இன்று அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் சுமந்து செல்ல முடியாத பாரிய பாடசாலை புத்தகப் பைகளை பாடசாலைக்கு கொண்டு செல்வது அவர்களின் முதுகுத்தண்டு குறைபாடுள்ள குழந்தைகளாக மாறுவதற்கு பிரதான காரணமாக அமைவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
எனவே,கல்வி அதிகாரிகள் கண் திறந்து குழந்தைகள் கல்வியை எளிதாக தொடர்வதற்கு தேவையான பின்னணியை தயார் செய்யுமாறு நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்தினார்.
‘ஸ்கொலியோசிஸ்’ எனும் முதுகுத்தண்டு நோயை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்காக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவ மாணவிகள் பங்கேற்றலுடன் விழிப்புணர்வு நடைபவனி மற்றும் மருத்துவ முகாம் என்பன கடந்த சனியன்று (02) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நடைபவனியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் அப்பலோ வைத்தியசாலைகள் குழுமத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடை பவனியை செரண்டிப் குழுமம் மற்றும் லங்கா ஈ டொக் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
“நாட்டில் பெருமளவான சிறுவர்களுக்கு முதுகுத்தண்டில் பிரச்சினையால் அவதியுற்று வருகின்றனர். இந்நோய் குறித்து குறைந்தபட்ச அறிவே மக்களிடையே உள்ளது. இதனால், குழந்தைகளை நோயிலிருந்து காப்பாற்றும் திறன் குறைந்துள்ளது. எனவே, பெற்றோர்களுக்கு இந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
இதன் காரணமாகவே, இந்த விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது “என செரண்டிப் குழுமத்தின் தவிசாளரும் லங்கா ஈ டொக் அமைப்பின் நிர்வாக இயக்குநருமான கலாநிதி நிலூக்க வெலிக்கல குறிப்பிட்டார்.
இந்திய அப்பலோ வைத்தியசாலைகள் குழுமத்தின் சர்வதேச பிரிவின் துணைத் தலைவர் ஜிது ஜோஸ், மருத்துவமனையின் அறுவை சிகிச்சை தலைவர் சஜன் கே ஹெக்டே, முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் அப்பாய் கிருஷ்ணன், வைத்தி நிபுணர் விக்னேஷ் ஆகியோருடன் இந்திய மற்றும் இலங்கை நிபுணர்களும் இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.