இலங்கை தமிழர் பிரச்சினை

இலங்கை தமிழர் பிரச்சினை

புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

புதிய நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அரசை அமைப்பதற்காக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாகவே அரசு அமைக்கப்படும்.

எம்முடைய விஞ்ஞாபனத்துக்கு அமைய இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்க புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்.

அவ்வாறு உருவாக்கப்படும் அரசமைப்பு நாட்டு மக்களிடம் வழங்கப்பட்டு அவர்களின் கருத்துக்களுடன் கூடிய கொள்கை மற்றும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

புதிய அரசு ஆட்சி அமைத்தமையைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். – என்றார்.

” நாம் ரணில் விக்கிரமசிங்கவை முன்பு நம்பினோம். இப்போது சந்தேகப்படுகிறோம்.” எம்.ஏ.சுமந்திரன்

நீண்ட காலமாக நாட்டில் நிலவும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளமையை சந்தேக கண்ணோட்டத்திலேயே  பார்ப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூடியது. இதன்போது வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொண்டோம். பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்தோம். நாட்டின் நலனுக்கு முரணான விடயங்களை கண்டுள்ளோம். பாதுகாப்பு துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகையான அடிப்படை சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருடங்களில் பாதுகாப்புக்கான நிதி 12 வீதத்தால் அதிகரித்துள்ளன. இது அவசியமான விடயம் அல்ல.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவிக்கும் சாதகமான விடயங்களை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் நாங்கள் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கின்றோம்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக ஒரு விடயத்தை குறிப்பிடுகின்றார். நீண்ட காலமாக நாட்டில் நிலவும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளார். அதனை நாங்கள் சந்தேக கண்ணோடே பார்க்கின்றோம். அவரை ஒருகட்டத்தில் நம்பினோம். இந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டாலும் அதனை செய்யவில்லை என்றார்.

 

“இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஜோ பைடனும் கமலா ஹரிஷும் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்” – இரா.சம்பந்தன்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 தொகுதிகளைக்  கைப்பற்றி 46ஆவது ஜனாதிபதியாகவும், கமலா ஹரிஷ் அமெரிக்காவின் முதலாவது பெண் உப ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இருவரையும் வாழ்த்தி கருத்துத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரான  இரா.சம்பந்தன்  “இலங்கையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில்  உறுதியான மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஜோ பைடனும் கமலா ஹரிஷும் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும், உப ஜனாதிபதியாக கமலா ஹரிஷும் தெரிவு செய்யப்பட்டமை மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் இவர்களுடன் தொடர்புகொண்டு பேசுவோம்.

2009ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க தமிழர் விவகாரத்தை அமெரிக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்குக் கொண்டுவந்திருந்தது.  அப்போது அமெரிக்காவில் பராக் ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சியே ஆட்சியில் இருந்தது.

இந்தநிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாகவும், கமலா ஹரிஸ் உப ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

இவர்கள் இருவரும் ஜனநாயகவாதிகள். அரசியல் ரீதியில் நீண்ட காலம் அனுபவம் பெற்றவர்கள். ஜோ பைடன், செனட் சபையிலும் இருந்திருக்கின்றார்; அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இரண்டு தடவைகள் உப ஜனாதிபதியாகவும் பதவி வகித்திருக்கின்றார்.

கமலா ஹரிஸ், இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணின் மகள். நீண்ட காலம் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார். இவர்கள் இருவரும் சமத்துவம், நீதி, நியாயம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்குப் போதிய மதிப்பு வழங்கிச் செயற்படக்கூடிய தலைவர்கள்.

இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் இவர்களுடன் தொடர்புகொண்டு பேசுவோம். இலங்கையில் சமத்துவத்தின் அடிப்படையில் – நீதியின் அடிப்படையில் – நியாயத்தின் அடிப்படையில் – சமாதானத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும்.

இலங்கைத் தீவில் நீண்டகாலமாக அவ்விதமானதோர் அரசியல் தீர்வு இன்னமும் ஏற்படவில்லை. அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் – உறுதியான மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஜோ பைடனும் கமலா ஹரிஷும் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில் இவர்கள் உதவக்கூடிய பக்குவம் உடையவர்கள். அதில் ஆற்றல் உடையவர்கள்; அறிவுடையவர்கள்” எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.