இலங்கை மருத்துவம்

இலங்கை மருத்துவம்

பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது அரச வைத்தியசாலைகளை அதிகமாக நாடும் இலங்கையர்கள்!

பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை மக்கள் பெரும்பாலும் அரச வைத்தியசாலைகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டம் காட்டுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் பிரஜை ஒருவர் வருடத்திற்கு சுமார் ஆறு தடவைகள் வைத்தியசாலைக்கு வருகை தந்து மருத்துவ சேவையினைப் பெற்றுக் கொள்கின்றார்.

முதியோர்களை அதிகளவில் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது. பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை மக்கள் பெரும்பாலும் வைத்தியசாலைகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் மருத்துவ சேவைகளைப் பெற நாட்டம் காட்டி வருகின்றனர்.

எனவே வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பலப்படுத்தப்பட்டால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதை குறைக்கலாம்.

மேலும் சிகிச்சை காலத்தை அதிகரிப்பதன் ஊடாக நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்” இவ்வாறு விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால மேலும் தெரிவித்துள்ளார்.

40,000-இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சி!

நாடளாவிய ரீதியில் 40,000-இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

 

சுகாதார ஊழியர்கள், நிறைவுகாண் வைத்திய ஊழியர்கள், தாதியர்கள் என சில தரப்பினர் தாம் வசிக்கும் பகுதிகளில் வைத்தியர்களை போன்று செயற்பட்டு சிகிச்சைகளை வழங்குகின்றமையை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

 

நாட்டின் சுகாதார கட்டமைப்புக்குள் நோயாளர்களுக்கான மருந்துகளை வழங்குவதற்கு துறைசார் அறிவு, பொறுப்பு மற்றும் அதிகாரம் என்பன வைத்தியர்களுக்கு மாத்திரமே காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

 

ஏனைய எந்தவொரு தரப்பினருக்கும் அதற்கான அதிகாரம் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் – மூடப்பட்டுள்ள 40ற்கும் அதிகமான வைத்தியசாலைகள் !

ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் நாட்டை விட்டு சென்றுள்ளமையினால், நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது மேலும் அதிகரித்து 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

இதற்கமைய, குறித்த வைத்தியசாலைகளுக்கு அவசியமான வைத்திய உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்து, சிகிச்சை செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

யாழில் சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் – வைத்தியர் உட்பட மூவரை கைது செய்ய கோரிக்கை !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் 03 பேரை உடனடியாக கைது செய்யுமாறு  நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் குறித்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி வைத்தியர், பெண் மற்றும் ஆண் தாதி உத்தியோகத்தர்கள் ஆகிய மூவரையும் உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த வழக்கில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவ பட்டங்களை இலங்கையில் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய சட்டம் !

முதல் 1,000 சர்வதேச தரவரிசைக்குள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவ பட்டங்களை இலங்கையில் ஏற்றுக்கொள்ளும் வகையில் தேவையான சட்ட ஏற்பாடுகளை இயற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் இணைந்து இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தனர்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவப் பட்டப்படிப்புகளின் அங்கீகாரத்தின் அடிப்படையில் தரநிலைகள் மற்றும் அளவுகோல்களை உள்ளடக்கிய தேசிய கொள்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு மருத்துவ ஆணையின் விதிகளை திருத்துவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்க வேண்டும்.

“வெளிநாடுகளில் மிருகங்களின் நோய்க்கு கூட பயன்படுத்தாத கதிர்வீச்சு இயந்திரங்கள் மூலம் இலங்கையில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது.” – நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச !

நாட்டில் புற்றுநோயாளர்களுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கோபோல்ட் கதிர்வீச்சு வெளிநாடுகளில் மிருகங்களுக்கு கூட பயன்படுத்துவதில்லை. அதனால் காலாவதியான இயந்திரங்களுக்குப் பதிலாக லினியா கதிர்வீச்சு இயந்திரத்தை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் புற்றுநோயாளிகள் உருவாகின்றனர். அவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிப்பது செலவு குறைந்த முறையாகும். லினியா எக்ஸலேட்டர் என்ற கதிர்வீச்சையே பயன்படுத்த வேண்டும். அதுவே தற்போதுள்ள நவீன உபகரணம். ஆனால், எமது நாட்டில்  கோபோல்ட் கதிர்வீச்சே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கதிர்வீச்சை வெளிநாடுகளில் மிருகங்களின் புற்றுநோய்க்கு கூட பயன்படுத்துவதில்லை.

அத்துடன், லினியா எக்ஸலேட்டர் கதிர்வீச்சு உபகரணம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி மற்றும் கராப்பிட்டிய ஆகிய இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதனை பதுளை, இரத்தினபுரி, குருநாகல், அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், இரண்டாம் கட்டமாக இந்த உபகரணங்களை வழங்குவதற்கு 2 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்று சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் கோபோல்ட்  கதிர்வீச்சு சாதனங்களை தொடர்ந்தும் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

இதன் விளைவாக, ஒரு லினியா கதிர்வீச்சு இயந்திரத்தின் விலையில் பாதி செலவிடப்பட்டு, காலாவதியான, வெளிநாடுகளில் விலங்குகளுக்கு கூட பயன்படுத்தாத இயந்திரங்களை இறக்குமதி செய்யத் தயாராகியுள்ளனர். இந்த காலாவதியான இயந்திரங்களுக்குப் பதிலாக லினியா கதிர்வீச்சு இயந்திரத்தை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் இந்தியாவில் இருந்து பெனசியா என்ற கதிர்வீச்சு இயந்திரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது என்றாலும், இந்த கதிர்வீச்சு இயந்திரம் இந்தியாவில் கூட பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்றார்.

சிகிச்சை பெற்றுவந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு – ஊழியர்களின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு !

களுபோவில போதனா வைத்தியசாலையின் குறைப்பிரசவப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கெஸ்பேவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

இதற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஹொன்னந்தர சர்வோதய மாவத்தை, கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த அகிலா போனிபஸ் என்பவர் கடந்த 8ஆம் திகதி பிரசவத்துக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் இரட்டைக் குழந்தைகளை அவர் பெற்றெடுத்த நிலையில், குழந்தைகள் குறைமாத குழந்தை பிரிவில் அனுமதிக்கப்பட்டன.

அவற்றில் ஒரு ஆண் குழந்தை கடந்த 19ஆம் திகதி உயிரிழந்த நிலையில், சுவாசக் கோளாறு காரணமாக குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதன் பின், மற்ற குழந்தைக்கு பாலூட்ட சென்றபோது அந்தக் குழந்தையும் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இந்தச் சம்பவங்கள்  தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர் கொஹுவல பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

இது தொடர்பில் களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவந்தெனிய தெரிவிக்கையில், சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரையின் பிரகாரம், இது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையை விட்டு வெளியேறும் முயற்சியில் சுமார் 5000 வைத்தியர்கள் !

சுமார் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வைத்தியர் விஜயரத்ன சிங்கம் தர்ஷன் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (02) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருக்கும் வைத்தியர்களில் 95 வீகிதத்துக்கு மேற்பட்டவர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கை பொருத்தவரையில் வைத்தியத்துறை சம்பந்தப்பட்ட பெரும்பான்மையினை நாங்கள் பிரதிபலிக்கின்றோம், இவ்வாறான ஒரு தொழிற்சங்கமாக இருக்கின்ற படிவால் நாங்கள் சுகாதாரத்துறை சம்பந்தமான பிரச்சினைகளில் அக்கறை செலுத்துவதும் அதில் ஏற்படுகின்ற சாதக பாதக நிலைமைகள் பற்றி ஆராய்வதிலும் அக்கறை செலுத்தி வருகின்றோம்.

அவ்வாறே இந்த மருந்து தட்டுப்பாடு சம்பந்தமாகவும், புத்திஜீவிகள் வெளியேற்றம் முக்கியமாக வைத்தியர்களுடைய வெளியேற்றம் தொடர்பாக கடந்த காலங்களில் நாங்கள் சுகாதாரத் துறைக்கும் அரசாங்கத்துக்கும் எங்களுடைய முன்மொழிவுகளை வழங்கி இருந்தோம்.

அது உத்தியோகபூர்வமான கூட்டங்களில் பரிசிலிக்கப்படுவதாக கூறப்பட்ட போதும் எந்தவிதமான முன்னேற்றமும் வெட்டப்படவில்லை, முதலாவதாக மருந்து மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் தட்டுப்பாட்டினை உற்று நோக்குவமாக இருந்தால் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இது நிலவி வருகின்றது.

அதுமட்டுமில்லாமல் தற்போது மருந்தின் தரம் இன்மை தன்மையும் ஆங்காங்கே நிலவி வருகின்றது.

அடுத்து புத்துஜீவிகள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பிரதானமான நிலைமை நாட்டின் பொருளாதார நிலமையும், அதனால் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவினமும், மற்றும் எதிர்கால சந்ததியினரது ஸ்த்திரத்தன்மை என்பதும் இதில் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது.

கிட்டத்தட்ட சுகாதார அமைச்சர் தெரிவித்ததின்படி 850 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்கள் மேலும் ஐயாயிரம் வரையிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக முயற்சிகளில் இருக்கின்ற மையும் எங்களுக்கு தெரிய வந்திருக்கின்றது.

இவ்வாறு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்ற போது ஒரு ஆளணி பற்றாக்குறை ஏற்படப் போகிறது. இவ்வாறு ஆளணி பற்றாக்குறை ஏற்படுகின்ற போது ஒரு நோயாளிக்கு ஒரு நிமிடத்திள்குள் மட்டுப்படுத்த வேண்டிய நேரிடும்.

இவ்வாறு மட்டுப்படுத்துவதினால் சேவையை நாடிவரும் நோயாளிகள் அனைவருக்கும் சேவையினை வழங்க முடியாத நிலையும் ஏற்படலாம் இதனால் நோயாளிகள் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய தேவையும் ஏற்படலாம்.

இவ்வாறு குறுகிய நேரத்துக்கு நோயாளிகளை பார்வையிடுவதால் தரமான சிகிச்சையினை வழங்க முடியாமல் போகலாம். இவ்வாறான பிரச்சினைகள் எங்களுடைய பிரதேசங்களில் வெகுவாக அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் இவற்றை நாங்கள் முதலே ஆராய்ந்து அரசாங்கத்திற்கு அதன் முன்மொழிவுகளை சமர்ப்பித்திருக்கின்றோம்.

இந்த நிலை நீடிக்காமல் அரசாங்கம் விரைந்து செயல்பட்டு நாட்டிலிருந்து வைத்தியர்கள் வெளியேறுவதை தடுப்பதற்குரிய வழிகளை மேற்கொண்டு எங்களுடைய வாழ்க்கைச் செலவை கொண்டு செல்லக்கூடிய வேதனை ஏற்றத்தை வழங்குவதன் மூலம் புத்திஜீபிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதுடன் மருந்து தட்டுப்பாடு நீக்குவதற்குரிய முன்மொழிவுகளின் ஊடாக மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து பாமர மக்களுக்கும் பயன் பெற்று வைத்தியர்களும் நாட்டில் நிலை கொண்டிருக்க வேண்டும் என்பது எங்களுடைய பிரதான நோக்கமாகும் என தெரிவித்தார்.

இலங்கையில் இலவச மருத்துவ கல்வியை முடித்துவிட்டு வெளிநாடுகளுக்கு பணத்துக்காக மருத்துவ சேவை செய்யப் பறக்கும் இலங்கை மருத்துவர்கள் !

கரவனெல்ல, தெஹியத்தகண்டிய, மஹாஓயா மற்றும் கல்முனை பிரதேசத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் மயக்க மருந்து நிபுணர்கள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

12 மாத காலப் பகுதியில் 842 சிரேஷ்ட வைத்திய அதிகாரிகளும் 274 விசேட வைத்தியர்களும் 23 அவசர சிகிச்சை நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என சங்கத்தின் பேச்சாளர் டாக்டர் திரு. சமில் விஜேசிங்க  ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைக்கு அரசு உடனடியாக உரிய தீர்வைக் காணப்பட்டால் சுகாதாரத் துறையே கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை இலங்கையில் நாளுக்கு நாள் இலவச மருத்துவமும் தனது தர்தை இழந்து கொண்டு செல்வதையும் – மக்கள் இலவச மருத்துவத்தின் மீது கொண்ட நம்பிக்கையையும் இழப்பதையும் காண முடிகின்றது. மருத்துவர்களின் முறையான கவனிப்பு இன்றி பல மரணங்கள் வைத்தியசாலைகளில் இடம்பெற்று வரும் நிலையில் வைத்தியர்கயோ இலங்கை மருத்து சங்கமோ அல்லது சுகாதார அமைச்சோ இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக இல்லை. இலங்கையின் இலவச கல்வியூடாக படிக்கும் இந்த வைத்தியர்களும் – தாதிமார்களும் தம் நாட்டுக்கான சேவையை வழங்காது பணத்தின் பின்னால் ஓடக்கூடிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் பலரும் விசனம் வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

குழந்தை பெற்றெடுத்த பெண்ணின் வயிற்றில் துணியை வைத்துத் தைத்த வைத்தியர்கள் – முல்லைத்தீவு வைத்தியசாலையின் அசமந்த போக்கு!

முல்லைத்தீவு மாவட்டபொது வைத்தியசாலையில் கடந்த 21.05.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த 34 வயது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 

முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி கிராமத்தைச் சேர்ந்த நாளாந்தம் கூலிக்கு கடற்றொழில் செய்து வருகின்ற குடும்பம் ஒன்றைச் சேர்ந்த 34 வயது பெண் தனது மூன்றாவது குழந்தை பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 21.05.2023 அன்று சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது.

 

இதன் போது பாவிக்கப்பட்ட பருத்தித்துணித் துண்டுகளில் ஒன்றினை மீளவும் எடுக்காது வயிற்றுக்குளேயே வைத்தியர்கள் வைத்துத் தைத்து அனுப்பிவிட்டார்கள்.

 

இதன் காரணமாக தீராத கடும் வயிற்று வலிக்குள்ளான பெண் கொக்குளாய் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்குச் சுமார் பத்துத் தடவைகளுக்கும் மேல் சென்று வைத்தியர்களிடம் காட்டியுள்ளார்.

 

கருநாட்டுக்கேணியிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சுமார் 35 கிலோ மீற்றர் தூரத்தில் இருப்பதாகவும் பிறந்த குழந்தையுடன் மூன்று பெண் குழந்தைகளை கொண்ட குடும்பத்தில் தினமும் கூலிக்கு கடற்றொழிலுக்குச் செல்லும் தாம் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வைத்தியசாலைக்கு அலைந்து திரிந்தாகவும் குறித்த பெண்ணின் கணவர் கவலையுடன் தெரிவித்தார்.

 

‘சத்திரசிகிச்சை செய்த இடத்தில் துணியின் துண்டு வெளியே தெரிகிறது. சீழ் பிடித்துள்ளது’ எனக் கூறிய போதும் ஆரம்பத்தில் கண்டுகொள்ளாதவர்கள் பின்னர் விபரீதத்தை உணர்ந்துகொண்டு 12.07.2023 அன்று முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதித்து மீளவும் வயிற்றில் அதே இடத்தில் வெட்டப்பட்டு உள்ளே விடப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் முல்லை மாவட்ட பொது வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் முறையிட்ட போது அவர் 13.07.2023 திகதியில் தாம் எழுதிய கடிதம் ஒன்றை காட்டி அந்தச் சம்பவம் தொடர்பில் தம்மால் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக கூறினார் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் நாம் முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது ‘அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றதாக தனக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை’ எனத் தெரிவித்தார். அவரிடம் ‘தாங்கள் இப்படியொரு கடிதத்தை எழுதியுள்ளீர்களே’ என அவரால் காட்டப்பட்டதாக கூறி அனுப்பப்பட்டிருந்த கடிதத்தின் பிரதியை அனுப்பிய போது ‘அது போலிக் கடிதம்’ என ஒரேயடியாக மறுத்து விட்டார்.

 

இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு இனிவரும் காலங்களில் இவ்வாறான கவனயீனச் சம்பவங்களால் மக்கள் உயிராபத்தினை எதிர்கொள்ளாதிருக்கச் சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பினரும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையில் அண்மையில் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் இதே போல வைத்தியர்களின் அசமந்த போக்கினால் நான்கு சிசுக்கள் இறந்தே பிறந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தும் இன்னமும் வைத்தியசாலை நிர்வாகம் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.