அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் தபால் திணைக்களத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதே தவிர , அதனை தனியாருக்கு விற்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை எனத் தெரிவித்த ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார , முத்திரை கட்டணங்களையோ , தபால் கட்டணங்களையோ அதிகரிக்க எதிர்பார்க்கவுமில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தபால் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்காக புதிய சட்ட மூலம் தயாரிப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இவ்வாண்டுக்குள் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளோம். கடந்த ஆண்டு தபால் திணைக்களத்தின் வருமானத்தை விட செலவு இரு மடங்காகும்.
இவ்வாண்டுக்குள் வரவை மீறிய செலவினை குறைப்பதற்கு திட்ட்மிடப்பட்டுள்ளது. 2024 இல் வரவு மற்றும் செலவினை சமநிலைப்படுத்தவும் , 2025இல் தபால் திணைக்களத்தை இலாபமீட்டும் நிறுவனமாக்குவதற்குமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு தபால் திணைக்களத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
10 பில்லயனாக மதிப்பிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தில் 9 பில்லியன் தனியார் முதலீடும் , 1 பில்லியன் அரச முதலீடுமாகும்.
அதற்கமைய அரச , தனியார் கூட்டு முயற்சியில் தபால் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்படுமே தவிர , ஒருபோதும் அதனை தனியாருக்கு விற்பதற்கு அரசாங்கம் முயற்சிக்காது.
தற்போது முத்திரைகள் ஊடாக வருடத்துக்கு 4000 மில்லியன் ரூபாவும் , முத்திரை குத்துதல் ஊடாக 668 மில்லியன் ரூபாவும் , தபால் பரிமாறத்தின் ஊடாக கடந்த ஜூன் 31ஆம் திகதி வரை 130 மில்லியன் ரூபாவும் வருமானமாக கிடைத்துள்ளது.
இவை தவிர தபால் பொதி சேவை , வீடுகளுக்கே தபால் பொதிகளை விநியோகித்தல் , ஏனைய பதிவு சான்றிதழ்களை விநியோகித்தல் உள்ளிட்ட சேவைகளையும் தபால் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
தபால் பொதி சேவையை மேலும் வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு விரைவில் 1000 முச்சக்கரவண்டிகளைக் கொள்வனவு செய்து, அவற்றின் ஊடாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் தபால் , முத்திரை கட்டணங்களை மீண்டும் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என்றார்.