இந்தியாவின் அனைத்து முதலீடுகளையும் இழக்கும் நிலையில் இலங்கை – எச்சரிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க !
இந்திய கூட்டு நிறுவனமான அதானியுடன் மன்னாரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தவறியதை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார்.
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புக்கான பல வழிகளை நான் ஆராய்ந்தேன். துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய அரசாங்கம் மன்னாரில் அதானி புதுப்பிக்கத்தக்க திட்டத்தைத் தொடரத் தவறிவிட்டது என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அதானி பசுமை எரிசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை என்றார். இந்தப் போக்கு அனைத்து இந்திய முதலீடுகளையும் மோசமாக பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை- இந்திய கூட்டு முயற்சியில் திருகோணமலையில் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி – அமைச்சரவை அங்கீகாரம் !
திருகோணமலை, சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் 50 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி நிலையமும், இரண்டாம் கட்டத்தில் 70 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் நிறுவுவதற்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த முயற்சியானது இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் இந்தியாவின் தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் (NTPC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாட்டு அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அன்று பயங்கரவாதி – இன்று: இலங்கை ஜனாதிபதி அநுராவிற்கு அமோக வரவேற்பு! அனுராவின் பதாதைகள் டெல்லி வீதிகளில்!
‘இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது பொருளாதார உறவை மேம்படுத்துவது, சுற்றுலாத்துறையை முதலீட்டை ஊக்குவிப்பது, எரிசக்தியில் பங்காளித்தன்மையை வலுப்படுத்தவது, பிராந்திய பாதுகாப்பு பற்றிய விடயங்கள் பேசப்பட்டதாகவும், இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம், இலங்கை – இந்திய உறவை மேலும் உறுதிப்படுத்துவாக அமைந்துள்ளது’ என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 15 ஆன நேற்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பிற்பகல் 5:30 மணியளவில் டெல்லியை சென்றடைந்தார். ஐனாதிபதிக்கு இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan), இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்கூமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர். மேலும் டெல்லித் தெருக்களில் இலங்கை ஜனாதிபதியை வரவேற்கும் படி அவரது நிழற்படத்தோடு அலங்கார பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.
தற்போது நக்சல்பாரிகளை இல்லாதொழிப்போம் என்று சபதமிட்டு, சதீஸ்கரில் அவர்களைப் படுகொலை செய்துவரும் இந்தியா, இதே பாணியில் 1971 ஏப்ரலில் தென்பகுதிக் காடுகளில் ஜேவிபியை வேட்டையாடியது. வேட்டையாடப்பட்ட ஜேவிபியின் பாசறையில் வளர்ந்த ஒருவருக்கு இலங்கையின் ஜனாதிபதியாக செங்கம்பள வரவேற்பை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கை பல்வேறு நல்லவிடயங்களுக்குமாக சர்வதேசத்தில் தன்னுடைய பெயரை நிலைநிறுத்தியுள்ளது. அதில் இதுவும் ஒன்றாக அமைகின்றது. 1971 இல் இந்தியப் படைகள் தெற்கில் என்ன செய்தனர் என்பதை இக்காணொலி கூறுகின்றது:
இப்பயணம் இந்தியாவிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம். வழக்கப்படி இலங்கையில் புதிதாக பதவியேற்கும் ஜனாதிபதிகள் முதன் முதலில் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் இந்தியாவிற்கேயாகும். ஜனாதிபதி அநுரவின் இந்தியப்பயணத்தில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த ஆகியோரும் உடனிருந்தார்கள். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய உயர்மட்ட இராஜதந்திரிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
அத்துடன் டெல்லியில் நடைபெறும் இரு நாடுகளுக்கிடையேயான முதலீடு மற்றும் வியாபார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான வர்த்தகக் கூட்டத்திலும் ஜனாதிபதி அனுரா கலந்து கொள்கின்றார். இப்பயணத்தின் இறுதியாக டெல்லியில் அமைந்துள்ள புத்த காயாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய – இலங்கை சமய மற்றும் கலாசார இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில் மற்றும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா முறையுடன் “ஸ்ரீ ராமாயண பாதை” (Ramayana trail) யாத்திரை திட்டத்தின் உத்தியோகபூர்வ தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில், இடம்பெற்றது.
அயோத்தியில் உள்ள மிகப் பெரிய ஸ்ரீ ராம பூஜை மாளிகையின் தலைமைப் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் சுவாமியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இந்த சந்தர்ப்பத்தில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
“ஸ்ரீ ராமாயண பாதை” யாத்திரைத் திட்டம் மூலம் இராமாயண காவியத்தில் குறிப்பிடப் பட்டுள்ள இலங்கை முழுவதும் உள்ள பிரதான ஒன்பது முக்கிய இடங்களை இந்து பக்தர்களின் புனித யாத்திரை மற்றும் சுற்றுலாப் பயணத்திற்காக பிரபல்யப்படுத்தப்படும்.
இது ஆன்மீக மற்றும் கலாசார பாரம்பரியத்தில் ஆர்வமுள்ள மில்லியன் கணக்கான இந்திய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த இடங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்பை பக்தர்களுக்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த வரலாற்று ஆலயங்களுடன் தொடர்புடைய பண்டைய ஆன்மீக நிகழ்வுகள் செயற்கை நுண்ணறிவு (AI), Augmented reality, மற்றும் மெய்நிகர் யதார்த்தம் (Virtual reality) போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் அனிமேஷன் செய்து பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவும் திட்டமிடபபட்டுள்ளது.
மன்னாரிலுள்ள ஆதாம் பாலம் முதல் நுவரெலியா சீதா எலிய வரை இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு இடமும் இந்த யாத்திரைத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கிறது.எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கையில் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகள் சொந்த நாட்டுக்குள் இரண்டாம் தரப்பினராக அடையாளப்படுத்தப்படுவார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாதுக்க வேரகல பகுதியில் சனிக்கிழமை (02) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது.மக்கள் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.வாழும் சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.பொருளாதார மற்றும் சமூக பாதிப்பை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.இந்தியாவின் செல்வந்தரான அதானிக்கு இலங்கையின் பெரும்பாலான வளங்களை வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தியின் பங்குகளை அதானி நிறுவனத்துக்கு வழங்குவதால் நடுத்தர மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் டெலிகொம் நிறுவனத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல் இலங்கை மின்சாரத்தை பல கூறுகளாக பிரித்து அதனையும் இந்தியாவுக்கு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பொருளாதார கேந்திர மையங்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கும் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படும். இவ்வாறான நிலையில் இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் சுதந்திரமாக தமது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் சொந்த நாட்டுக்குள் இரண்டாம் தர பிரஜைகளாக கருதப்படுவார்கள். இலங்கை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாற்றமடையும்.
நாடடின் தேசிய வளங்களை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஏதும் பேசுவதில்லை.அனைவரும் இந்தியாவுக்கு துதி பாடிக் கொண்டிருக்கிறார்கள்.பொருளாதார பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு நாட்டின் சுயாதீனத்தை இந்தியாவிடம் விட்டுக் கொடுக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்படும் ராஜபக்ஷர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதற்காக மக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு இடமளித்துக் கொண்டு இருக்க முடியாது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தீவுப்பகுதிகளில் மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் பெற்றுள்ளது.
நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் புதிய மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஹைபிரிட் மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை U Solar Clean Energy Solutions (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி S.ஜெய்ஷங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்ஷங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
மீன்பிடித் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக தமிழக முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இலங்கைக் கடற்படையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெய்ஷங்கரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
“திருகோணமலையில் முதலீடு செய்ய இந்தியாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள்.” என என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் அபிவிருத்தி திட்டங்களுக்கான முதலீடுகளை மேற்கொள்வதற்கு சகல நாடுகளுக்கும் வாய்ப்பளிக்கப்படும். அந்த அடிப்படையிலேயே திருகோணமலையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எனவே இவ்விடயத்தில் இந்தியா, சீனா, அமெரிக்கா என்று பாகுபாட்டுடன் சிந்திப்பது தவறாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார் .
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வீழ்ச்சியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்குள் நடைமுறை சாத்தியதமான வழிமுறைகள் எவையும் இல்லை.
நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்காவிட்டால் இலங்கையை என்றுமே கட்டியெழுப்ப முடியாது.
இவ்வாண்டுக்குள் கடன் மறுசீரமைப்புக்களை நிறைவு செய்தால், அடுத்த வருடத்தில் அபிவிருத்தி திட்டங்களை மீளத் தொடங்குவதற்கான கடனுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு எந்த நாடுகள் முன்வந்தாலும் அவற்றுக்கு வாய்ப்பளிக்கப்படும்.
இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா என்று பாகுபாட்டுடன் சிந்தித்தால் அது தவறாகும். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை நன்கு அவதானிக்க வேண்டும்.இவ்வனைத்து நாடுகளும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதன் ஊடாகவே அசுர வேகத்தில் அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கின்றன.
அதன் அடிப்படையிலேயே திருகோணமலையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் மாத்திரமின்றி இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதே எமது இலக்காகும். அதற்கு வாய்ப்பளிக்காவிட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது.” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கரிசனைகளுக்கு முரணான எந்தவொரு செயற்பாட்டையும் தாம் ஆதரிக்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் அதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி ‘ஷி யான் 06’ என்ற சீன ஆய்வுக்கப்பல் நாட்டுக்கு வருகைதரவுள்ளது.
இவை இலங்கையில் இந்திய – சீன இராஜதந்திர மோதலுக்கு வழிவகுக்கும் எனவும், மேற்குறிப்பிட்ட நாடுகளுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அரசியல் விமர்சகர்கள் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும் இலங்கைக்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என்றும், இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் மற்றும் சீன ஆய்வுக்கப்பலின் வருகை என்பன நிகழ்ச்சி நிரலிடப்பட்டதன் அடிப்படையில் நடைபெறுவதனால் எவ்விதமான குழப்பங்களும் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகள் நியாயமானவை என்று இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இவ்விவகாரத்திலும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்தியா வெளிப்படுத்தும் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் முற்றிலும் நியாயமானவை என்று சுட்டிக்காட்டினார்.
இந்தியாவுக்கு சார்பாக செயற்படவேண்டும் என்ற நோக்கில் இக்கருத்தை வெளியிடவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ‘இந்தியா இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் உள்ளது. இருப்பினும் சீனா இப்பிராந்தியத்துக்கு உட்பட்ட நாடு அல்ல. எனவே இந்தியாவின் நட்பு நாடு அல்லாத சீனா, இப்பிராந்தியத்தின் பிறிதொரு நாட்டில் முன்னெடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பாதுகாப்புசார் கரிசனைகளைத் தோற்றுவிப்பது நியாயமானதொன்றேயாகும்’ என்று தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் கூறுவதில் அர்த்தமில்லை என்றும், மாறாக இதில் இந்தியாவின் கருத்துக்கு இடமளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்திய சுமந்திரன், இந்தியாவின் கரிசனைகளுக்கு முரணான எந்தவொரு செயற்பாட்டையும் தாம் ஆதரிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டார்.
இந்திய அரசை நம்பியதினால் தமிழர்களுக்கு முதலில் ஏற்பட்டது அழிவு இரண்டாவது ஏற்பட்டது பேரழிவு இனி ஏற்பட இருப்பது மீள முடியாத பேரழிவு. இலங்கையில் தமிழ் – சிங்கள மக்களிடையே இருந்த முரண்பாட்டை தீர்த்து வைக்கத் திறமையற்ற, படித்த ஆனால் மூன்றாம் தர சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள், தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்ப போட்டி போட்டு, இனவாதத் தீயை வளர்த்தன. இவர்கள் இலங்கையை அந்நிய சக்திகளிடம் கையளித்து, கடந்த 75 ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்து வருகின்றனர். அதன் உச்சமாக தற்போது இலங்கையின் இயற்கைத்துறைமுகமான திருகோணமலை எதிர்கால யுத்தத்தின் மையப்புள்ளியாக மாற்றப்பட்டு வருகின்றது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 30 பேர்வரை இரு இரு விசேட விமானங்களில் பெப்ரவரி 14 அன்று இலங்கை வந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்.
இன்று பெப்ரவரி 18இல் தமிழகத்தின் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வவுனியா ஆலயத்தில் மதக் கலகத்தை தூண்டிவிடும் வகையில் உரையாற்றினார். இது “சிவ பூமி, ராமஜன்ம பூமி, ஆரியச் சக்கரவர்த்தி பிறந்த பூமி” என்றெல்லாம் புகழாரம் சூட்டி ராமாயண யாத்திரை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கும் என்றும் இந்தியாவில் இருந்தும் யாத்திரை வரும் அதற்காகவே தமிழகத்தில் இருந்து பலாலிக்கு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. மன்னார் – ராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்றெல்லாம் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயரை உச்சரிக்காது அர்ஜூன் சம்பத் வெளிநாட்டவர்கள் இங்கு வந்து மதமாற்றம் செய்வதாகவும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு மதவாதத்தை தூண்டும் செயல் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஊடகவியலாளராக ஒளிப்பதிவாளராகக் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் “இந்தியாவின் தமிழகத்தின் சாத்தான்கள் வந்து எங்களுக்கு வேதம் கற்றுக் கொடுக்கிறார்கள்” என்று சினந்து கொண்டார். இந்த சாத்தான்கள் ராமர் யாத்திரையை இங்கும் நடத்தி மசூதிகளையும் தேவாலயங்களையும் நொருக்குவதற்கு இப்பவே திட்டமிட்டுவிட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். அந்த ஆலயத்தின் அடியவர் தேசம்நெற் வட்ஸ்அப்க்கு அனுப்பி வைத்த குறிப்பில் இவ்வாறான மதத்தை அரசியலோடு கலக்கின்ற பிரச்சாரங்களுக்கு ஆலயங்கள் இடமளிப்பதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்த மயூரன், சண்முகரத்தினம் போன்றவர்கள் இவ்வாறான மதஅடிப்படைவாதிகளை ஆலயங்களுக்கு அழைத்து எமது ஆலயங்களை மத அடிப்படைவாதிகளின் கூடாரங்கள் ஆக்குவதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தேசம்நெற் க்கு கிடைக்கும் செய்திகளின்படி திருகோணாமலையில் உள்ள 90 எண்ணைக் குதங்களில் 80 வரையான குதங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகின்றது. அமெரிக்க ராஜதந்திரிகளின் வருகை திருமலை விவகாரம் பற்றியது அல்ல என அமைச்சர் பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் ஒவ்வொரு எண்ணைக் குதமுமே நூறு பெற்றோல் நிலையங்களுக்கான பெற்றோலியத்தை சேகரித்து வைக்கும் கொள்ளளவைக் கொண்டன எனத் தெரிவித்தார். இவ்எண்ணெய்க் குதங்கள் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் யுத்த தளபாடங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பிரித்தானியாவால் உருவாக்கப்பட்டவை. இன்றைய உக்ரைன் நிலைமையொன்று அதாவது அமெரிக்க சக இந்தியா எதிர் சீனா உருவாகுமானால் அதன் முதல் பொறி திருகோணமலையிலேயே தெறிக்கும் என்பது உறுதியாகி வருகின்றது.
இந்தியா காலம் காலமாக தன்னுடைய நலனை மட்டும் கருத்தில் கொண்டே இலங்கைத் தமிழர்களைப் பகடைக்காய்களாக பாவித்து வருகின்றது. தமிழர்களும் தமிழ் தலைவர்களும் குனியக் குனிய இந்தியா மேலும் மேலும் தமிழர்களைக் குட்டிக்கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் இந்திய நலன்சார்ந்த அரசியலால் இதுவரை தமிழர்கள் இழப்பைத் தவிர எதனையும் சந்தித்தில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைக் கூட இந்தியா முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கவில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் அது இன்னமும் தமிழ் மக்களுக்கு எட்டாத கனியாகவே உள்ளது. 36 ஆண்டுகளாக நாய்க்கு எலும்புத்துண்டு போடுவது போல் இந்திய அரசு 13ஆவது திருத்தச் சட்டத்தைக் காட்டிக் காட்டி தமிழ் மக்களை அவர்களின் தன்மானத்தை நொறுக்கி வருகின்றது.
இலங்கையில் உள்ள இன முரண்பாட்டுக்கு உயிரூட்டி அதற்கு வன்முறை வடிவம் கொடுத்து. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உசுப்பி விட்ட இளைஞர்களை இந்திய உளவுப்படை கோழிக்குஞ்சுகளை பிடிப்பது போல் துப்பாக்கிகள் தாறோம், குண்டுகள் தாறோம், பயிற்சியும் தாறோம் என்று வளைத்துப் போட்டனர்.
சிங்கள கிராமங்களுக்குள் சென்று சிங்களவர்களைக் கொல்லுங்கள் நிறைய துப்பாக்கிகளும், குண்டுகளும், பயிற்சிகளும் தருவோம் என்றதும், நான் முந்தி நீ முந்தி என்று தமிழீழ விடுதலைப் புலிகள் முந்திக் கொண்டனர். கொக்கிளாய், நாயாறு, அனுராதபுரம் படுகொலைகள் நடந்தேறியது.