இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படி – ஜீவன் தொண்டமான்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படியாக அமையும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக நுவரெலியா, ரிகில்கஸ்கட பகுதியில் இன்று (26) கையெழுத்து திரட்டப்பட்டது. இதில் பங்கேற்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஜீவன் தொண்டமான் எம்.பி. கையொப்பம் இட்டார்.

அதன் பின்னர் நுவரெலியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான்,

” அரசியல் வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளது. இதற்கமையவே சாணக்கியன் எம்.பி. விடுத்த அழைப்பை ஏற்று மனுவில் நானும் கையொப்பம் இட்டேன்.

இற்றைக்கு 43 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிக தீர்வாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்தும் அந்த சட்டம் நீடிக்கின்றது. இதனை ஏற்க முடியாது. உண்மையான ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தின் முதல்படியாக அச்சட்டத்தை நீக்க வெண்டும்.

இது தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை காங்கிரஸ் தற்போது எதிர்க்கவில்லை. முன்னர் இருந்தே எதிர்த்து வருகின்றோம். எமது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நீதிமன்றம்கூட சென்றுள்ளார் என்றார்.

“என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார்.”- ஜீவன் தொண்டமான்

என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், எதிரணியில் இருந்தாலும் மக்களுக்கான எனது சேவைகள் தொடரும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின், 58 ஆவது ஜனன தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தெரிவுசெய்யப்பட்ட சில பாடசாலகளுக்கு மடிக்கணினிகளும், ´போட்டோ கொப்பி மெசின்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜீவன் தொண்டமான்,

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வெற்றிடத்தை எவராலும் நிரப்பமுடியாது. மக்களை மட்டுமே எனக்கு தந்துவிட்டு சென்றுள்ளார். அது போதும். அதுவே மிகப்பெரிய செல்வம். எனவே, எனது மக்களுக்காக என்னால், எமது ஸ்தாபனத்தால் செய்யக்கூடிய அனைத்தையும் நிச்சயம் நான் செய்வேன்.

அரசாங்கத்தில் பதவிகளை வகித்தாலும், இல்லாவிட்டாலும்கூட மக்களுக்கான சேவைகள் தொடரும். குடும்பம் என்றால் பிரச்சினைகள் இருக்கவே செய்யும். எமக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றை பேசி தீர்க்கலாம். அதைவிடுத்து பிரச்சினையை பெரிதுபடுத்தினால், அது எமக்கான அழிவு பாதையாகவே அமையும்.” – என்றார்.

“மக்களுக்காகவே  ராஜபக்ஷ அரசுடனான உறவை முறித்துக்கொண்டோம்.” – ஜீவன் தொண்டமான்

“மக்களுக்காகவே  ராஜபக்ஷ அரசுடனான உறவை முறித்துக்கொண்டோம்.” என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் மக்கள் பக்கம் நின்றே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவெடுத்தது. ஆனால் எமது சமூகத்தை காட்டிக்கொடுக்கும் விதத்தில் ஒரு சிலர் செயற்படுவதால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் என்பது எமது இலக்கல்ல என்பதை தேர்தல் காலத்திலேயே அறிவித்துவிட்டோம். கல்வியும் காணி உரிமையும்தான் பிரதான இலக்கு. அதனை அடைவதற்கே தீவிர முயற்சியில் இறங்கியுள்ளோம். எண்ணம்போல்தான் செயல் என்பார்கள். மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது கனவும்கூட.

நான் பதவிக்காக அரசியல் செய்பவன் அல்லன். மக்களுக்கானதே எனது அரசியல் பயணம். அதனால்தான் ராஜபக்ஷ அரசுடனான உறவை முறித்துக்கொண்டு, இன்று மக்கள் பக்கம் நிற்கின்றோம். அப்படி இருந்தும் வரலாறு தெரியாத சிலர் காங்கிரஸை விமர்சித்து வருகின்றனர்.

மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தில் இ.தொ.கா. பட்டி அணிவிக்கப்பட்டிருந்தது குறித்தும் விமர்சிக்கின்றனர். இ.தொ.கா என்பது மக்கள் இயக்கம். மக்களை பாதுகாத்த அரசியல் இயக்கம். மக்களுக்கு உரிமைகளை வென்றுக்கொடுத்த அரசியல் கட்சி. எனவே, அதை அணிவதில் சிக்கல் கிடையாது. இதற்கு ஏன் பதிலளிக்கவில்லை என சிலர் கேட்கின்றனர்.நாய்கள் குரைக்கும்போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது.

எமது மக்களுக்கு நில உரிமை வேண்டும். 150 வருடங்களாக நிலமற்றவர்களாக வாழ்கின்றோம். இதனை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியாவின் உதவியும் அவசியம். அதற்கான உறவு பாலமாக அண்ணாமலை இருப்பார் என நம்புகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“நான் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது கிடையாது.” – ஜீவன் தொண்டமான்

“நான் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது கிடையாது. அரசியலைவிடவும் சிறந்த நிர்வாகத்தையே செய்ய விரும்புகின்றேன்.”  என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ” எதையும் செய்யவில்லை என சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். புதுமையாக நான் எதையாவது செய்வதாக இருந்தால் அரசியல் பழிவாங்கலில் தான் ஈடுபட்டிருக்க வேண்டும். அதை நான் செய்யவில்லை. குறைவாக முழுமைப்பெறாத நிலையில் இருந்த திட்டங்களை முழுமைப்படுத்துவதில் தீவிரம் காட்டினேன்.

நான் அமைச்சு பதவியை ஏற்கும்போது அந்த அமைச்சு 2 ஆயிரத்து 300 மில்லியன் ரூபா கடன் சுமையில் இருந்தது. நல்லாட்சியின்போது 4 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தில் 699 வீடுகள்தான் மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன. நான் அமைச்சு பதவியை ஏற்ற பின்னர்  ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை இம்மாதத்துக்குள் கையளிக்கப்படும்.

அவர்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை நிறுத்தியிருக்க முடியும். அதனை நாம் செய்யவில்லை. எனது அமைச்சின் புதிய வேலைத்திட்டங்கள் அடுத்தவருடம் முதல் ஆரம்பமாகும்.

அதேவேளை,  கூட்டு ஒப்பந்தம் மூலம் நாம் தொழிலாளர்களை பாதுகாத்தோம். ஆனால் அது தொடர்பில் போலி பரப்புரைகளை முன்னெடுத்து எம்மையும் தொழிலாளர்களையும் தூரப்படுத்த முற்பட்டனர். அன்று கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக செயற்பட்ட சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இன்று சந்தா பணத்துக்காக ஒப்பந்தம் வேண்டும் என்கின்றன. எனவே, சுயநல அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கை சனத்தொகையில் 10 வீதமானோர் அரச சேவையில் உள்ளனர். கொரோனா நெருக்கடி நிலையால் இனி ஆட்சேர்ப்பு நடக்குமா என தெரியவில்லை. எனவே, நாம் சுயதொழில் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிலர் வேலைதேடியே காலத்தை வீணடிக்கின்றனர். சொந்த முயற்சி மீதும் நம்பிக்கை செலுத்த வேண்டும்.

நாம் அபிவிருத்திகளை செய்தாலும் திறப்புவிழா நடத்தி பிரச்சாரம் செய்யவில்லை. அரசியலைவிடவும் சிறந்த நிர்வாகத்தைதேய நான் விரும்புகின்றேன்.” என்றார்.