இலங்கை சுற்றுலா

இலங்கை சுற்றுலா

சுற்றுலா பயணிக்கு 800 ரூபாய்க்கு வடை – உணவக உரிமையாளர் கைது !

வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு வடை மற்றும் தேநீர் கொடுத்துவிட்டு ரூபா 800 வசூலித்த உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

களுத்துறையில் உள்ள உணவகமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியான நிலையிலேயே குறித்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக தனி வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் சுற்றுலா பயணி ஒருவருக்கு 1900 ரூபாய்க்கு கொத்து விற்பனை செய்ய முயற்சித்த உணவக உரிமையாளர் ஒருவர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பயணிக்கு 1800 ரூபாய்க்கு கொத்து விற்பனை செய்ய முயற்சி – உணவக உரிமையாளருக்கு பிணை!

கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் உள்ள Eat Street உணவகத்துக்குச் சென்ற வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நேற்று (16) கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டது.

 

இதன்படி சந்தேக நபர் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த சந்தேக நபர் இன்று (17) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

வெளிநாட்டுப் பயணி ஒருவருக்குச் சந்தேக நபர் கொத்து ரொட்டி ஒன்றை 1,900 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த போது அதனை ஏற்றுக்கொள்ள வெளிநாட்டுப் பிரஜை மறுத்ததையடுத்து சந்தேக நபர் அவரை அச்சுறுத்தியதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

 

கொழும்பு 12 யைச் சேர்ந்த 51 வயதான நபரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் மாதத்தில் இலங்கை வந்த 2 லட்சம் சுற்றுலா பயணிகள் !

இலங்கையில் இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் சுமார் 200,000 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு மாதத்தில் வந்த வருகையை விட அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான மொத்த வருகைகள் கிட்டத்தட்ட 1.5 மில்லியனை நெருங்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறினார், இது ஜனவரி 2023 இல் நிர்ணயிக்கப்பட்ட அசல் இலக்காகும்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தற்போது இலங்கையின் சுற்றுலாத் துறை மீட்சியடைந்துள்ளது.

 

சுற்றுலாத் துறையின் மீட்சியானது 2022 இல் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்த இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்களை உறுதிப்படுத்த உதவியுள்ளது.

 

“இலங்கையின் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க திட்டம்.” – சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே

இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

 

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதெனவும், அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக டெக்ஸி சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் பதில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த போதே பதில் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

நாட்டில் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

 

இன்று (27) சர்வதேச சுற்றுலாத் தினமாகும். சுற்றுலாத்துறை அமைச்சு அதனை சுற்றுலாத் தினத்தை எளிய முறையில் கொண்டாடியதாகவும், இந்நாட்டின் சிறந்த சமையல் கலை நிபுணரான பபிலிஸ் சில்வாவுக்கு “ஜய ஸ்ரீ லங்கா” என்ற பெயரிலான சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 

அது மிகச்சிறந்த விருதாகும். அவர் கீழ் மட்டத்திலிருந்து கல்கிசை ஹோட்டலொன்றில் பிரதான சமையல் கலை நிபுணர் என்ற அந்தஸ்த்து வரை தன்னை வளர்த்துக்கொண்டுள்ள கதை மிகவும் அற்புதமானது. சுற்றுலாத்துறையில் சமையல் கலை நிபுணர்களை மறந்துவிட முடியாது என்பதால் அவர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டமொன்றும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் ஆரம்ப பகுதியில் 10 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் பேரை வரவழைக்க முடியும் என எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்காக விசேட ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 

வருடத்தின் இறுதி காலப்பகுதியிலேயே நாட்டுக்கு சுற்றுலாப் பிரயாணிகளில் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

 

அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டிற்கு அழைத்து வர எதிர்பார்த்திருக்கும் நிலையில், அடுத்த மாதத்தின் இடைப்பகுதியிலிருந்து அவர்களை வரவழைப்பதற்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

 

குறிப்பாக எல்ல, நுவரெலியா, காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட சுற்றுலாப் பிரயாணிகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் இரவு நேரங்களில் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டில் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும், சில சட்டத்திட்டங்களை தளர்த்த வேண்டும் என்பதோடு, சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டில் செலவுகளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தவறும் பட்சத்தில் நாட்டிற்கு வருமானம் கிட்டாது என்றும் வலியுறுத்தினார்.

 

அதேபோல், நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்துள்ளதெனவும், சிலர் செய்யும் தவறான செயற்பாடுகளினால் முழு நாட்டுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

அதனால் சுற்றுலாப் பயணிகளிடத்தில் அதிக தொகையை அறவிடும் உள்நாட்டு வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு, அவர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

 

சுற்றுலாப் பயணிகளில் பிரயாண வசதிக்காக டெக்ஸி சேவைகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும், அது தொடர்பிலான சட்டவிரோத செயற்பாடுகளை முறியடிப்பதற்கு அமைச்சு விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

இந்நாட்டின் டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்கு உள்நாட்டு கஞ்சா உற்பத்திக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாகவும், இரு வாரங்களுக்குள் அதற்கு அமைவான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமெனவும் தெரிவித்தார்.

 

இந்த வேலைத்திட்டம் ரூபாய்களை ஈட்டுவதாக அன்றி டொலர்களை ஈட்டிக்கொள்வதற்கானதாக அமைய வேண்டும் என்றும் அதற்கான அதிகார சபையொன்றின் கீழ் ஏற்றுமதி வலயத்திற்கு உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

உலகின் தலைசிறந்த சுற்றுலாத்தீவாக இலங்கையை பட்டியலிட்டு ஏமாற்றும் தீவு என பெயரிட்ட Big 7 Travel !

பயண இணையத்தளமான பிக் 7 ட்ரவல் (Big 7 Travel) வெளியிட்ட “2023 ஆம் ஆண்டிற்கான உலகின் 50 சிறந்த தீவுகள்” பட்டியலில் உலகின் சிறந்த தீவுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

50 தீவுகளில் 13 வது இடத்தில் உள்ள இலங்கை உள்ள நிலையில் அவ்வறிக்கையில் “ஏமாற்று”(beguiling) தீவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை தொடர்பில் அவ்வறிக்கையில்,

“அத்துடன், எதிர்ப்புகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் தொற்றுநோய்கள் காரணமாக இலங்கை சில ஆண்டுகளாக சுற்றுலா நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தது ஆனால் அதன் கதவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன.

ஏமாற்றும் தீவுக்குச் செல்ல ஆயிரம் காரணங்கள் உள்ளன, குறைந்தது அதன் மக்கள், சுவையான உணவு, முடிவில்லா கடற்கரைகள், தேயிலைத் தோட்டங்கள், யானைகள் நிறைந்த வனவிலங்கு பூங்காக்கள், ஆயிரம் ஆண்டுகள் பழமையான இடிபாடுகள் என்பன அதில் அடங்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் வரிசைப்படுதல்களை மேற்கொள்ள ஒரு நுட்பமான தேர்வு செயன்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, இந்த இடங்களை நேரடியாக ஆராய்ந்த சமூக ஊடக பார்வையாளர்கள் மற்றும் பயண நிபுணர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, மதிப்பெண்கள் துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அசுத்தமாக இருந்த இலங்கை கடற்கரையை தூய்மையாக்கிய வெளிநாட்டு இளைஞர்கள்!

இலங்கை மக்கள் பாரியளவில் அசுத்தப்படுத்தியிருந்த அம்பலாங்கொடை கடற்கரையை இன்று (29ஆம் திகதி) காலை சுத்தப்படுத்தும் பணியில் வெளிநாடுகளைச் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் குழுவொன்று ஈடுபட்டது.

அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகாலையில் வந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தின் சில உத்தியோகத்தர்களைத் தவிர பலர் தாமதமாகவே வருகை தந்தனர்.

அம்பலாங்கொட பொல்வத்த ஆஷிகா செனவிரத்னவினால் அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு இளைஞர்கள் குழுவொன்று கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் இணைந்துகொண்டது.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்திடம் உதவி கேட்கும் இலங்கை!

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

 

சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

 

அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று வெங்டேஸ்வரன் கூறியுள்ளார்.

 

இலங்கைக்கான பயணத்தின் போது, பிரத்தியேகமான இராமாயண பாதை மற்றும் இலங்கையில் உள்ள பிற தனித்துவமான பௌத்த தலங்களை ஆராய வேண்டும் என்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தார்.

2023இன் முதல் ஐந்து வருடங்களுக்குள் இலங்கை வந்த 5 லட்சம் சுற்றுலாப்பயணிகள் !

2023 இல் இதுவரை இலங்கைக்கு கிட்டத்தட்ட 500,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் 498,319 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

2023 இன் முதல் நான்கு மாதங்களில் தலா 100,000 பார்வையாளர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

மே மாதத்தில் இதுவரை 57,142 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.

மே மாதத்தில் இதுவரை மொத்தம் 15,052 இந்தியர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இதேவேளை மே முதல் மூன்று வாரங்களில் ஜேர்மனியில் இருந்து 5,318 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 5,273 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,812 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,039 பேரும், சீனாவில் இருந்து 2,935 பேரும், கனடாவில் இருந்து 2,516 பேரும், அமெரிக்காவிலிருந்து 2,263 பேரும், பிரான்சிலிருந்து 1,693 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்

ஜனவரியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

ஜனவரி மாதத்தில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்.

ஜனவரி 31ஆம் திகதி வரையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்த சுருக்க அறிக்கையை வெளியிட்ட அவர், சுற்றுலாத் துறையின் ஊக்கத்தால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதன்படி, 2022 ஜனவரியில் 82,327 சுற்றுலாப் பயணிகளும், 2023 ஜனவரியில் 102,545 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

2022 இல் மொத்தம் 719,978 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

அதேசமயம், கடந்த ஆண்டு பெப்ரவரியில் 96,507பேரும் மார்ச் மாதத்தில் 106,500 பேரும், ஏப்ரலில் 62,980 பேரும், மே மாதம் 30,207 பேரும், ஜூன் மாதம் 32,856 பேரும், ஜூன் மாதம் 47,293 பேரும், ஜூலை மாதம் 47,293 பேரும், ஓகஸ்ட் மாதம் 37,760 பேரும் நவம்பரில் 59,759 பேரும், டிசம்பரில் 91,961 பேருமாக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

குறைந்த செலவுடனான விசேட விடுமுறை பொதி – இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரிட்டனின் பிரபல பத்திரிக்கை கோரிக்கை !

குறைந்த செலவுடனான விசேட விடுமுறை பொதி வழங்கப்படுவதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரிட்டனின் பிரபல பத்திரிக்கையான Daily Mail உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பத்திரிகையில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தற்போது வழங்கப்படும் சொகுசு சுற்றுலா பொதியை பெற்றுக்கொள்வதற்காக மிக குறைந்த தொகையை ஒதுக்குவதற்கான சந்தர்ப்பம் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட காலத்திற்கு பின்னர் கிடைக்கும் சந்தர்ப்பமாகும். ஆர்ப்பாட்டம் மற்றும் உணவு பற்றாக்குறை முதலான அச்சத்தின் காரணமாக வருடத்தின் முதல் காலாண்டுப்பகுதியில் பிரிட்டன் தனது சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது.

இருப்பினும், பிரிட்டிஷ் அரசாங்கம் தனது அறிவிப்பை விலக்கிக் கொண்டுள்ளது. தனது சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு சுற்றுலா செல்வதை பிரிட்டன் தற்பொழுது ஊக்குவித்து வருகிறது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்குச் செல்வது வசதியானது என்றும் அந்த பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு செல்வதற்காக 36 மணித்தியாலம் என்ற குறுகிய காலப்பகுதி டிஜிட்டல் முறைக்கு அமைவாக விசாவை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.