இலங்கை இறப்பு வீதம்

இலங்கை இறப்பு வீதம்

பொருளாதார நெருக்கடியின் எதிரொலி – இலங்கையில் அதிகரிக்கும் இறப்பு விகிதம்!

பொருளாதார பாதிப்பினால் நாட்டில் இறப்பு வீதம் உயர்வடைந்து,பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது ஆனாால்  பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.

 

ஆனால் சமூக கட்டமைப்பில் மக்கள் வாழும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற வரித்திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

தேர்தலுக்கான அறிகுறிகள் இடம்பெறவுள்ள நிலையில் மின்கட்டணம்,அத்தியாவசிய உணவு பொருட்கள் குறைக்கப்படுகிறது.உரித்து வழங்கப்படுகிறது.

 

யுக்திய சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.ஆகவே வெகுவிரைவில் தேர்தல் ஒன்றை எதிர்பார்க்கலாம்.

 

நாட்டில் 57 இலட்சம் குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களில் 91 சதவீதமானோரின் வாழ்க்கை செலவுகள் உயர்வடைந்துள்ளன.

 

பெரும்பாலான குடும்பங்கள் மூன்று வேளை உணவை இரண்டு வேளையாக மட்டுப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.ஆனால் நாடு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.

 

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு மொத்த சனத்தொகை வளர்ச்சி 1 இலட்சத்து 44 ஆயிரத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. பிறப்பு வீதமும், குறைவடைந்துள்ளது..பொருளாதார பாதிப்பால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தவர்களில் 7120 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

 

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மாத்திரம் 13,1180 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். 3 இலட்சம் சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிறு கைத்தொழில் முயற்சியாண்மையாளர்களில் 15 ஆயிரம் பேரின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.

 

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்சிப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

 

ஆனால் கடந்த ஆண்டு மாத்திரம் ஏற்றுமதி பொருளாதாரம் ஒரு பில்லியன் டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளது.நடைமுறையில் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை.நிவாரணம் வழங்கி மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.