண்டு எதனையும் சாதிக்கமுடியாது என்பது எங்களுக்கு தெரியும். தனியாக உரிமையினை மட்டும் இலக்காக கொண்டு வேலைசெய்யும்போது அபிவிருத்தியை இழந்து நிற்கின்ற சமூகமாக நாங்கள் மாறியிருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழ் சமூகம் தன் இருப்பினைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டுமானால் உரிமையினையும் அபிவிருத்தியும் ஒன்றுக்கொன்று முரண்படாத வகையில் சமாந்தரமாகக் கொண்டுசெல்லவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் மூன்று இனமக்களும் வாழ்கின்றனர். முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பயணத்தினை எடுத்துப்பார்த்தால் தங்கள் சமூகத்தின் உரிமை சார்ந்த விடயத்திலும், அபிவிருத்தியிலும் கவனமாக இருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் ஒரு பெரும்பான்மை சமூகமாக தமிழ் சமூகம் இருந்து வந்தது. ஆரம்பத்தில் 58.9 சதவீதம் கிழக்கில் தமிழர்கள் இருந்தனர். ஆனால் அது தற்போது 38.6வீதமாக மாறியுள்ளது.

சுமார் 20சதவீதத்தால் தமிழர்களின் விகிதாசாரம் குறைந்துள்ளது. இது கிழக்கில் தமிழர்களின் பாரிய வீழ்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது” இவ்வாறு அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் போலியான ஆவணங்களை தயாரித்து அரச காணிகளை அபகரிக்கும் அரச அதிகாரிகள் – இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில அரச அதிகாரிகள் போலியான ஆவணங்களை தயாரித்து அரசகாணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் மக்களினால் முன்னெடுக்கப்பட்ட காணி கோரிக்கை தொடர்பான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

சவுக்கடி பகுதியில் காணியற்ற மக்கள் அரசகாணிகளில் குடியேறமுற்பட்ட நிலையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முறுகல் நிலையேற்பட்டது.

சவுக்கடி பகுதியில் பெருமளவான மக்கள் காணியற்று உள்ள நிலையில் அங்குள்ள அரச காணிகளை தனவந்தர்கள் பெருமளவில் காணிகளை அபகரித்துவரும் நிலையில் காணியற்ற மக்கள் தொடர்ந்து காணியற்ற மக்களாகவேயிருந்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதி மக்கள் நேற்று மாலை அப்பகுதியில் போராட்டம் நடாத்திய நிலையில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அப்பகுதிக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

குறித்த பகுதியில் நீண்டகாலமாக காணி அபகரிப்புகள் பெருளமவில் நடைபெற்றுவரும் நிலையில் அதனை தடுக்க முனையாதவர்கள் தாங்கள் இருப்பதற்கு காணிகளை அடைக்கமுனையும்போது தங்களை கைதுசெய்யமுனைவதாக மக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

ஏவ்வாறாயினும் தமக்கான காணிகளை பெற்றுத்தர அதிகாரிகள்,அரசியல்வாதிகள் முயற்சிகளை செய்யவேண்டும் என இங்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆத்துடன் அரசகாணிகளை பாதுகாப்பதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்றை கூட்டி காணி மாபியாக்கல் தொடர்பான விபரங்களை வெளியிடப்போவதாகவும் காணிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உறுதியளித்தார்.

“கிழக்கில் சஹ்ரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள்.” – இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

“இன்னும் சில தினங்களில் சஹ்ரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறுவார்கள்.” என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இன்று (பெப் 10) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த ஏப்ரல் 21 சஹரான் தலைமையிலான ஈஸ்டர் குண்டு தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட பல தேவாலயங்கள் மீது மிலேச்சத்தனமான குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு பலர் உயிரிழந்தனர்.

சஹ்ரான் கைவசம் இருந்த பள்ளிவாசலை பாதுகாப்பு தரப்பினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். ஆனால் அந்தப் பள்ளிவாசலை மீளவும் மக்களிடம் ஒப்படைக்க கோரி காத்தான்குடியில் ஒரு சில சிவில் சமூக அமைப்பும், அரசியல் தலைவர்கள் சேர்ந்து கடை அடைப்புடன் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது காத்தான்குடியில் உள்ள சிவில் அமைப்புகள், சில அரசியல் தலைவர்கள் கூறினார்கள் சஹ்ரான் அவமான சின்னமான பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று, தாக்குதல் நடந்து இன்று மூன்று வருடம்கூட ஆகவில்லை தற்போது பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர்.

இவ்வாறு செயல்படுபவர்கள் இன்னும் சில தினங்களில் சஹ்ரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள் இதுதான் யதார்த்த உண்மை.

ஓட்டமாவடியிலே வடக்கு, கிழக்கு இணையக்கூடாது ஒரு சிங்கள அரசாங்க அதிபரை நியமிக்க வேண்டும் என்று ஒரு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இனவாதத்தை கக்கிக் கொண்டு வருகின்றார்.

இன்று பல பகுதிகளில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றது. பல ஆலயங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

13வது திருத்தச் சட்டம் எரிக்கப்பட்டது. ஒரு மோசமான செயற்பாடு இந்த ஆட்சியாளர்கள் ஒரு இனவாத போக்கு உடனே நடந்து கொண்டிருக்கின்றார்கள் .

ஏதாவது திருத்த சட்ட நகல் சட்டம் நிறைவேற்றப்படும் போது நாடகமாடும் நிலையே காணப்படுகின்றது. கடந்த கால வரலாறுகளை எடுத்துக் கொண்டால் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் சந்திரிக்கா அம்மையார் தொடக்கம் இன்று உள்ள ரணில் விக்ரமசிங்க வரைக்கும் தமிழர்களுடைய தீர்வு விடயத்தில் ஏமாற்றிக் கொண்டே வருகின்றார்கள்.

இவர்களது கபட நாடகங்கள் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் இரண்டு தரப்பிலும் எதிர்ப்பு இருக்கின்றது. சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளும், இனவாத பிக்குகள் மற்றும் முஸ்லிம் மதவாத தரப்பினரும் இந்த வடகிழக்கு இணைப்பினை எதிர்க்கின்றார்கள்.

 

 

 

“பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோர் கொலை, கற்பழிப்பு ஆகியற்றை மறைப்பதற்காகவே நாடாளுமன்றிற்கு வந்துள்ளார்கள்.” – நாடாளுமன்றில் சாணக்கியன் !

“பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோர் சுயநலத்துக்காகவும் கொலை, கற்பழிப்பு ஆகியற்றை மறைப்பதற்காகவும் நாடாளுமன்றிற்கு வந்துள்ளார்கள்.”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 

“பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோர் சுயநலத்துக்காகவும் கொலை, கற்பழிப்பு ஆகியற்றை மறைப்பதற்காகவும் நாடாளுமன்றிற்கு வந்துள்ளார்கள்.” – நாடாளுமன்றில் சாணக்கியன் !

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வாழும் மகளிருக்கு நல்வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக இன்றைய நாளுக்கான தலைப்பிற்கமைய பேசப்படுவதை விட நாடு முகம் கொடுத்திருக்கும் பாரிய பிரச்சினைகளான மின்விநியோக துண்டிப்பு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு இவ்விடயங்களை பற்றி உரையாற்ற விரும்புகிறேன்.

 

அண்மையில் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியகல்லாறு பிரதேசத்தில் முன்னெடுத்த போராட்டத்திற்கு வந்த இளைஞர்கள் மின்விநியோக துண்டிப்பிற்கு கடுமையான எதிர்ப்பை அவ்விடயத்தில் வெளிப்படுத்தினார்கள். அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ளும் வழிமுறை குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க நினைக்கிறோம். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பொருளாதார நெருக்கடி குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறும் தன்மை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

அரசாங்கத்தின் 11 பங்காளி கட்சிகள் யோசனைகளை முன்வைத்ததை தொடர்ந்து முக்கிய இரு அமைச்சர்கள் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உட்பட மாவட்ட அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மௌனம் காப்பது கவலைக்குரியது.

உதாரணமாக கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கிய அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறி மக்கள் படும் துயரம் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதை அவதானிக்க முடிகின்றது.

வடக்கு கிழக்கில் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திக்கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குபவர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் அளவிற்கு திறனில்லாதவர்கள் என்பதும் எமக்கு தெரியும்.

இருந்தாலும் மக்கள் படும் கஸ்டங்களை கண்டு வெறும் வாய்மொழி மூலமான நிலைப்பாட்டையாவது குறிப்பிட வேண்டும். உரப்பிரச்சினையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மீன்பிடி துறை அமைச்சரின் செயலற்ற திறமையினால் வடக்கு கிழக்கு மாகாண மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதனையடுத்து வடக்கு கிழக்கில் சிறுகைத்தொழில் அதாவது வெதுப்பகங்கள் கூட இயங்குவதில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்க்க கோரி மலையகத்திற்கு சென்றிருந்த போது அங்கும் இவ்வாறான நிலைமையை அவதானிக்க முடிந்தது.

விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அரசியல்வாதிகள், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவி வகித்துக்கொண்டு, பதவி ஆசைக்காக தங்களுக்கு அரசாங்கத்தினால் சலுகை கிடைப்பதால் மக்கள் படும் துயரத்தை கண்டும் அமைதிகாக்கிறார்கள்.

அரசாங்கத்தில் இருக்கும் முக்கிய தரப்பினர்கள் கூட மக்கள் தரப்பில் இருந்துக்கொண்டு கருத்துரைக்கையில் ஏன் வியாழேந்திரன், பிள்ளையான் ஆகியோரால் மக்களுக்காக குரல் கொடுக்க முடியாது.  மக்களுக்காக  இவர்கள் அரசியலுக்கு வரவில்லை தங்களின் சுயநலத்திற்காகவும், செய்த கொலை, கற்பழிப்பு ஆகியற்றை மறைப்பதற்காகவும் நாடாளுமன்றிற்கு வருகை தந்துள்ளார்கள் என்றும் குறிப்பிடலாம்.மகளிர் தினமன்று சபை ஒத்திவைப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பிரேரணையொன்றை கொண்டு வரவுள்ளதை அவதானித்தேன். அப்பிரேரணையில் பல காலங்களுக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரேமினி என்ற சகோதரியை கற்பழித்து கொலை செய்தவர் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான கட்சியை வைத்திருக்கும் ஒருவர் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

இவ்வாறானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளார்கள். மகளிர் தினத்தையொட்டி பிரேரணை கொண்டு வரும் வேளை இதனை பேசவிரும்புகிறேன்.

எமது மாவட்டத்தில் மிகமோசமான நிர்வாகம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. வட்டாரத்தில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கு 40 இலட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

அந்த நிதி ஒதுக்கீட்டை கூட எடுத்து இன்று ஆளும் கட்சியை சேர்ந்த ஒருசிலர் தங்களின் பிரதேச அபிவிருத்தி மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை வைத்துக்கொண்டு அந்த 40 இலட்சத்தையும் நாங்கள் தான் வழங்குவோம் என குறிப்பிடுகிறார்கள்.

அவ்வாறாயின் இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லையா, வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்டவருக்கு அந்த தெரிவை செய்ய முடியாவிடின் பிறகு எதற்கு ஜனநாயகம்.

உள்ளுராட்சி மன்றங்களை கலைத்து விட்டு மாவட்ட அபிவிருத்தி குழுவிற்கு முழுமையாக பொறுப்பினை வழங்குங்கள். இவ்விடயத்தை ஆளுநரிடமும் அறிவித்தோம். நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படும் போது அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் வியாழேந்திரனின் ஆதரவாளர்களின் ஆதரவுடன் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் – வைத்தியசாலையில் சென்று சந்தித்த சாணக்கியன் !

மட்டக்களப்பில் தாக்கப்பட்ட ஊடகவியலாளரை வைத்தியாசாலையில் சென்று பார்வையிட்டுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை கோரியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளரினை நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உட்பட சந்தித்திருந்தோம். மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் ஊடகவியலாளர் ஓருவர் தாக்கப்பட்ட நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பினை சேர்ந்த லட்சுமனன் தேவ பிரதீபன் என்ற ஊடகவியலாளரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்து நிலையம் அகற்றுவது தொடர்பாக வந்தாறுமூலை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது கிழக்கு பல்கழைக்கழகத்தில் பணிபுரியும் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடாத்தியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் பஸ்தரிப்பு நிலையம் ஒன்று அகற்றப்பட்டது தொடர்பில் அந்த பஸ்தரப்பு நிலையத்தினை அமைத்தவர்களின் உறவினர்கள் குறித்த பகுதியில் போராட்டம் நடாத்தியுள்ளனர். இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளர்கள் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரான லட்சுமனன் தேவ பிரதீபன் மீது அங்கிருந்த பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளர்களின் ஆதரவுடனேயே தன்மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக ஊடகவியலாளர் லட்சுமனன் தேவ பிரதீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

வியாழேந்திரனின் கையடக்க தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணை செய்ய கோரிக்கை !

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் சுட்டுக்கொல்லப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரம் கொலை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் கையடக்க தொலைபேசி அழைப்பு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் சுட்டுக்கொல்லப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரம் படுகொலை தொடர்பில் நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்தவழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி என். கமலதாஸ் ஆஜராகியிருந்தனர். குறித்த வழக்கானது நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற வேளையில் இராஜாங்க அமைச்சர் தன்னுடைய வீட்டிலிருந்தார் என்றும் அதன் பின்னரே அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றார் என்ற தகவலும் இருக்கும் காரணத்தினால் இரண்டு விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் என்று நீதிவானிடம் கோரியிருக்கின்றோம்.

இராஜாங்க அமைச்சர் எப்போது வீட்டைவிட்டு வெளியேறினார் என்பதை அறிவதற்காக வீதிகளில் உள்ள சிசிரிவி காட்சிகள் விசாரணை செய்யப்பட வேண்டும். குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முறையாக முன்னெடுக்காத காரணத்தினால் குறித்த வழக்கானது கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நீதிவான் தெரிவித்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முதன் முதலில் தொடர்பினை ஏற்படுத்திய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அந்த அழைப்பை எடுத்த இடம் மற்றும் வழியில் இருந்த சிசிரிவி காணொளிகளை உடன் பரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கை சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த வழக்கானது எதிர்வரும் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“வெளிநாட்டு உள்ளாடைகள் தொடர்பில் வெட்கப்படுங்கள்.” – வியாழேந்திரன்

உள்ளாடைகளுக்குக் கூட வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலை குறித்து வெட்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எம்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

எமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்படுத்த இம்முறை வரவு செலவு திட்டத்தினூடாக திட்டமிடப்பட்டுள்ளது.அரிசி உட்பட சிறுதானியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதில் இருந்து மீளவே இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 14,021 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

நாடுகள் முன்னேற கிராமங்கள் முன்னேற்றப்பட வேண்டும். கொரோனாவால் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. உள்ளாடைகளுக்குக் கூட வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலை குறித்து வெட்கப்பட வேண்டும்.  எமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயத்தை முன்னேற்ற  5 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துறையுடன் தொடர்புள்ள ஏனைய அமைச்சுக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து முன்னேற்ற வேண்டும். காணிப்பிரச்சினைகளை கால இழுத்தடிப்பின்றி விவசாய நடவடிக்கைகளுக்கு  பாதிப்பின்றி முன்னெடுக்கும் வகையில் வழங்குமாறு  அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பணித்துள்ளார்.

விவசாய முன்னேற்றத்துக்கு  72,492 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் ஜனாதிபதி போன்றோரின் உருவப்பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. ஆனால்  எதிர்கால சந்ததியின் உருவ பொம்மைகளே எரிக்கப்படுகின்றன. இரசாயன பசளை பயன்பாட்டால் பாடசாலை மாணவர்களுக்குக் கூட புற்றுநோய் ஏற்படுகிறது.

ஒருநாட்டின் வருமானம் வரி, வெளிநாட்டு முதலீடு, அந்நியச்செலாவணி என்பன ஊடாகக் கிடைக்கிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்துறை குறித்து நிதி அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார். ஒவ்வொரு கிராமங்களையும் ஒவ்வொரு துறைசார் உற்பத்திக் கிராமங்களாக முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை முன்னேற்றுவதற்காக வீதி கட்டமைப்பு,குளம், அணைக்கட்டு என்பன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. பாரபட்சமின்றி அனைத்து வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

எமது அமைச்சின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உழுந்து, பயறு, இஞ்சி உற்பத்தியை மேம்படுத்தி   மனைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூட வசதியற்ற வறியமக்களுக்கு 360 மில்லியன் ரூபா செலவில் மலசலகூடங்கள் அமைக்க இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நடவடிக்கை !

மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூட வசதியற்ற வறியமக்களுக்கு 360 மில்லியன் ரூபா செலவில் 3200 மலசலகூடங்களை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சினால் மட்டக்களப்பில் நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இன்று(24.12.2020) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கருத்து வெளியிடுகையில்,

இவ்வாண்டு 25 மில்லியன் செலவில் ஆடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தினை குறுகிய காலத்தினுல் நடைமுறைப்படுத்திய அரச அதிகாரிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், மேலும் இம்மாவட்டத்தில் 17 ஆயிரத்தி 723 மாலசலகூடத் தேவை காணப்படுகின்றது. இவற்றில் எதிர்வரும் ஆண்டு 3200 மலசல கூடங்களை 360 மில்லியன் செலவில் அமைத்துக் கொடுக்க அனுமதியும் சகல பூர்வாங்க நடவடிக்கைகளும் நிறைவு பெற்றுள்ளது. இத்திட்டத்தினை எதிர்வரும் 9 மாதங்களில் நிறைவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் இவற்றுக்கான பயனாளிகளின் விபரங்களை எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மாவட்ட செயலாளரூடாக அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் பிரதேச செயலாளர்களைக் கேட்டுக்கொண்டார். இத்திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் ரூபாவும், இலங்கை அரசினால் 60 மில்லியன் ரூபாவுமாக 360 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர இவ்வமைச்சினால் இஞ்சி, உழுந்து, பழவகை உற்பத்திக்கான உதவிகள், தொடர் மாடி வீட்டுத்திட்டங்கள், கோழி வளர்பிற்கான நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டங்கள் போன்றவற்றை எதிர்வரும் ஆண்டில் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.சேனநாயனக, மேலதிக செயலாளர் கலாநிதி, எஸ். அமலநாதன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரதிநிதி என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.