இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

எகிறும் தேர்தல் முறைப்பாடுகள் – 24 மணித்தியாலங்களில் 337 முறைப்பாடுகள் !

ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,551 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 337 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதில், சட்ட மீறல்கள் தொடர்பில் 336 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
அதற்கமைய, இதுவரை பதிவாகியுள்ள மொத்த முறைப்பாடுகளில் 4,929 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எகிறும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் !

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஐயாயிரத்தை அண்மித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 208 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் , அந்தவகையில், ஜூலை 31ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை 4, 945 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

இதில் 1,515 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 3,429 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகவும், இந்தக் காலப்பகுதியில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 34 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி – யாழ்ப்பாணத்தில் இருந்து 593,187 வாக்காளர்கள்!

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

அதன்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு கொழும்பு மாவட்டத்திலிருந்து 1,765,351 பேரும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 1,881,129 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 1,024,244 பேரும், கண்டி மாவட்டத்திலிருந்து 1,191,399 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 429,991 பேரும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 605,292 பேரும், காலி மாவட்டத்திலிருந்து 903,163 பேரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 686,175 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 520,940 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

 

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 593,187 பேரும், வன்னி மாவட்டத்திலிருந்து 306,081 பேரும், மட்டகளப்பு மாவட்டத்திலிருந்து 449,686 பேரும், திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து 555,432 பேரும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 315,925 பேரும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 1,417,226 பேரும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 663,673 பேரும், அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து 741,862 பேரும், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 351,302 பேரும், பதுளை மாவட்டத்திலிருந்து 705,772 பேரும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 399,166 பேரும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 923,736 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 709,622 பேரும் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் எனக்கு உடன்பாடு இல்லை – சிறீதரன் எம்.பி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தாம் ஆதரிப்பதாக தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், குறித்த தீர்மானத்தை தான் எதிர்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  இன்றைய கூட்டத்தில் ஐந்து பேர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் இருந்தார்கள்.

அது தொடர்பாக ஒரு அறிக்கையும் எழுதப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்பதாகவே இருந்தது.

மத்திய குழுவில் கடந்த முதலாம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானம் பிழை என நான் எழுத்து மூலமாகவும் வழங்கி இருக்கிறேன். நான் ஒரு தெரிவு செய்யப்பட்ட தலைவர் என்ற ரீதியில் எழுத்து மூலமாக அறிவித்து விட்டு தான் பிரித்தானியா சென்று இருந்தேன்.

6 திகதி நான் மீளவும் இலங்கைக்கு திரும்புவேன். ஏழாம் திகதி வரை கூட்டத்தினை வைக்க வேண்டாம் என கூறியிருந்தேன். அவ்வாறு கூட்டங்கள் வைத்தாலும் தீர்மானங்கள் எடுக்கப்படாது என்று பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் எனக்கு உறுதிமொழியையும் தந்திருந்தார்.

தற்போதைய தலைவராக இருக்கின்ற மாவை சேனாதிராஜாவை 26 ஆம் தேதி சந்தித்து பேசுகின்ற போது நாங்கள் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றமாட்டோம் சில விடயங்கள் தொடர்பாக பேச இருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

இவற்றையெல்லாம் தாண்டி 2024. 8. 18ஆம் திகதி ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு அந்தக் குழு கூடி தீர்மானம் எடுக்காத நிலையில் மத்திய குழுவில் அவசர அவசரமாக யாருடைய தேவைக்காக யாருடைய தீர்மானத்தை எடுத்தார்கள். சஜித் பிரேமதாசவுக்காக அந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

அந்த தீர்மானம் எடுத்த பின்னர் நான் கடிதம் மூலமாகவும் தெரிவித்திருந்தேன். இதனை நான் எதிர்க்கிறேன். என்னைப் பொருத்தவரை தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய வகையில் நாங்கள் ஒரு பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற ஒரு தெளிவான நிலைப்பாட்டை கொண்டு இருந்தேன். அதனை இப்போதும் கொண்டிருக்கிறேன். இன்றும் இந்தக் கூட்டத்தில் அதனை வலியுறுத்தி என்னுடைய கருத்து இவர்களுடைய தீர்மானத்திற்கு எதிரானது என்பதனை பதிவு செய்யுமாறு தெரிவித்து இருக்கிறேன்.

ஸ்ரீதரன் இதனை ஏற்கவில்லை அதாவது ஸ்ரீதரன் சஜித் பிரேமதாசாவுக்கு மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க உட்பட்ட தென்னிலங்கையினுடைய வேட்பாளர்கள் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை பதிவு செய்யுமாறு குறிப்பிட்டு அந்த கூட்டத்திலிருந்து என்னுடைய நேரம் முடிந்ததும் புறப்பட்டேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்று 50 நாட்களுக்குள் 150 பாராளுமன்ற உறுப்பினர்களை வீட்டுக்கு அனுப்புவேன் – அனுர குமார திசாநாயக்க

தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வெளியேற வேண்டியவர்கள் எனவும், தான் வெற்றிபெற்று ஒன்றரை மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

 

பன்னல பகுதியில் நேற்று (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

“ரணில் விக்கிரமசிங்க எவ்வளவு சொன்னாலும், சஜித் பிரேமதாச எத்தனை பொய்க் கதைகள் சொன்னாலும் பரவாயில்லை. எமது பயணத்தை இனி தோற்கடிக்க முடியாது. ரணில் சஜித், நீங்கள் அறிய மிகவும் தாமதமாகிவிட்டீர்கள். விரைவில் பாராளுமன்றத்தை கலைப்போம். இந்த பாராளுமன்றத்தில் அநாகரீகமாக அலறல். கொலை செய்து சிறை சென்ற குற்றவாளிகள், கப்பம் வாங்கி சிறை சென்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறியுள்ளது.

 

இப்படிப்பட்ட பாராளுமன்றம் தேவையா? இன்னும் ஒன்றரை மாதங்களில் பொதுத் தேர்தல் வரவுள்ளது. இந்த பாராளுமன்றத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்டோர் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.” என்றார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1300-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் – PAFFREL

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1300-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

 

இவற்றில் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் 19 தாக்குதல் சம்பவங்களும் அலுவலகங்கள் மீதான 27 தாக்குதல் சம்பவங்களும் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

 

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து வகையான பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக கூறியுள்ள ரோஹண ஹெட்டியாரச்சி, இந்த காலப்பகுதியில் அமைதியான முறையில் செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

அத்துடன் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் 150-இற்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழர் தேசமாய் ஒன்றுபடுவோம் – யாழ் பல்கலை சமூகம் அழைப்பு !

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என யாழ் பல்கலை சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

 

தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் திறந்த மடல் எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

நூற்றாண்டுகள் கடந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் எங்களின் அரசியல் விடுதலைப் பயணத்தில் தவிர்க்க முடியாதவொரு தேர்தலாக எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் மாறியுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமாக இம்மடலினை எங்கள் பேரன்புமிக்க தமிழ் மக்களை நோக்கி மாணவர்கள் நாங்கள் எழுதுகின்றோம்.

 

தமிழ் மக்கள் உதிரிகளாக்கப்படுதலும் கூட்டு மனவலு சிதைக்கப்படுதலும்

 

2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திப்பதிலிருந்தும், எழுச்சியடைவதிலிருந்தும் எங்களை விலகியிருக்கச் செய்வதில் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்திருக்கின்றது. சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளையும் உதிரிகளாக்கி, எங்களின் கூட்டு மனவலுவைத் தகர்த்தெறிந்து உளவியல் ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனோநிலையினை எங்கள் மக்களிடையே விதைப்பதனை சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனகச்சிதமாகச் செய்து முடித்துள்ளன.

 

தமிழ் மக்களினது அரசியற் பலத்தினையும் எழுச்சியினையும் இல்லாதொழிப்பதற்காகச் சாணக்கியம், ராஜதந்திரம் என்று பெயரிட்டு தமிழ்த் தரப்புகளால் முன்னெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலை அரசியல் பயன்படுத்தப்பட்டது.

அதன் விளைவே கடந்த 2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் தமிழ் இனப்படுகொலை பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கு வாக்களித்தோம். பரிகார நீதியைக் கோர வேண்டிய நாம், எமது அரசியற் தலைமைகளினால் கண்மூடித்தனமாக வழிநடத்தப்பட்டோம்.

 

எம்மைச் சூழும் பொருளாதார நல்லிணக்க மாயைகள்!

 

சிறிலங்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையைக் காரணங்காட்டி கவர்ச்சிகர வாக்குறுதிகளை முன்வைத்து வரும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்கள் நாட்டின் இந்நிலைக்குத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும், வலிந்து திணிக்கப்பட்ட போருமே அடிப்படைக் காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.

அடிப்படையில் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அரசியல் உறுதித் தன்மை அவசியமாக உள்ள நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகளை நிறுத்தும் சித்தம் ஏதுமின்றி, தமிழ் மக்களின் உரிமைக்கான குரல்களை இனிப்புத் தடவிய வார்த்தை ஜாலங்களினால் அறுத்தெறியும் பணிகளிலேயே நாட்டமும் மும்முரமும் காட்டுகின்றனர். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அல்லது பௌத்தத்திற்கு முதன்மை வழங்கும் அதன் கட்டமைப்பையோ இவர்கள் எவரும் கேள்விக்குள்ளாக்காமல் நல்லிணக்கம் பேசுவதென்பது அற்ப வாக்குகளிற்காகவேயன்றி வேறெதற்காக?

தமிழர் தேசமாய்த் திரள்வோம் !

 

தொடர்ந்தும் தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கேற்ற பலமானதொரு திரளாக அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியாகத் தமிழ் மக்கள் நாங்கள் எழ முடியாது உதிரிகளாக்கப்பட்டு, கூட்டு மனவலு சிதைக்கப்பட்டுள்ளது. இக்கையறு நிலையாவது கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து, சுதாகரித்து முன்னகர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.

 

அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற ஒற்றையாட்சி, அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் தமிழரின் அரசியலை சுருக்கியது என்பது சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்பதோடு, தமிழ் மக்களிற்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளவல்ல திடசித்தமுள்ள தலைவர் ஒருவரையேனும் சிங்கள மக்கள் மத்தியில் காண முடியவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

 

தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளில் பயணிப்போர்கள் அனைவரும் தமிழினத்தின் விடுதலைக்கு, மேன்மைக்கு உழைப்பவர்கள் என்று நம்பி ஏமாந்த எங்களுக்கு, புலித்தோல் போர்த்திய நரிகளின் ஊளையிடுதல்களையும் கூச்சல்களையும் உதறித்தள்ளி, தமிழர் தேசமாக, எங்கள் தலைவிதியை நாங்களே மாற்றி எழுதும் பெருவாய்ப்பு இனப்படுகொலை நிகழ்ந்து 15 ஆண்டுகளின் பின் கனிந்துள்ளது.

 

தமிழரை அணிதிரட்டி வெல்லட்டும் தமிழ்ப் பொதுவேட்பாளர் !

 

தமிழ் மக்களைத் தேசமாய் அணி திரட்டுவதற்கும், பன்னாட்டுச் சமூகங்களிற்கு விடுதலைக்கான எங்களின் கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தினையும் வெளிப்படுத்துவதற்கும் எங்களிற்குள்ள ஒரேயொரு வாய்ப்பாகத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எண்ணக்கருவினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இது ஒரு காத்திரமான வழிமுறை. இது எமது வரலாற்றுக் கடமை. தமிழ்ப் பொதுவேட்பாளர் சிறிலங்காவின் அரச தலைவர் இருக்கையை வெல்லப் போகின்றவரல்ல ; மாறாக தமிழ் மக்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றவர்.

 

இனியாவது ஏமாற்றும் கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்று சேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களைத் தமிழ் மக்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். தவறுவோமேயானால் நாங்கள் அரசியல் பிழைத்த மக்களாக்கப்படுவோம்.

நாங்கள் மாறி மாறி சிங்கள ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க வழிநடத்தப்பட்டோம். இதனால் தமிழ் மக்களின் நிலை, அரசியல், சமூக ரீதியில் பரிதாபகரமாய்ப் போனதேயன்றி வேறேதும் நிகழவில்லை. உரிமைகளுற்கான தமிழரின் அரசியல் இன்று சலுகைகளுக்காகத் துவண்டு போயுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு.பா.அரியநேத்திரன் அவர்களுக்கு, அவரின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம். மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமாட்டேன் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமாட்டேன் என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை, இந்திய ஒப்பந்தத்துக்கு தெற்கு மக்களின் ஆசிர்வாதம் இருக்கவில்லை. அது பலவந்தமாகத் திணிக்கப்பட்டதொன்றாகும். அதனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் என்பன நடைமுறைப்படுத்தப்படவில்லை.

குறித்த ஒப்பந்தம் அமுலாக்கப்பட்ட விதத்தை நானும் அனுமதிக்கவில்லை. ஒப்பந்தம் வந்தபோது நான் இராணுவத்தில் இருந்தேன். ஒப்பந்தம் பலவந்தமாகத் திணிக்கப்பட்டதை ஏற்க முடியாது.

13 வழங்கப்படும் எனச் சஜித் கூறுகின்றார். அதேபோல் ஐக்கியமான நாடு பற்றி சஜித் மற்றும் அநுர ஆகியோர் கதைக்கின்றனர். ஆனால், ஒற்றையாட்சி எனும் நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன்.

நான் ஜனாதிபதியாகும் பட்சத்தில் மாகாணங்களுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டேன்.

ஆனால், 13 ஐ விடவும் அதிகாரங்களைப் பகிர்ந்து மக்கள் சமத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கலாம். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் வரை மேற்படி அதிகாரங்களை வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தீர்வு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவை தமது அரசாங்கத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தீர்வு காண்பதற்கு நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் ஊடாக செயற்படுவார் என யாழ்ப்பாணம்  நாவாந்துறையில் இன்று (14) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கின் பிரச்சினைகளை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது எனவும், அபிவிருத்தியும் தேவை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இல்லையேல் ஏனைய மாகாணங்கள் அபிவிருத்தியில் முன்னோக்கி செல்லும் போது வடக்கு பின்தங்கிவிடும் எனவும் வடக்கின் அரசியல் பிரச்சினைகளை மட்டுமன்றி அபிவிருத்தி பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களை தான் அச்சுறுத்தியதாக குறிப்பிட்ட அநுரகுமார திஸாநாயக்கவை  சுமந்திரன்  பாதுகாத்தாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அநுர, சஜித் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க முயல்கின்றனர். அவ்வாறு செய்தால் நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது . வாழ்க்கை செலவை குறைப்பதே எமது முதலவாது குறிக்கோள்.அஸ்வெசும நிகழ்ச்சி திட்டம்.உர மானியம். வழங்கப்பட்டுள்ளது. தனியார் துறையினருக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடம் முதல் சம்பளத்தை அதிகரிக்க முடியும். வரியையும் குறைக்க வழிசெய்ய முடியும்.

அநுர, சஜித் ஆகிய இரண்டு வேட்பாளர்களும் வரியை குறைக்க வேண்டும் என கூறுகின்றனர். அவ்வாறு செய்தால் மேலும் பல பாதிப்பை சந்திக்க நேரிடும்.

இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றார்கள். சலுகைகளை வழங்க வேண்டும். முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைக்க வேண்டும். தனியார் துறையிலும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க உள்ளோம்.சுய தொழில் முயற்சியாளருக்கு வட்டியில்லா கடன்களை வழங்க வேண்டும்.

காங்கேசன்துறை பிரதேசத்தில் முதலாவது முதலீட்டு வலயம் உருவாக்கப்படவுள்ளது. தொடர்நது பரந்தன், மாங்குளத்தில் முதலீட்டு வலயம் உருவாக்கப்படும். பூநகரி பிரதேசத்தில் சூரிய மின்சக்தி திட்டம் உருவாக்கப்படும். சஜித், அநுரவிடம் தீர்வுகள் இல்லை. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளரை இழிவாகப் பேசுபவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் – சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழ் பொது வேட்பாளரை இழிவாகப் பேசுபவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக நீங்கள் ஒவ்வொரும் எதிர்வரும் 21ஆம் திகதி அரியநேத்திரனுக்கு வாக்களிக்க வேண்டும் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து இன்று (14) நெல்லியடியில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”ஜனாதிபதி தேர்தலில் பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) நீங்கள் வெகுவாக வாக்களித்தால் அதற்கு மதிப்புண்டு மாண்புண்டு. அதை வைத்து தமிழ் மக்களின் அடையாளமாக காட்டி எமக்கு நடந்து வரும் அநியாயங்கள் பற்றி நாடுகளுக்கு கூறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்து எமக்கு இழைக்கும் இன்னல்களை தடுக்கலாம். இவர் இத்தனை இலட்சம் வாக்குகளைப் பெறறவர் என அடையாளம் காட்டக் கூடியதாக இருக்கும்.

பெரும்பான்மை அரசியல் வாதிகளை ஆதரிப்பது தமிழ் பேசும் அரசியல் வாதிகளுக்கு தனிப்பட்ட நன்மையினைத தரும் ஆனால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது.

சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென தொடங்கிய பகிஷ்கரிப்பாளர்கள் இப்போது தமிழ் பொது வேட்பாளரையும் பகிஷ்கரிக்க சொல்கின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.