இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

“தவறு செய்து வெல்வதைவிட, நல்லது செய்துவிட்டு தோற்றால் கூட அது நிம்மதிதான்” – நாடாளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் !

நான் வாக்கு வேட்டைக்காக அரசியல் நடத்தவில்லை. கௌரவமானதொரு அரசியல் கலாசாரத்தையே விரும்புகின்றேன். தவறு செய்து வெல்வதைவிட, நல்லது செய்துவிட்டு தோற்றால் கூட அது நிம்மதிதான்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எனவே, கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிய வேண்டாம் என எதிரணியில் உள்ள சில உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார் – எனது அமைச்சு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரால் நேற்று கேள்வியொன்று எழுப்பட்டிருந்தது. அவ்வேளையில் நான் சபையில் இருக்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய இடம் பெற்ற முக்கிய கூட்டமொன்றில் கலந்து கொண்டிருந்தேன். நாட்டில் மின் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படாததால் மாதம் 425 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகின்றது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் இதனை செலவிடுகின்றோம். இவ்விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருடன் நேற்று கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பட்டுள்ளது. பதில்களை நாம் சபையில் சமர்ப்பித்திருந்தோம். அப்படி இருந்தும் துறைசார் அமைச்சர் ஏன்? சபையில் இல்லை என கேள்வி எழுப்பட்டுள்ளதுடன், அரசியல் நாகரீகம் அற்ற வகையில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

வாக்கு வேட்டைக்காக நான் அமைச்சு பதவியை ஏற்கவில்லை. நான் இந்த நாட்டை நேசிக்கும் ஒரு இளைஞன். நாட்டை முன்னோக்கி கொண்டுவரவே நாம் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். எனவே, பொறுப்பில்லை என கூறுவதை ஏற்க முடியாது.

 

நாட்டில் கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடி காலங்களில் நாம் மக்களுடன் இருந்தோம். மாறாக காட்டுக்கு சென்று மிருகங்களை படம் பிடிக்கவில்லை. எனவே, எல்லா விடயங்களையும் அரசியலாக்குவது கீழ்த்தரமான செயற்பாடாகும்.

 

நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படும், சமூர்த்தி பயனாளிகள், நலன்புரி உதவிகளை பெறுபவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அதிகமாக நீரைப் பயன்படுத்தும் 20 வீதமானவர்களுக்குதான் விலை உயர்வு தாக்கமாக அமையும்.

 

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பதுளையில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். மக்களும் பங்கேற்றிருந்தனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் அதில் பங்கேற்கவில்லை. மன்னிப்பு கோருமாறு வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார். அந்த மன்னிப்பு இன்னும் கேட்கப்படவில்லை. ஆகவே கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிய முற்படக்கூடாது.

 

நல்லாட்சியில் வீடமைப்பு துறை அமைச்சராக சஜித் பிரேமதாச தான் பதவி வகித்தார். ஆனால் தோட்ட வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

நல்லாட்சியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு கூட நான் தான் உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்து வீட்டு திட்டத்தை முழுமைப்படுத்தினேன். தவறு செய்து வெல்வதற்கு பதிலாக சரியானதை செய்துவிட்டு தோல்வி அடைந்தால் கூட பரவாயில்லை.

 

அதேவேளை, அநாகரீகமான அரசியல் விமர்சனங்களை கைவிடுமாறு நான் கூறியிருந்தேன். ஆனால் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு முத்திரை வெளியிடுவது வெட்கக்கேடு எனக் கூறியுள்ளார். 3 லட்சம் பேருக்கு முகவரி பெற்றுக்கொடுத்து, சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்த ஒருவரை இப்படி விமர்சிக்க கூடாது. என்று கருத்து தெரிவித்தார்.

“மக்களுக்கு சேவை செய்யவே அரசியல் பலத்தையும், அமைச்சு பதவியையும் பயன்படுத்தி வருகின்றேன்” – ஜீவன் தொண்டமான்

“மக்களுக்கு சேவை செய்யவே அரசியல் பலத்தையும், அமைச்சு பதவியையும் பயன்படுத்தி வருகின்றேன்” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தல் ஊடாகவே பாராளுமன்றம் பிரவேசித்தார். ஆரம்பத்தில் அவர் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.

இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அவர் விசேட காணொளி மூலமாக விரிவாக விளக்கியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு நான் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றது முதல் இன்று வரை எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது, மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது கடமையாகும்.

2020 ஆம் ஆண்டு நான் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தபோது, எனது அமைச்சின் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்துக்காக 680.79 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டது. உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக 396.48 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.

வாழ்வாதார அபிவிருத்திகளுக்காக 68.83 மில்லியன் ரூபாவில் செலவில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்துக்கு 2.08 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அத்துடன், இந்திய வீடமைப்பு திட்டத்துக்காக 2020 ஆம் ஆண்டில் 0.88 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

அந்தவகையில் 2020 ஆம் ஆண்டில் மட்டும் மேற்படி திட்டங்களுக்காக 1,236.18 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றும் வேகமாக பரவியது. அதனை கட்டுப்படுத்துவதற்காகவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காகவும் தனியாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன.

2021 ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால் அமைச்சின் ஊடாக வருகின்ற வீடமைப்பு திட்டத்துக்காக 314.37 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டது. மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டங்களுக்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கவில்லை.

எனவே, வீடமைப்பு திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக 385.24 ரூபா ஒதுக்கப்பட்டு, பணிகள் நிறைவு செய்யப்பட்டு, வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

அதேபோல 2021 இல் இந்திய வீடமைப்பு திட்டத்தின்கீழ் வீடுகளை நிர்மாணிக்க 1084.11 ரூபா செலவளிக்கப்பட்டது. கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியின் ஆரம்பம் என்பதால் இக்கால கட்டத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. இதனால் இந்திய வீடமைப்பு திட்டமும் சற்று தாமதமானது.

2021 ஆம் ஆண்டில் 93 வீதிகள் அமைக்கப்பட்டன. பொது வேலைத்திட்டங்களும் (அபிவிருத்தி, உட்கட்டமைப்பு) முன்னெடுக்கப்பட்டன. இவ்விரு திட்டங்களுக்காகவும் 177.13 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல புதிதாக 25 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன. இதற்காக 42.70 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. தகரம் மாற்றும் 34 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதற்காக 4.70 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. வடிகாலமைப்பு சம்பந்தமாக 220 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்காக 21.40 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

ஆரம்ப பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் சம்பந்தமான 12 வேலைத்திட்டங்கள் 15.77 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டன. நீர்வளங்கள் திட்டத்தின்கீழ் 6 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக 4.93 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டிலும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். இந்திய வீடமைப்பு திட்டத்தையும் அமுல்படுத்த உத்தேசித்திருந்தோம். ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள், எம்மை அரசிலிருந்து வெளியேற வைத்தன. ஏப்ரல் 05 ஆம் திகதி பதவி விலகல் கடிதத்தை கையளித்தேன்.

அதன்பின்னர் ஜனாதிபதியும் பதவி விலக நேரிட்டது. பொருளாதார நெருக்கடியும் உக்கிரம் அடைந்தது. இதனால் எம்மால் எதிர்பார்த்தளவு வேலைத்திட்டங்களை 2022 ஆம் முன்னெடுக்க முடியாமல்போனது. எனினும், ஜனவரி முதல் மார்ச் வரையான மூன்று காலப்பகுதிக்குள் அமைச்சின் ஊடாக இடம்பெற்ற வீடமைப்பு திட்டத்துக்காக 164.69 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இந்திய வீடமைப்பு திட்டத்தின்கீழ் 154. 03 மில்லியன் ரூபா செலவளித்திருந்தோம். உட்கட்டமைப்பு மற்றும் பொது அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 138.13 மில்லியன் ரூபா செலவளித்தோம்.

இவ்வாறு கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்காக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். என்மீது நம்பிக்கை வைத்தே மக்கள் வாக்களித்தனர். எனவே, அவர்களுக்கு உண்மையுள்ளவராக சேவை செய்துள்ளேன் என நம்புகின்றேன். இவற்றை விளம்பரப்படுத்தாதவே நாம் செய்த தவறு, அதனால்தான் விமர்சனங்கள் எழுகின்றன.

தற்போது நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக செயற்படுகின்றேன். எனவே, மக்களுக்கு அதிகளவான சேவைகளை வழங்குவதே எனது எதிர்பார்ப்பாகும். மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கும். அவர்கள் எந்த பகுதிகளில் வசிப்பவர்களாகவும் இருக்கலாம். பிரச்சினைகள் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள், பேஸ் புக் ஊடாக அல்லது மின்னஞ்சல் ஊடாக எனக்கு தகவல் தாருங்கள். என்னால் முடிந்தவற்றை மக்களுக்கு நிச்சயம் செய்வேன்.

இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும். டில்லியில் நடைபெற்ற பேச்சில் சாதகமான பதில் கிடைத்துள்ளது. மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்றேன். சிறு தாமதம் ஏற்படலாம். ஆனால் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படும் என்றார்.

 

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வேண்டும் – தேர்தல் காலத்து போலி வாக்குறுதிகள் ஆரம்பம்!

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான பரிந்துரையை முன்வைக்கும்படி, சம்பள நிர்ணய சபைக்கு பணிப்புரை விடுக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம், கோரிக்கை விடுப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச்சுமை அதிகரிப்புக்கமைய சம்பள உயர்வு வழங்குமாறு கோரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் உட்பட இதர விடயங்களை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் தற்போது அமுலில் இல்லை. அதனை புதுப்பிப்பதற்கு தொழிற்சங்கங்கள் முற்பட்டாலும், பெருந்தோட்டக் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதனால், சம்பள நிர்ணய சபையின் தலையீட்டுடனேயே தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. எனவே, தற்போதைய வாழ்க்கை சுமை அதிகரிப்புக்கமைய, சம்பள உயர்வுக்கான பரிந்துரையை முன்வைக்கும் அதிகாரம் சம்பள நிர்ணய சபைக்கு உள்ளது. என குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராஜபக்சக்கள் தரப்புடன் கூட்டணி அமைத்த போதும் இ.தொ.க குறிப்பாக ஜீவன் தொண்டமான் 1000 ரூபாய் சம்பளம் அதிகரிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டு மக்களின் வாக்குகளை பெற்ற போதும் மூன்று வருடங்களாகியும் அதனை நிறைவேற்ற முடியாத இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி மீண்டும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யானை சின்னத்தில் களமிறங்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் !

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறு சபைகளுக்கு தனித்து சேவல் சின்னத்திலும், 6 சபைகளுக்கு கூட்டணியாக யானை சின்னத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது.

இவற்றுக்கான வேட்புமனுக்கள் இ.தொ.காவின் பொதுச் யானை சின்னத்திலும்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் இன்று (21) தாக்கல் செய்யப்பட்டன.

இதன்படி நுவரெலியா, அக்கரப்பத்தனை, கொட்டகலை, மஸ்கெலியா, நோர்வூட் ஆகிய பிரதேச சபைகளுக்கும், தலவாக்கலை – லிந்துலை நகர சபைக்கும் சேவல் சின்னத்தில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.

அத்துடன், நுவரெலியா மாநகர சபை, ஹட்டன் – டிக்கோயா நகரசபை, அம்பகமுவ பிரதேச சபை, வலப்பனை பிரதேச சபை மற்றும் கொத்மலை பிரதேச சபை, ஹங்குராங்கெத்த பிரதேச சபை ஆகியவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது.