இலங்கை பல்கலைகழகங்கள்

இலங்கை பல்கலைகழகங்கள்

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை – விடுதிகளில் இரவு நேர சோதனை !

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக அனைத்து பல்கலைக்கழக விடுதிகளிலும் இரவில் சோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

 

பல்கலைக்கழக விடுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பகிடிவதை செயல்கள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

பல்கலைக்கழக விடுதிகளில் இந்த சோதனைகளை பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவ ஆலோசகர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களுக்கு தேவையான போக்குவரத்து உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

இவ்வாறு பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குற்றச்செயல்களை கட்டுப்படுத்த தேசிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

 

பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகளை 076 54 53 454 என்ற வாட்ஸ்அப் இலக்கம் மூலம் தெரிவிக்குமாறும் தற்போது அதிகளவிலான முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் ஒரு பல்கலைகழக மாணவனுக்காக அரசாங்கம் 32 இலட்சம் ரூபா செலவழிக்கிறது !

மாணவர்களிடம் உறுதிமொழிச் சான்றிதழைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் புதிய திட்டம்  ஆரம்பிக்கப்படும் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க மாட்டோம், பல்கலைக்கழக வளாகத்தில் கலவரத்தை ஏற்படுத்தப் போவதில்லை என   உறுதிமொழிச் சான்றிதழில் கையொப்பம் பெறப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கான உரிமையின் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது ஒரு சமூக உடன்பாடு எனவும், ஒப்பந்தத்தை மீறும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு உறுதிமொழியை  மீறும் மாணவர்களின் பல்கலைக்கழக கல்வி ரத்து செய்யப்படும்.

மேலும், பல்கலைக்கழகத்தில் சேரும் ஒரு மாணவனுக்காக  ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.  அதன்படி, 4 ஆண்டுகள் படித்து விட்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்காக  ஆண்டுகளில் 32 இலட்சம் ரூபா என்ற பெரும் தொகையை அரசு செலவிடுவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.