இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

நாட்டை முன்னேற்ற இரவு நேரப் பொருளாதாரத்திற்கு நாம் மாற வேண்டும் – இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

 

அதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக் கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்தியமைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இவ்வாறு தெரிவித்தார்.

 

இரவுப் பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு நேரப் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே,

“ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் இரவு நேரங்களில் பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் இரவில் உணவகங்களைத் திறந்து வைப்பது உள்ளிட்ட இரவு நேரப் பொருளாதாரத்தை நாடுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% அதிகரிக்க முடியும். உலகின் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு நேரப் பொருளாதாரத்தின் பங்களிப்பை பயன்படுத்திக் கொள்கின்றன.

 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, நம் நாட்டு மக்களும் இரவு நேரங்களில் உணவகங்களுக்குச் செல்வது உள்ளிட்ட பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபடுவதையே விரும்புவது வழக்கம். இதன்மூலம் விசேடமாக மதுவரி வருமானத்தையும் அதிகரிக்க அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கிறது. ஒரு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும், நாட்டின் நிலையான வளர்ச்சியைப் பேணுவதற்கும், அரச வருமானத்தை அதிகரிப்பது அவசியம்.

 

இரவு நேரப் பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். ஆனால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும். குறிப்பாக கடலோரப் பகுதிகளிலும், கொழும்பு போன்ற நகர்ப்புறப் பகுதிகளிலும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. எனவே, இதுபோன்ற இடங்கள் தொடர்பான சட்ட, விதிமுறைகளை திருத்தம் செய்து, தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.

 

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்கள் இந்த நாட்டிற்கு வந்து பொழுதுபோக்கக்கூடிய வகையில் தற்போதுள்ள சில கட்டுப்பாடுகள் திருத்தப்பட வேண்டும். உதாரணமாக, உணவகங்கள் திறக்கும் நேரத்தை மாற்ற வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியான ஒரு நெகிழ்வான கொள்கைக்கு நாம் செல்ல வேண்டும்.” என்று இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

“ஆங்கிலத்தை அரச கரும மொழியாக மாற்றுவதே இனப்பிரச்சினைக்கு தீர்வு.”- இராஜாங்க  அமைச்சர் டயனா கமகே

“நாட்டில் சிங்கள-தமிழ் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமாயின்  ஆங்கில மொழியை அரச கரும  மொழியாக அறிவிக்க வேண்டும்.” என  சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10)  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முன்னிலைப்படுத்தி நாட்டில் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிப்பது வெறுக்கத்தக்கது. 13 அல்லது 13 பிளஸ் என்ற பிரச்சினைகள் எமது நாட்டுக்கு வேண்டாம். நாம் அனைவரும் இலங்கையர்களாக வாழ வேண்டும்.

விக்னேஸ்வரன் சண்டித்தன  கதைகளை கைவிட வேண்டும். விமல் வீரவன்ச போன்றோர் இனவாதத்தை தூண்டுவதனை நிறுத்த வேண்டும். சண்டித்தனமான பேச்சுக்களினாலும், இனவாத செயற்பாடுகளினாலும் 30 வருட கால யுத்தம் தோற்றம் பெற்றது.

அதன் தாக்கமே இன்று பொருளாதார பாதிப்பாக உருவெடுத்துள்ளது. பொருளாதார தாக்கம் அனைத்து இன மகக்ளையும் ஆட்டிப்படைக்கிறது. வடக்கில் அரச கரும மொழியாக தமிழ் மொழி அமுலாக்கப்படுவதாக விமல் வீரவன்ச கூறுகின்றார்.

இலங்கையில் சிங்கள-தமிழ் பிரச்சினைக்கு தீர்வுகாண இருக்கும் ஒரே வழி அரச கரும  மொழியாக ஆங்கில மொழியை அறிவிப்பதே. அனைத்து நாடுகளிலும் அனைத்து இடங்களிலும் இன்று ஆங்கில மொழியே உள்ளது. எனவே இலங்கையின் அரச கரும மொழியாக ஆங்கில மொழியை அறிவிக்க வேண்டும்.

இலங்கையின் அரச கரும  மொழியாக ஆங்கில மொழியை அறிவித்தால் சிங்கள, தமிழ் பிரச்சினையும் தீர்ந்து விடும். நாடும் அனைத்து வழிகளிலும் முன்னேறும்.எவரும் மொழியுரிமை என குறிப்பிட்டுக் கொண்டு முரண்பட்டுக் கொள்ள மாட்டார்கள்.

அதேவேளை தனது நாட்டுக்காக உயிரைக்கொடுத்து போராடும் உக்ரைன் நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கியாகவே நான் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்க்கின்றேன்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்ட போது அரசாங்கத்தை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு பலமுறை அழைப்பு விடுத்தார். ஆசை ஆனால் பயம் என்பதால் அவர் அரசாங்கத்தை ஏற்கவில்லை.

நெருக்கடியான சூழலில் நாட்டு மக்களை பாதுகாப்பவரே உண்மையான தலைவர், சந்தர்ப்பாதிகள் உண்மையான தலைவர் அல்ல, நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

“சேறு பூசல்களினால் என்னை வீழ்த்த முடியாது. எனது பயணத்தை நான் தொடர்வேன்.” – இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

“சேறு பூசல்களினால் என்னை வீழ்த்த முடியாது. எனது பயணத்தை நான் தொடர்வேன்.” என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (ஜன.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்களை முன்வைக்கும் போது ஒரு சில அரச அதிகாரிகள் அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி, அந்த திட்டங்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.

வங்குரோத்து நிலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு முதலீடுகள் தடைப்பட்டுள்ளன. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரச தரப்பினர் அரசியல் நோக்கங்களை ஒரு புறம் வைத்து விட்டு நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாடு என்பதொன்று மிகுதியாக இருந்தால் தான் அனைவரும் அரசியல் செய்ய வேண்டும்.

தேர்தல் நடத்தும் நிலையில் நாட்டின் நிதி நிலைமை இல்லை. நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் அதன் தாக்கத்தையும் நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை. எதிர்தரப்பினர் மாத்திரம் தேர்தலை கோருகிறார்கள்.

தூர நோக்கமற்ற கொள்கை இல்லாத காரணத்தினால் மின்சாரம்,சுகாதாரம், வலுத்துறை ஆகிய துறைகளில் பல பிரச்சினைகளை தற்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மின்சாரம், நீர், எரிபொருள் உள்ளிட்ட சேவைகளின் நெருக்கடிகளை எதிர்கொள்ள எந்நிலையிலும் தயாராக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கஞ்சா பயிர்செய்கைளை சட்டபூர்வமாக்குமாறு நான் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஒரு சில அரச அதிகாரிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். ஒருசில அரச அதிகாரிகள் தான் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளார்கள். சேறு பூசல்களினால் என்னை வீழ்த்த முடியாது. எனது பயணத்தை நான் தொடர்வேன்.

வீதி கடைகளில் விற்பதற்காகவும்,அனைவரும் வாங்கி பயன்படுத்துவதற்காகவும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குமாறு கோரவில்லை, வர்த்தக பயிராக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன். கஞ்சாவை பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவார்கள், பயன்படுத்தாதவர்கள் பயன்படுத்த மாட்டார்கள்.நாட்டு மக்கள் அனைவரும் சிகரெட் பாவிக்கவில்லை, அதுபோல் தான் இதுவும்.

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்காத தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம்.இதனூடாக பல உற்பத்திகளை உருவாக்கலாம்.இலங்கை மக்களின் வாழ்க்கையுடன் கஞ்சா தொடர்புப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் இலங்கையர்கள் கஞ்சாவை உணவாக உட்கொண்டதுடன், புகைத்தலுக்கா பயன்படுத்தியுள்ளார்கள். தவறான சிந்தனைகள் மற்றும் முட்டாள்தனமான கருத்துக்களில் இருந்து வெளிவரும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றார்.

இலங்கைக்கான போலிக்கடவுச்சீட்டை வைத்திருக்கும் அமைச்சர் டயனா கமகே – அம்பலப்படுத்தியது குடிவரவு குடியகல்வு திணைக்களம் !

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை எனவும் அவரது வீசா கடந்த 2014 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் களஞ்சிய தரவுகளின் அடிப்படையில், நயனா சமன்மலி அல்லது டயனா நடாஷா என அழைக்கப்படும் நடாஷா கெகனதுர பிரித்தானிய பிரஜை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போலி பிறப்புச்சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்று போலிக் கடவுச்சீட்டை அவர் பெற்றுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்- டயனா கமகே இரட்டை குடியுரிமை கொண்டவர் அல்லர். எனினும் பிரித்தானிய குடியுரிமையுடன் இலங்கைக்கான போலிக்கடவுச்சீட்டை வைத்திருப்பவர் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மூலம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை நீதிமன்றுக்கு வழங்கி வழக்கு விசாரணைகளை முடிவுறுத்த ஒத்துழைக்குமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.