இலங்கை இராணுவம்

இலங்கை இராணுவம்

ஒரு லட்சமாக இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்படும் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்

2030 ஆம் ஆண்டளவில் நாட்டிலுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “போருக்குப் பின்னர், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை ஆராய்ந்து வருகின்றோம்.

 

எமது நாட்டுக்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்துவது ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாதுகாப்புச் சபையின் கடப்பாடு ஆகும்.

 

அதன்படி, பாதுகாப்பு ஆய்வு 2030 என்ற திட்டத்தின் கீழ் தனி நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, எங்களிடம் 208,000 வீரர்கள் உள்ளனர். அதனை ஒரு இலட்சம் வரை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

 

 

நாங்கள் யாரையும் நீக்குவதற்கு எதிர்பார்க்க பார்க்கவில்லை. மேலும், கடற்படை மற்றும் விமானப்படை பலப்படுத்தப்பட வேண்டும்.

 

புவியியல் ரீதியாக, நாம் மிகவும் சிக்கலான முக்கியமான இடத்தில் இருக்கிறோம்.

 

எனவே, கடற்படையை பலப்படுத்துவதையும் ஒரு திட்டமாக செயல்படுத்தி வருகிறோம்” என இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் வதிவிடத்துக்காக அரச காணிகள் வழங்கும் கருத்திட்டம் – திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இராணுவத்தினரின் வதிவிடத்துக்காக அரச காணிகள் வழங்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக இதன் போது பின்பற்றப்படும் பொறிமுறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடமைகளின் போது உயிர் நீத்தவர்கள், காணாமல் போனோர்  மற்றும் இயலாமைக்குட்பட்டோர், ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியில் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முப்படையினர் இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் இராணுவத்தினருக்கு வதிவிடத்துக்காக அரச காணிகள் வழங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பொறிமுறை தொடர்பாக காணி ஆணையாளர் நாயக்கத்தினால் அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் அவ்வப்போது சுற்றறிக்கை ஆலோசனைகள்  வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு முறையின் கீழ் இராணுவத்தினருக்கு  உரித்தாகின்ற சலுகைகள் போதியளவாக இன்மையால், அனுபவித்துக் கொண்டிருக்கும் காணிகளுக்காக  நிபந்தனைகளுடன் கூடிய சட்டபூர்வ ஆவணங்களில் காணப்படுகின்ற  மட்டுப்பாடுகளால் குறித்த காணிகளில் உண்மையான பொருளாதார பெறுமதிகளை எடுத்தியம்பப்படுவதில்லை என்பது  கண்காணிக்கப்பட்டுள்ளது.

அதனால் இராணுவத்தினருக்கு காணிகளை வழங்கும்போது தற்போது கடைப்பிடிக்கப்படுகின்ற பொறிமுறையால் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் உள்ளடங்கிய  தற்போதுள்ள  பொறிமுறையை திருத்தம் செய்வதற்காக தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு கூலிப்படை வீரர்களாக கடத்தப்படும் இலங்கை இராணுவ வீரர்கள் !

முப்படைகளிலும் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுலா விசா மூலம் அழைத்துச் சென்று கூலிப்படைகளில் அமர்த்தும் மனிதக் கடத்தல் செயற்பாடு இடம்பெறுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அவர்களில் சிலர் யுத்தத்தில் பலத்த காயமடைந்து ஆதரவற்ற நிலையில் பரிதாபமாக உயிரிழப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மனித கடத்தல் செயற்பாடு தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 0117192142 அல்லது 0117192250 என்ற இலங்கை கடற்படைத் தலைமையக தொலைபேசி இலக்கங்களுக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் முன்னாள் இராணுவீரர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

இலங்கையின் முன்னாள் இராணுவீரர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 

உக்ரைன் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு இலங்கை படையினர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 70 முன்னாள் இராணுவ வீரர்கள் உக்ரைனின் வெளிநாட்டுப் படைப்பிரிவில் இணைந்து கொள்ள விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்நிலையில், வெளிநாட்டில் இலங்கையின் முன்னாள் இராணுவீரர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் எதுவும் செய்ய முடியாது என அவர் கூறியுள்ளார்.

உக்ரைனின் படையணியினரோடு இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் இணைந்து செயற்படுவதை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு அவர்கள் ஓய்வுபெற்ற பின்னர் தங்கள் சொந்த விருப்பத்தில் உக்ரைன் சென்றுள்ளனர்.

இலங்கையர்கள் அனைவருக்கும் நடமாடுவதற்கான சுதந்திரம் உள்ளது மேலும் அவர்கள் அங்கு சென்றதும் இலங்கையால் அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தாங்கள் தங்கியுள்ள நாட்டின் சட்டங்களை மீறினால் அல்லது இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பின்னர் தலைமறைவானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

உக்ரைனிற்காக போரிட சென்ற முன்னாள் இராணுவவீரர்கள் குறித்த புள்ளிவிபரங்கள் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்துள்ளது.

வடக்கில் சுமார் 10,000 ஏக்கர் நிலம் இராணுவத்தின் பிடியில் – நாடாளுமன்றத்தில் சிவஞானம் சிறீதரன் !

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முப்படைகள், பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாகத் திரட்ட முடிந்த தகவல்களைக் கொண்டு, தன்னால் தயாரிக்கப்பட்ட விவரண அறிக்கையை சபாபீடத்திற்கு சமர்ப்பித்து இன்றையதினம் (18) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 4378.8 ஏக்கரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 2433.79 ஏக்கரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1578.27 ஏக்கரும், வவுனியா மாவட்டத்தில் 1021.55 ஏக்கரும், மன்னார் மாவட்டத்தில் 130.77 ஏக்கருமாக வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 9543.18 ஏக்கர் காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திணைக்கள மட்டங்களிடம் கோரியதற்கமைய, கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தின் ஆட்குறைப்பு தொடர்பில் பேசியதற்காக பாதுகாப்புச் செயலாளரால் அச்சுறுத்தப்பட்டேன் – பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி

அண்மையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத் தளபதியும் தம்மை அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி பாராளுமன்றில் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை முன்வைத்து தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் இராணுவத்தின் ஆட்குறைப்பு தொடர்பில் அவர் கருத்து வெளியிட்ட போது, ​​பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தைக் குறைப்பதற்கு இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதை விட உயர்மட்ட இராணுவ அதிகாரிகளின் செலவினங்களைக் குறைப்பதே சிறந்தது என குழுக் கூட்டத்தில் தாம் குறிப்பிட்டதாகவும், பாதுகாப்புச் செயலாளரே இவ்வாறு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக இவ்வாறான அச்சுறுத்தல் அறிக்கைகளை வெளியிடுவது நிலையியற் கட்டளைகளுக்கு எதிரானது எனவும், அவர்களை சிறப்புரிமைக் குழுவின் முன் அழைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது மிகவும் பாரதூரமான நிலை எனவும் குரல் பதிவுகளை சரிபார்த்து விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தேசிய பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான வகையில் இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேறும் இராணுவ வீரர்கள்!

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் ஆயுதப்படையின் இருபத்தைந்து அதிகாரிகள் உட்பட மூவாயிரத்து ஐநூறுக்கும் அதிகமானோர் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் மட்டும், பத்து அதிகாரிகள் உட்பட சுமார் 1,500 ஆயுதப் படை வீரர்கள் வெளியேறியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் உட்பட பதின்மூன்று அதிகாரிகள் தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்று இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக புதிய கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்கும் கடவுச்சீட்டுகளை புதுப்பிப்பதற்கும் முப்படைகளின் தளபதிகளின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு குடிவரவு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் பொருளாதார சிரமங்களினால் கடனை செலுத்த முடியாத நிலை, அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளுக்கு உள்ள வசதிகள் குறைப்பு போன்ற காரணங்களால் இராணுவத்தினர் வெளியேற ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை கடந்த வருடம் டிசம்பர் மாதமளவில் 14000த்துக்கும் அதிகமானோர் சட்ட விரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறியதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தை விட்டு 14000க்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக தப்பிச்சென்றுள்ளனர் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து சிலர் கருத்து தெரிவிக்கிறனர். ஆனால் அவர்களின் கருத்துப்படி, பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையை எந்த அடிப்படையும் இல்லாமல் குறைக்க முடியாது. மேலும் சில அறிவியல் ஆய்வுகளின் பின்னர் இராணுவத்தை சரியான மட்டத்தில் முன்னெடுப்பது தான் நாட்டிற்கு ஏற்றது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் கூறினார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த, செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு மூலோபாய திட்டங்களின் கீழ், நாட்டுக்கு ஏற்ற வகையில் இராணுவத்தை மாற்றியமைக்க வேண்டும். நாட்டின் முப்படைகளையும் தற்போதைய நிலைக்கு ஏற்ற வகையில் தயார்படுத்துவதற்கு இது வசதியாக அமையும் என நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

தற்போதைய மற்றும் எதிர்கால சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஏற்ற வகையில் இந்த நாட்டின் முப்படைகளையும் தயார்படுத்த எதிர்பார்க்கின்றோம். ஒவ்வொரு தனிப்பட்ட அமைப்புக்கள் அல்லது தனிநபர்களின் தேவைக்கு ஏற்ற விதத்தில் இராணுவத்தை குறைக்கும் எந்தவித அதிகாரமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அவர் கூறினார். தற்போது இராணுவம் சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது, அதன்படி, நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய இராணுவத்தினருக்கு பொது மன்னிப்புக் காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது முதன்முறையாக வழங்கப்படும் பொது மன்னிப்பு காலமாக இல்லாவிடினும், வெளிநாடு சென்றுள்ள இராணுவப்படை உறுப்பினர்களுக்கும் இப்பொது மன்னிப்பை பெற்றுக் கொள்ளவும் அல்லது அவர்களுக்கு வர முடியாவிட்டால், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உரிய ஆவணங்களை கையளித்து பொதுமன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியுமான வாய்ப்பை இராணுவம் முதன்முறையாக வழங்கியுள்ளது.

இதன்படி, இம்மாதம் 29ஆம் திகதி வரையில் 14,127 பேர் சட்டவிரோதமாக தப்பிச் சென்றுள்ளனர் என்று ஆயுதப்படையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது மன்னிப்பின் கீழ் அவர்கள் சுதந்திரமாக சேவையை விட்டுச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஓய்வுபெற்ற மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் நலனுக்காக போர் வீரர்களுக்கான நலன்புரி பிரிவை நிறுவி அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான நலன்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“பாதை அமைக்கவும் , சுத்தப்படுத்துவதற்கும் பயன்படுத்தி இராணுவத்தை அழித்தவர் கோட்டாபய ராஜபக்ஷ” – இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு!

வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இனி போராட்டத்தில் ஈடுப்பட்டால் இராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்குவேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கை சிவில் பிரஜைகள் தான் இராணுவத்திலும், பாதுகாப்பு தரப்பிலும் சேவையாற்றுகிறார்கள் என்பதை ஜனாதிபதி தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இராணுவத்தினரும் பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். இராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்க வேண்டுமாயின் ஜனாதிபதி இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இராணுவத்தை வரவழைக்க நேரிடும். இராணுவத்தினரும் பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள்

வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள். ஆகவே போராட்டத்தை முடக்குவது குறித்து அவதானம் செலுத்துவதை விடுத்து பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண அவதானம் செலுத்துமாறும், அதற்கு கட்சி என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டை மாத்திரமல்ல, இராணுவத்தையும் இல்லாதொழித்து சென்றுள்ளார் என இராணுவத்தினர் குறிப்பிடுகிறார்கள்.

கோட்டபய ராஜபக்ஷ கால்வாய், சுத்தப்படுத்துவதற்கும், கட்டடம் அமைப்பதற்கும், வீதி நிர்மாணிப்புக்கும் இராணுவத்தை பயன்படுத்தினார். அமுதா கத என்ற விசேட படையணியை உருவாக்கி 40 ஆயிரம் பேரை இணைத்துக்கொண்டு தனது இராணுவ நிலைப்பாட்டை மேம்படுத்தினார்.

இதன்பிறகு விவசாயத்துறை தொடர்பில் படையணியை ஸ்தாபித்து விவசாயத்தையும் முழுமையாக இல்லாதொழித்தார். நான் இராணுவத்தை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை. இன்று இராணுவத்திற்காக வரிந்துக் கொள்பவர்கள் இராணுவத்தின் சம்பளம் தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இராணுவத்தினரது சம்பள அதிகரிப்புக்காக 20 பில்லியன் ரூபா மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகிய எமக்கே ஒன்றும் தெரியாது. தெரிந்தவர்களினால் நாடு சீரழிந்துள்ளது. இருப்பதையும் சீரழிக்க வந்துள்ளார்கள். இராணுவத்தினரை விற்று பிழைத்து அரசியல் செய்யும் தரப்பினர் இராணுவத்தினரது சம்பளம் பற்றி கருத்துரைக்கவில்லை.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை.” – இலங்கை இராணுவம் அறிவிப்பு !

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பா.நிரோஸ் தகவலரியும் ஆணைக் குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு நேற்று (வியாழக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளது.

2019ஆம் ஆண்டும் “எங்களிடம் புலிகள் சரணடையவில்லை” என ஊடகவியலாளரின் தகவலறியும் விண்ணப்பத்தை இராணுவம் மறுத்திருந்ததது.

இது தொடர்பான மேன்முறையீடு மூன்று வருடங்களுக்குப் பின்னர் நேற்று பரிசீலிக்கப்பட்டது.

“யுத்த பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் புலிகளா? பொதுமக்களா? என்பது எமக்கு தெரியாது. நாம் பொறுப்பேற்று கொண்டபோது பதிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

எம்மிடம் வந்தவர்களை பஸ்களில் ஏற்றி புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் கட்டுப்பாடுகளில் இருந்த முகாம்களில் சேர்த்தோம். அதன் பின்னர் புனர்வாழ்வு பணியகமே அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.” எனவும் இராணுவம் சாட்சியம் வழங்கியது.

ஆனால், ஊடகவியலாளர் நிரோஸ் சார்பாக ஆணைக்குழுவில் முன்னிலையான சட்டத்தரணி ஸ்வஸ்திக்கா இதனை மறுத்ததோடு இராணுவத்திடம் புலிகள் சரணடைந்தமைக்கான ஆதாரங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தார்.

மேலும், புனர்வாழ்வு பணியகத்திடம் இராணுவத்தினம் கூறும் தகவல்கள் இல்லை என, புனர்வாழ்வு பணியகம் வழங்கியுள்ள தகவல்களையும் சட்டத்தரணி ஸ்வஸ்திக்கா ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆணைக்குழு, “அரசாங்கமே இந்த விடயங்களை சர்வதேச அமைப்புகளுக்கு பல்வேறு முறை வழங்கி இருக்கிறது. எனவே, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இப்போது மறைப்பதற்கு ஒன்றுமில்லை.” என இராணுவத்துக்கு அறிவித்தது.

புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமைக்கான எழுத்துமூல சமர்ப்பணங்களை 10 நாட்களுக்கு இராணுவத்துக்கு ஊடகவியலாளர் நிரோஸ் வழங்க வேண்டும்.

அதுபோல இராணுவமும் எழுத்துமூல சமர்ப்பணங்களை விண்ணப்பதாரருக்கு வழங்கவும் ஆணைக்குழு உத்தரவிட்டது. ஜனவரி 4ஆம் திகதி மனு மீள ஆணைக்குழு முன்பாக விசாரிக்கப்பட விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.