இலங்கை சிறுவர் துஸ்பிரயோகங்கள்

இலங்கை சிறுவர் துஸ்பிரயோகங்கள்

10வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை – மன்னாரில் சம்பவம் !

மன்னாரில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில்  அறிக்கையிடப்பட்டுள்ளது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டநிலையில், இன்று  சனிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

அதன் போதே , சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்த 52 வயதான திருகோணமலை – குச்சவெளியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை காணாமற்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, பிரதேச மக்கள் தேடுதலில் ஈடுபட்ட போது, தென்னந்தோட்டத்தில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

சிறுமியின் தாயும் தந்தையும் புத்தளம் – பூக்குளம் கிராமத்தில் வசித்து வருவதுடன், பாடசாலை செல்வதற்காக சிறுமியும் அவரது இரு மூத்த சகோதரிகளும் சகோதரனுடன் ஊர்மனை கிராமத்திலுள்ள அம்மம்மாவின் வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

“இலங்கையில் 2023ஆம் ஆண்டில் சிறுவர்களுக்கெதிராக 5000 குற்றச் செயல்கள் – 167 சிறுமிகள் கர்பந்தரிப்பு” – பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுதந்தர

நாட்டில் கடந்த ஆண்டு பாலியல் துன்புறுத்தல் உள்ளடங்கலாக சிறுவர்களுக்கெதிராக 5000 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 4000க்கும் மேற்பட்ட குற்றச் செயல்கள் பாலியல் துன்புறுத்தல்களுடன் தொடர்புடையவையாகும் என பொலிஸ் தலைமையகத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுதந்தர தெரிவித்தார்.

இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்களில் 167 சிறுமிகள் கர்பந்தரித்துள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுதந்தர சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2023ஆம் ஆண்டில் சிறுவர்களை கொலை செய்தல், கொலை முயற்சி, காயப்படுத்தல், பாலியல் துஷ்பிரயோகம், கடத்தல் உள்ளிட்ட 3074 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன. இவை தவிர பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 1463 சிறு குற்றச் செயல்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறு பாலியல் துன்புறுத்தல் உள்ளடங்கலாக கடந்த ஆண்டு சுமார் 5000 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.

ஏனைய குற்றச் செயல்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பாரியளவில் அதிகரிக்காத போதிலும், பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்த போக்கினையே காணபிக்கின்றன.

அதற்கமைய 18 வயதுக்குட்பட்ட  சிறுமிகளுக்கெதிரான 1502 பாலியல் துஷ்பிரயோகங்களும், சிறுவர்களுக்கெதிரான 584 பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகங்களும், சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல் தொடர்பில் 70 குற்றச் செயல்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்களின் போது 167 சிறுமிகள் கருத்தரித்துள்ளனர். இவர்களில் 127 பேர் தமது காதலர்களால் இந்நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலைக்கு உள்ளாகும் பெரும்பாலான சிறுமிகளின் குடும்ப பின்னணி இதில் பாரியளவில் தாக்கம் செலுத்துகின்றது.

சில சந்தர்ப்பங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் காதல் உறவைப் பேணுவதற்கு அவர்களது பெற்றோரால் எவ்வித எதிர்ப்புக்களும் வெளியிடப்படாமையும் இனங்காணப்பட்டுள்ளது.

பெற்றோர்களுக்கிடையிலான பிளவுகளும் சிறுவர்கள் இவ்வாறு தவறான வழிகளில் செல்வதில் தாக்கம் செலுத்துகின்றது. தற்போது பொலிஸ் திணைக்களத்தின் கீழுள்ள 607 பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன.

அவற்றில் 605 பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு காணப்படுகிறது. இவை தவிர தேசிய மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினால் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய அப்பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து சிறுவர்களுக்கெதிரான துன்புறுத்தல்கள் தொடர்பான தகவல்களை வழங்க முடியும். இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களின் இரகசியத்தன்மை நிச்சயம் பேணப்படும்.

அதே போன்று தகவல் வழங்குபவர்களின் தனித்துவத்தன்மையும் பாதுகாக்கப்படும். எனவே தமது பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் கூற முடியாத, பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடளிக்க முடியாத சிறுவர்கள் இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தமது பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என்றார்.

2023ஆம் ஆண்டில் இணைய வழி ஊடாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் !

2023ஆம் ஆண்டில் இணைய வழி ஊடாக இடம்பெற்ற 98,000 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“2022ஆம் ஆண்டில், இணையவழி ஊடாக இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பங்கள் தொடர்பில் 146,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

 

சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றது.

 

இதனை தடுப்பதற்காக பராமரிக்கப்படும் சர்வதேச தரவு அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கு காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

நபரொருவர் சமூக ஊடகங்களில் அல்லது இணைய தளத்தில் சிறுவர்களின் நிர்வாணப் படங்கள் மற்றும் அது தொடர்பான காணொளியை பதிவிடுதல், பகிர்தல் அல்லது பார்வையிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவாராயின் அது குறித்த தகவல் விடயத்துடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்களால் சேகரிக்கப்பட்டு, குறித்த தரவு அமைப்புடன் பகிர்ந்து கொள்ளப்படும்

பின்னர் குறித்த தரவு அமைப்பினால், அவ்வாறான தகவல் அடங்கிய விபரங்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருக்கும் நாடுகளுக்கு அனுப்பப்படும்.

 

இந்த தரவு அமைப்பின் ஊடாக இலங்கைக்கும் இது போன்ற தகவல்கள் கிடைத்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துஸ்பிரயோகம் – 18 வயதுடைய இளைஞர் கைது !

14  வயதான பாடசாலை மாணவியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்திச் சென்று துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் நவகத்தகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 வயதுடைய இளைஞரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தலுவெல வஹ்ரக பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

நவகத்தேகம – வெலேவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்துக்கு  உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்  ஆனமடுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

09 மாத காலப்பகுதியில் இலங்கையில் 2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

நிறைவடைந்த 09 மாத காலப்பகுதிகளில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலைமை கவலைக்குரியது என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, நீதிமன்ற வழக்குகள் பற்றிய தரவுகள் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் நீதிக் கட்டமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் ஒருசில விடயங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் முதற்கட்ட நிதி கிடைக்கப்பெற்றது. ஜி.எஸ்.பி. வரிச்சலுகையினை பெற்றுக்கொள்வதற்கும் கடந்த காலங்களில் நீதிக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

நீதியமைச்சின் கீழ் 21 நிறுவனங்கள் உள்ளன. நீதிமன்ற கட்டமைப்பில் உயர் நீதிமன்றம் முதல் தொழில் நீதிமன்றம் வரையிலான நீதிமன்ற நடவடிக்கைகளில் 11,4458 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  உயர்நீதிமன்றத்தில் 17 நீதியரசர்கள் உள்ளார்கள். ஒரு நீதியரசருக்கு 334 வழக்குகள் என்ற அடிப்படையில் வழக்கு விசாரணைகள் வழங்கப்படுகின்றன. அதே போல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 20 நீதியரசர்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவருக்கு 202 என்ற வழக்குகள் என்ற அடிப்படையில் வழக்குகள் வழங்கப்படுகின்றன.

2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் பெருமளவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனித மற்றும் பௌதீக வள பற்றாக்குறைக்கு மத்தியில் தான் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நிலுவையில் உள்ள வழக்குகளை நிறைவு செய்வதற்கு தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிறைவடைந்த 09 மாத காலப்பகுதிகளில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலைமை கவலைக்குரியது. இந்த வழக்குகளில் 1167 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.