இலங்கை பல்கலைக்கழகங்கள்

இலங்கை பல்கலைக்கழகங்கள்

இலங்கையில் மூன்று சர்வதேச பல்கலைக்கழகங்கள்!

கல்வியில் சர்வதேச அனுபவமுள்ள நிபுணர்களின் அவதானத்திற்குப் பின்னர் அரச பல்கலைக்கழகங்கள் மூலம் பல்துறைப் பட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

03 சர்வதேச பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவற்றில் இரண்டு பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே மாதத்திற்குள் மூன்றாவது பல்கலைக்கழகமும் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும்.

கண்டியில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (indian institutes of technology) ஆரம்பிக்கப்பட உள்ளது. ஏனைய இரண்டு பல்கலைக்கழகங்களும் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தை மையமாக கொண்டு அவற்றின் இரண்டு கிளைகள் திறக்கப்படவுள்ளதுடன் அவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் தயாராக உள்ளோம்.

விஜயதாச ராஜபக்ஷ குழுவின் அறிக்கை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் குழு அறிக்கையை இணைத்து புதிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. குழுவின் தலைவர் பதவிக்கு, முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான சட்டக் கட்டமைப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டு, சட்ட வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அரச பல்கலைக்கழகங்களில் பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இலங்கைக்கு வருகை தருமாறு அவுஸ்திரேலிய உயர்கல்வி அமைச்சருக்கு அவுஸ்திரேலிய தூதரகத்தின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ன், சிட்னி பல்கலைக்கழகம் உட்பட 10 பல்கலைக்கழகளுடன் தொடர்புள்ள நிபுணத்துவ அறிவுள்ள வேந்தர்களும் இலங்கைக்கு வருகை தர உள்ளனர். எமது கல்வி நிலைமையை ஆய்வுசெய்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தனியார் உயர்கல்வித் துறையை முறைப்படுத்த வேண்டும். ஆனால் கல்வித்துறையை விற்பனை செய்வதற்கு நாம் தயாரில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கற்கைநெறிகள் விரைவில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

அறிவு மற்றும் பண்பு மிக்க சமூகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த பட்டப் படிப்பு பிரிவின் புதிய கட்டிடத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

2019 ஆம் ஆண்டில் இந்த கட்டிட நிர்மாணத்திற்கு அடிக்கல் நடுவதற்கு பிரதமராக வந்திருந்தேன். இன்று கட்டிடத்தைத் திறப்பதற்கு ஜனாதிபதியாக வந்துள்ளேன். கொரோனா தொற்று பரவலால் இந்த கட்டிட நிர்மாண பணிகள் தாமதமாகியிருந்தன.

 

கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான கற்கை நெறிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.

 

தொழில்நுட்ப யுகம் ஒரே இடத்தில் ஸ்தம்பித்து நிற்காது. வரலாற்றில் இருந்த அணுகுமுறைகள் இன்று வேறுவிதமாக வளர்ச்சியடைந்துள்ளன.

 

தொழில்நுட்ப யுகத்தின் தேவைக்கேற்ப இலங்கையில் கல்வி முறையை வலுப்படுத்துவோம்.

 

அறிவு மற்றும் பண்புமிக்க சமூகத்தின் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டு வரப்பட்டால் கிழக்கில் வஹாபி பல்கலைக்கழகங்களும், வடக்கில் இனப்படுகொலை பற்றிய பாடத்திட்டங்களும் ஆரம்பமாகும்.” – நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர எச்சரிக்கை!

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டுவரப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் என வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

 

பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் அன்றி, மாகாணசபைகளினால் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டால், அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். 13 ஆவது திருத்தச்சட்டத்தில் கல்விக்கான அதிகாரம் கூறப்பட்டுள்ளதே ஒழிய, பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.

 

அப்படி நேர்ந்தால், கிழக்கு மாகாணத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் அனுசரனையுடன் வஹாபி பல்கலைக்கழகங்கள் அல்லது ஷரீஆ சட்டத்தை கற்பிக்கும் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியுமாக இருக்கும்.

 

அதேபோல், கனடாவின் ஒன்டேரியோ பிராந்திய பாடசாலைகளில், இலங்கையில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதாக கற்பிக்கப்படுவது போன்று, வடக்கில் ஆரம்பிக்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் மனங்களை மாற்றும் இவ்வாறான பாடத்திட்டங்கள் உள்வாங்கப்பட்டுவிடும்.

 

பல்கலைக்கழகங்கள் நாட்டை முன்னேற்றும் வகையிலும், நாட்டுக்கான புத்திஜீவி சமூகத்தை உருவாக்கும் வகையிலேயே இருக்க வேண்டுமே ஒழிய, அரசியல் நோக்கத்திற்காகவோ ஆளுநர் அல்லது முதல்வர்களின் தேவைக்காகவோ ஸ்தாபிக்கப்படக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

“நூறாவது சுதந்திர தினத்தின்போது இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நூறாவது சுதந்திர தினத்தின்போது இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அபிவிருத்திப் பணிகளின்போது பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு மிக அவசியம் என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு இணையாக தேசிய இளைஞர் தளத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

2048 ஆம் ஆண்டாகும்போது சுபீட்சமானதும் பலம் மிக்கதுமான இலங்கையை கட்டியெழுப்பும் வேலைதிட்டத்தில் பங்குதார்களாவதற்கு இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பளித்தல் மற்றும் 25 வருட கால அபிவிருத்தி வேலைதிட்டத்துக்கு இளைஞர் சமூகத்தை பொறுப்பு மிக்க பங்காளர்களாக இணைத்துக் கொள்ளுதல் என்பன தேசிய இளைஞர் தளத்தின் நோக்கங்களாகும்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களை இணைத்துக்கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களை சுற்றுலா நகரங்களாக மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றும் இதன் கீழ் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அது தொடர்பான முன்மொழிவுகளும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

அதற்கமைய, யாழ்.மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களும் அநுராதபுரம் மாவட்டம் தொடர்பான சுற்றுலா திட்டங்களை களனி மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களும் கையளித்தன.

ருஹுனு பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து காலி மாவட்டத்தை மையமாகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு வேலைத் திட்டங்களையும் கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நுண்கலை பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து கொழும்பு மாவட்டத்திற்கான வேலைத் திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளன.

பேராதனை, வடமேற்கு மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்கள் இணைந்து கண்டி மாவட்டம் தொடர்பான திட்டங்களையும், கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுற்றலா மேம்பாட்டு திட்டங்களையும் முன்மொழிந்துள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள அனைத்து சுற்றுலாத் திட்டங்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அபிவிருத்திக்குப் பல்கலைக்கழக சமூகம் பங்களிப்பது மிகவும் நல்லதொரு விடயம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இந்த தேசிய இளைஞர் தள வேலைத்திட்டத்திற்கு பல்கலைக்கழக கட்டமைப்பு வழங்கும் ஒத்துழைப்புக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மேல் படிப்புக்காக 42,000 மாணவர்கள் பதிவு !

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 42,000க்கும் அதிகமான மாணவர்கள் பாடநெறிகளைப் பின்பற்றுவதற்காக பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமான பதிவுக் காலம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும், அந்த முடிவுகள் வெளியானதும், மேலும் 5,000 பதிவுகளை எதிர்பார்க்கிறோம் என்றும் பேராசிரியர் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.