இலங்கை பெண்கள்

இலங்கை பெண்கள்

பெண்கள் அமைப்புகள் ஏன் இந்தப் பெண்களுக்காகக் குரல் எழுப்பவில்லை? 

பெண்கள் அமைப்புகள் ஏன் இந்தப் பெண்களுக்காகக் குரல் எழுப்பவில்லை?

 

பெண்கள் உரிமைக்காக போராடுகிறோம் என்று கூறிக் கொண்டு, அதையே பிழைப்பாக செய்யும் பெண் போராளிகளின் குரல்கள் ஏன் கேட்பதில்லை. பெண்களை முன்னேற்றத்துக்கு என கூறிக் கொண்டு அரசார்பற்ற நிறுவனங்களின் உதவிப் பணத்தில் கூடிக் கதைப்பதும், புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவதுடன் அவர்களது போராட்டங்கள் முடிந்து விடுகின்றன.

அதேநேரம் பெண்கள் அமைப்பில் அங்கம் வகிக்கும் சக தோழிகள் தமது அரசியல் சுய இலாபத்திற்காக பெண்கள் மீது பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஆண்களுக்கு துணையாக நிற்கும் போதும் இப் பெண்கள் அமைப்புகளில் உள்ள பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுப்பதும் இல்லை. தமது தோழிகளை கண்டிப்பதும் இல்லை. மாறாக தவறான ஆண்களுக்கு அரசியலில் முகவரி தேடிக் கொடுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளரான உமா சந்திர பிரகாஷ் போன்ற பெண்களை ஆதரிக்கிறார்கள். பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த, வன்புணர்ந்த குடுமி ஜெயந்திரனை ஐக்கிய மக்கள் சக்திக்குள் யாழ் மாவட்ட அமைப்பாளராகக் கொண்டு வந்தவர் இந்த உமா சந்திர பிரகாஷ். இப்பெண்கள் அமைப்பில் உள்ளவர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்கிறார்கள்.

தற்போது தென்னிலங்கையை மையமாக கொண்டு இயங்கும் பெண்கள் அமைப்புக்கள் மேட்டுக் குடிப் பெண்களின் பொழுதுபோக்கு மையங்களே. அவர்கள் சாமானிய பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள். இவ்வாறான அமைப்புகளில் உள்ள பெண்களுக்கு சாமானிய பெண்களின் வலியும் பிரச்சினைகளும் தெரிந்திருக்கப் போவதில்லை. இவர்கள் தங்களை பிரபல்யப்படுத்திக் கொண்டு அரசியலிலும் அதிகாரத்திலும் பங்கெடுக்கவே ஆசைப்படுகின்றனர்.

பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் பற்றியோ நாளாந்த பிரச்சினைகள் பற்றியோ அவர்களுக்கு அக்கறையில்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண்களே தமக்காக துணிந்து குரல் கொடுக்க வேண்டும்.

பாலின சமத்துவக்கல்வி பாலியல் குற்றங்களை குறைக்கும் !

பாலின சமத்துவக்கல்வி பாலியல் குற்றங்களை குறைக்கும்

 

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை விடுதியில் வைத்து பெண் வைத்தியரை கத்தி முனையில் பாலியல் துன்புறுத்தல் செய்த சந்தேகநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்றும், அவர் பௌத்த தேரராகவும் இருந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் குறித்த பெண் வைத்தியரின் கைகளையும் கண்களையும் கட்டி, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பெண் மருத்துவருக்கு நடந்த துஷ்பிரயோகத்தை கண்டித்து விரைந்து சட்ட நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி இலங்கையின் பல வைத்தியசாலை வைத்தியர்களும் நேற்றைய தினம் முழுமையான பணிப்புறக்கணிப்பு மற்றும் எதிர்ப்புப் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேமாதிரியொரு சம்பவம் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது. நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் ஊழியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையில் துப்பரவு பணியில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய வைத்திய சாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண்கள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புலம்பெயர் தமிழர் ஒருவரும் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை கொடுத்த நபர் யாழ்ப்பாணம் – நயினாதீவு பகுதியை சொந்த இடமாக கொண்ட ஸ்வீடன் நாட்டில் வசிக்கும் இரட்டை குடியுரிமை கொண்ட நபர் எனத் தெரியவந்துள்ளது.

இலங்கையில் அதிகரித்துள்ள பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சுரண்டல்கள் தொடர்பிலான சமூகத்தின் மனப்பாங்கு மாற்றமடைய வேண்டும்.

கல்வி கொள்கைகளை வகுப்பவர்கள் பாலின சமத்துவம், பாலியல் கல்வி மற்றும் மனிதாபிமான சிந்தனைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி – நாளொன்றுக்கு 1000 கருக்கலைப்புகள் !

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள் சுகாதார அணையாடை பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

எட்வகாட்டா என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 வீதமானவர்கள் சுகாதார அணையாடை பாவனையை நிறுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட குடும்ப வருமானம் தொடர்பான அறிக்கையில் காட்டப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நாட்டில் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 1000 கருக்கலைப்புகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் மே மாதம் பாராளுமன்றத்தில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

உலகெங்கிலும் உள்ள சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடும் நிலையில், அரசாங்கத்தால் பெண்களின் உரிமைகள் மற்றும் பொருளாதார வலுவூட்டலை உறுதி செய்யும் இரண்டு புதிய சட்டங்கள், அறிவிக்கப்பட்டுள்ளன.

 

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவித்தார்.

 

பெண்கள் அதிகாரமளிக்கும் சட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன், பாலின சமத்துவ சட்டம் அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளது.

2023ஆம் ஆண்டில் இலங்கையில் 20000க்கும் அதிகமான பெண்கள் பல்வேறு வன்முறைகளால் பாதிப்பு!

நாட்டில் இவ்வருடம் 20,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவர் ஆலோசகர் வைத்தியர் நெதாஞ்சலி மபிடிகம தெரிவித்துள்ளார்.

 

மேலும், நாட்டில் கருவுற்ற பெண்கள் கூடுதலாக வன்முறைக்கு ஆளாகுவதாக தெரிவித்தார்.

 

பெண்களுக்கு எதிரான பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) தடுப்பதற்கான தேசிய செயல்திட்டத்தின் உள்ளடக்கங்களைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு செயலமர்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

இந்த நிகழ்வு பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவையின் தலைவி வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பாலினம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவி தலதா அத்துகோரள ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

 

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

 

வீடுகள் மற்றும் பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளைத் தடுப்பதற்கு திட்டங்கள் திறம்பட நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

 

அதன்படி, பெண்கள், சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகத்தின் கீழ், 18 துறைகளில் கவனம் செலுத்தும் 13 அமைச்சகங்களின் செயற்திட்டங்கள் தொடர்பாக இந்த பல்துறை தேசிய செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 65 வீட்டுப் பணிப்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் !

பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இலங்கையின் 65 வீட்டுப் பணிப்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 

சவுதி அரேபியாவின் ஜெட்டா மற்றும் ரியாத் நகரங்களிலுள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 34 பேர் தங்கியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர், காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 24 பேரும் ஓமானில் 07 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

இவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் தாக்கப்பட்ட விவகாரம் – விசாரணை குழு நியமனம்!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்தார்.

 

இந்த விடயம் தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் 07 ஆம் திகதி சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (20) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சபாநாயகர் குழுவொன்றை அமைத்துள்ளார்.

 

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸவின் தலைமையிலேயே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

இந்த குழுவில் ஆளுங்கட்சி சார்பில் சமல் ராஜபக்ஸ மற்றும் ரமேஷ் பத்திரண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

எதிர்க்கட்சி சார்பில் கயந்த கருணாதிலக்கவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைக்க விசேட குழு நியமனம் !

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் மற்றும் பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைப்பது தொடர்பான சட்ட மூலத்தின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட பங்குதாரருடன் இணைந்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.

 

ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) சுசுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (01) கூடிய போது ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) பிரதிநிதியால் சட்ட மூலம் தொடர்பில் முன்வைப்பு மேற்கொள்ளப்பட்டது.

 

இந்த சட்ட மூலங்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நிபுணர்கள் குழுவொன்றை அமைக்குமாறு ஒன்றியத்தின் தலைவர் (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே கோரிக்கை விடுத்தார்.

 

அதற்கமைய, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாளரின் தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, கலாநிதி றோஸ் விஜேசேகர, கலாநிதி ரமணி ஜயசுந்தர, கலாநிதி விஜய ஜயதிலக்க, விசேட வைத்திய நிபுணர் லக்ஷ்மன் சேனாநாயக்க மற்றும் உதேனி தெவரப்பெரும ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

“இலங்கையில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் – ஆனால் நாடாளுமன்றில் 12 பெண்களே உள்ளனர்” – ஜனாதிபதி ரணில்

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சனத்தொகையில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருந்தாலும் தற்போது 12 பெண் உறுப்பினர்கள் மாத்திரமே நாடாளுமன்றத்தில் இருப்பது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்

பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு புதிய சட்டங்களை உருவாக்குமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பட்டியல் முறையொன்றை அறிமுகப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.