பாராளுமன்றச் செயற்பாடுகளில் பா உ சாணக்கியன், பா உ அர்ச்சுனா முன்னணியில் பா உ சிறிதரன் பின்நிலையில் !
பாராளுமன்றச் செயற்பாடுகளில் பா உ சாணக்கியன், பா உ அர்ச்சுனா முன்னணியில் பா உ சிறிதரன் பின்நிலையில் !
பாராளுமன்றச் செயற்பாடுகளில், பாராளுமன்ற விவாதங்களில் ஈடுபடுவதில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்னணியில் நிற்கின்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சி பா உ இரா சாணக்கியன் பாராளுமன்ற செயற்பாட்டில் 27வது இடத்தில் உள்ளார். ஒன்று முதல் 225 வரையான தரவரிசைப்படுத்தலில் தமிழ் தரப்பில் சாணக்கியனே முன்னணியில் உள்ளார். அவரைத் தொடர்ந்து அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் பொன்னம்பலம் கஜேந்திர குமார் 41 வது இடத்தில் உள்ளார். பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா 42வது இடத்தில் உள்ளார். பாராளுமன்றச் செயற்பாடுகளில் விவாதங்களில் பா உ எவ்வாறு வினைத்திறனுடன் செயற்படுகின்றனர் என்பதைப் பொறுத்து மந்திர டொட் எல்கே என்ற அமைப்பு இத்தரவரிசையை மேற்கொண்டுள்ளது.
சமூக வலைத் தளங்களில் முன்னிலை வகிக்கும், தமிழ் அரசியலை கலகலப்பாக வைத்திருக்கும் பா உ இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றச் செயற்பாடுகளில் 44வது இடத்தை தக்கவைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து 48வது இடத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டு பா உ ஞானமுத்து சிறிநேசன் உள்ளார். அவரையடுத்து வன்னிப் தேசிய மக்கள் சக்தி பா உ ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் 54வது இடத்திலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பா உ கவீந்திரன் கோடீஸ்வரன் 55வது இடத்தில் உள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 63வது இடத்தில் உள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ கருணானந்தன் இளங்குமரன் பாராளுமன்றச் செயற்பாடுகளில் 79வது இடத்தில் உள்ளார். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பா உ செல்வம் அடைக்கலநாதன் 89வது இடத்தில் உள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ் மாவட்ட பா உ சிவஞானம் சிறிதரன் தமிழ் ஊடகங்களால் பேசப்படும் அளவுக்கு பாராளுமன்ற செயற்பாடுகளில் தீவிரமாக இல்லை. 113 இடத்திலேயே உள்ளார். 2010 முதல் பாராளுமன்றம் செல்லும் அனுபவமிக்க பா உ பாராளுமன்ற செயற்பாடுகளில் பலவீனமானவராகவே உள்ளார்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவாக பாராளுமன்றச் செயற்பாடுகளில் முன்னிலைக்கு வருவது சற்று கடனமானதே. அவர்களுடைய அரசாங்கமே ஆட்சியில் இருப்பதால் ஆளும்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் தங்களுடைய கருத்துக்களை வைப்பதில் தயக்கம்கொள்வார்கள். மேலும் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் புதியவர்களாகையால் தயக்கமும் மேலோங்கி இருக்கும். மேலும் அமைச்சர்களே ஆளும்கட்சியின் பெரும்பாலான நேரத்தை எடுத்தக்கொள்வதால் சாதாரண ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும். எதிர்காலத்தில் அவர்கள் இதனைப் புரிந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
இத்தர வரிசையானது வெறுமனே பாராளுமன்றத்தில் உரத்துக் குரல் எழுப்புவது அல்ல. சட்டவாக்கங்களில், கொள்கை வகுப்புகளில் தங்களுடைய பங்களிப்பை வழங்கி சட்டங்களையும் சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் செழுமைப்படுத்துவது.
கடல்தொழில் அமைச்சர் இராமரிங்கம் சந்திரசேகர் பாராளுமன்ற செயற்பாட்டுத் தரவரிசையில் 122வது இடத்தைப் பிடித்துள்ளார். ஊடகங்களில் நன்கு அறியப்பட்ட நீண்ட பாராளுமன்ற அனுபவமுடைய ஐக்கிய மக்கள் சக்தி பா உ மனோ கணேசன் பாராளுமன்ற செயற்பாடுகளில் மந்தநிலையில் 148வது இடத்தில் உள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன், மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் 225வது இடத்தில் உள்ளனர். 75 பாராளுமன்ற உறுப்பினர்களை மந்தநிலை உறுப்பினர்களாக மந்திரி.எல்கே என்ற அமைப்பு தரவரிசைப்படுத்தியுள்ளது.