இலங்கை மீனவர்கள் பிரச்சினை

இலங்கை மீனவர்கள் பிரச்சினை

சட்டவிரோத மீன்பிடியில் உள்நாட்டு மீனவர்கள் – அமைச்சர் சந்திரசேகர் !

சட்டவிரோத மீன்பிடியில் உள்நாட்டு மீனவர்கள் – அமைச்சர் சந்திரசேகர் !

 

சட்டவிரோத மீன்பிடி தடுத்து நிறுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் எமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதுபோல, உள்நாட்டிலுள்ள சிலரும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிக்கின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழிலை நவீனமயமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆழ்கடல் மீன்பிடிக்காக கப்பல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு வெளிநாடுகள் முன்வந்துள்ளன. அதனூடாக ஆழ்கடல் மீன்பிடி ஊக்குவிக்கப்படும் என்றார்.

எமது நாட்டின் கடல் வளத்தை அழித்து விட்டு தொப்புள் கொடி உறவுகள் என்று வேறு சொல்கிறார்கள் – அமைச்சர் சந்திரசேகர் கவலை !

எமது நாட்டின் கடல் வளத்தை அழித்து விட்டு தொப்புள் கொடி உறவுகள் என்று வேறு சொல்கிறார்கள் – அமைச்சர் சந்திரசேகர் கவலை !

 

இலங்கையின் கடல் வளத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ‘தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள். தற்போது ஏழு நாட்களுக்கும் வருவதற்கு முற்படுகின்றார்கள். எமது நாட்டு மீன்களை பிடிப்பது மட்டுமல்ல கடல் வளத்தையே நாசம் செய்கின்றனர். இதனால் நாளைய தலைமுறையினருக்குரிய கடல் வளம் இல்லாமல் போகின்றது.

எனவே, இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க வேண்டாம் என தமிழக கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது. எமது நாட்டு கடல் எல்லைக்குள் வந்து மீன்களை பிடித்துக்கொண்டு செல்லும் வழியில் எங்களை தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயன் இல்லை’ எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

“இலங்கைக் கடல் எல்லையை அத்துமீற வேண்டாம் !” இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு இலங்கை அமைச்சர்கள் பதில் !

“இலங்கைக் கடல் எல்லையை அத்துமீற வேண்டாம் !” இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு இலங்கை அமைச்சர்கள் பதில் !

இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் காயப்பட்டதற்கு, இந்திய வெளிவவாகார அமைச்சு, டெல்லியில் உள்ள இலங்கைத் தூதுவரை அழைத்து எச்சரித்திருந்தது. அதன் பின் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்சல் சம்பத் துய்யகொந்தா, இலங்கை கடற்பரப்புக்குள் வரும் எந்தவொரு படகுக்கும் இடமளிக்க முடியாது. இந்திய படகாக இருந்தாலும் சரி வேறு நாட்டின் படகாக இருந்தாலும் சரி அவை கட்டாயம் கண்காணிக்கப்படும். அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவதே அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக வடமராட்சிக் கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கடற்றொழில் நீர்வளத்துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதுடன் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழித்து வருகின்றனர். இந்திய மீனவர்களை கைது செய்ய முனைந்த இலங்கைக் கடற்படை வீரர் ஒருவர் கடந்த ஆண்டு இந்திய மீனவர்களால் கொல்லப்பட்ட சம்பவம் தெரிந்ததே. தென்பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரரின் இறுதி நிகழ்வில் யாழில் சில ஆயிரம் மீனவர்கள் கடற்படை வீரரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

காயப்பட்ட மீனவர்களை பார்வையிடச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இறைமையுள்ள நாடு, அதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனர். இந்திய அத்துமீறிய மீன்பிடி விவகாரம். இன்று நேற்று உருவான விடயம் அல்ல. பல வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு எமது ஆட்சியில் தீர்வைக் காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களை தொடர்ச்சியாக கண்ணீர் விட வைக்க முடியாது. அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடாதீர்கள். எமது மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் என்று நாங்கள் பலமுறை இந்திய கடற்றொழிலாளர்களை தயவாகக் கேட்டுள்ளோம் என்றார்.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது ! சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும் ! அபராதமும் அதிகரிக்கப்பட வேண்டும் !

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது ! சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும் ! அபராதமும் அதிகரிக்கப்பட வேண்டும் !

இலங்கை கடல் எல்லையின் தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதற்கு முன் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய மீனவர்களுக்கு உச்ச அபராதத்தை கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கியருந்தது. எதிர்காலத்தில் இந்த அபராதத் தொகையை அதிகரிப்பதன் மூலம் மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதைக் கட்டுப்டுத்த முடியும். கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எல்லை தாண்டும் மீன்பிடி தொடர்பில் புதிய சட்டமூலங்களையும் தண்டனைகளையும் அபராதங்களையும் அதிகரிப்பதினூடாக எல்லைதாண்டி வந்து மீன்பிடிப்பது ஒரு லாபமற்ற செயல் என்பதை எல்லைதாண்டி வரும் மீனவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குழுவையும் அவர்களது படகுகளையும் கரைக்கு கொண்டு வந்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் வடக்கின் கடல் மற்றும் மீன் வளத்தை முழுமையாக சூறையாடும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் ரோலர் படகுகள் மீன்களின் இயக்க சமநிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதையும் கடல் வள நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதேவேளை விரைவில் வெளி நாட்டிலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என கைத்தொழில் அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

அமைச்சர் பதவியை கைவிட்டுவிட்டு கடற்தொழிலாளர்களுடன் இணைந்து போராடுவேன் – டக்ளஸ் தேவானந்தா

எல்லைதாண்டிய இந்திய மீன்பிடியாளர்கள் விடயம் தொடர்பில் அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து நியாயமான தீர்வுக்காக போராடுவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

நேற்று (27) யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் இந்திய தூதருடனான சந்திப்பு போது கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.

 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இந்திய தூதுவருடனான சந்திப்பின் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் அல்லது அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன்.

 

குறிப்பாக நான் நீண்டகாலமாக எதை கூறிவந்தேனோ அதுதான் இன்று ஜதார்த்ததாகயுள்ளது என்றும் அதையே இன்று ஏனைய தரப்பினர் ஏற்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

 

அதேநேரம் அன்று நான் கூறியதை சக தமிழ் இயக்கங்கள் கட்சிகள் ஏற்றிருந்தால் இன்று இந்த அழிவுகள் இழப்புகள் அவல நிலைகள் ஏற்பட்டிருக்காது என்பதையும் எடுத்துக் கூறியிருந்தேன்.

 

இதேவேளை நாட்டின் எதிர்கால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தொடர்பாகவும் விரிவாக இந்திய தூதருடன் கலந்துரையாடியிருந்தேன்.

 

அதைவிட மிகப்பிரதானமானது சமீபத்தில் ஜேவி்பியின் தலைவர் இந்தியா சென்று பலதரப்பட்டவர்களுடன் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேச்சுக்களை நடத்தியிருந்தார். ஆனாலும் அவர் இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதுவிதமான கருத்தையும் எடுத்தக் கூறியிருக்கவில்லை.

 

அதேபோன்று சமீபத்தில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்திய தூதுவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அச்சந்தர்ப்பத்தில் கூட எமது வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் அதே பகுதி தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்று கூறித்திரியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட எதுவும் தெரிவித்திருக்கவில்லை.

ஆனால் என்னுடனான சந்திப்பின்போது இந்திய மீன்பிடியாளர்களின் எல்லைமீறிய அத்துமீறிய சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அதனால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தேன். குறிப்பாக எமது கடல் வளங்கள் சுறண்டப்படுவது தொடர்பிலும் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவது தொடர்பிலும் சுட்டிக்காட்டி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.

 

ஆனால் அதை தொடர்வதற்கான அழுத்தங்கள் தொடர்ந்தும் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது முன்னெடுக்கப்படுமாக இருந்தால் எனது அமைச்சு பதவியை இராஜனாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராடுவேன் எனவும் தெரிவித்தார்.

 

“இதனிடையே இலங்கை எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டமை தொடர்பில் தமிழகத்தில் போராடடங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” அது தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர் கருத்து கேட்டபோது,

 

போராட்டம் செய்வது அவர்களது உரிமை. அதேநேரம் அவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். ஆனால் சட்டரீதியாக இதை பார்க்க வேண்டும். 2018 இல் இது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் ஒரு தடவை எல்லை மீறியிருந்தால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்படுவர் என்றும் அதற்கு மேல் மீண்டும் எல்லை தாண்டியிருந்தால் சட்டரீதியான தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதற்கேற்ப தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் எல்லைதாண்டி உள்நுழைந்த வந்தவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில் படகு ஓட்டி உரிமையாளர்கள், தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அவர்களுக்கு சுட்டுவிட்டது போலுள்ளது.

 

என்னைப் பொறுத்தளவில் எமது நாடு, எமது கடல், எமது மக்கள் அதற்கே எனது முன்னுரிமை என்பதாகும். அதுவே நியாயம் என்றும் கருதுகின்றேன் என தெரிவித்தார்.

“ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாட்டை மீட்டெடுத்துள்ளது.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெருமிதம்!

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நேரடியாக இந்தியாவுக்கே சென்று பாண்டிச்சேரி மற்றும் தமிழ் நாட்டு அரசு உட்பட இந்திய ஊடகங்களுடன் கலந்துரையாடுவதே சிறந்த தீர்வாக அமையும் என்று என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடாக இருந்த எமது நாட்டை, மீண்டும் மீட்டெடுக்கும் வகையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சிறப்பான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்துள்ளது.

யுத்தம் மற்றும் கோவிட் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் எமது நாடு பின்னடைவை அடைந்திருந்தது. இலங்கை எப்படி நெருக்கடிகளில் இருந்து இவ்வாறு மிக வேகமாக மீண்டு வந்தது என்று எனது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயங்களின் போது அந்நாட்டவர்கள் ஆச்சரியமாகக் கேட்கின்றார்கள்.

 

அதற்கு ஜனாதிபதியின் வழிகாட்டல், சிறப்பு ஆளுமை, அதற்கு பக்க பலமாக இருந்து இந்த அரசாங்கத்தை முன்னெடுப்பவர்கள் தான் காரணம் என்று நான் அவர்களுக்கு கூறி வருகின்றேன்.

அதேபோன்று இலங்கை மக்களும் இந்த நெருக்கடிகளை விளங்கிக்கொண்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து வருகின்றார்கள் என்பதையும் நான் அங்கு குறிப்பிடுகின்றேன். 2024 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் கடற்றொழில் அமைச்சுக்காக சுமார் 8400 மில்லியன்கள் ஒதுக்கப்ட்டுள்ளது. அதில் 6077 மில்லியன்கள் மூலதனச் செலவாகவும் 2323மில்லியன் ரூபாய் மீண்டுவரும் செலவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை பயன்படுத்தி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் உட்பட அவர்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் எவ்வாறு நாங்கள் சிறப்பாக முன்னெடுக்கலாம் என்றும் எதிர்காலத்தில் அதனை ஒரு அடிப்படையாக வைத்து முன்னேறலாம் என்றும் வகுத்திருக்கின்றோம்.

அரசாங்கத்தின் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக எமது நாட்டின் கடற்றொழிலை வளப்படுத்தும் வகையில் மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் முதலீடுகளையும் ஊக்குவித்து வருகின்றோம். மேலும், எரிபொருள் விலை உயர்வு எமது கடற்றொழிலாளர்களின் தொழிலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பிரதான விடயமாக உள்ளது.

 

பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்போது இலங்கையிலும் அதன் விலைகள் அதிகரிக்கின்றன. இதற்கு அரசாங்கத்தைக் குறை கூற முடியாது.

கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் செயற்திறன் மிக்க வகையில் பயன்படுத்தி இந்நாட்டின் கடற்றொழில் துறையை முன்னேற்றும் வகையிலேயே எமது திட்டங்களை வகுத்து செயற்படுகின்றோம்.

எரிபொருள் செலவு போன்ற உற்பத்திச் செலவுகளைக் குறைக்க பல்வேறு மாற்று வழிமுறைகளை பயன்படுத்தவும் திட்டமிட்டு வருகின்றோம். அந்த வகையில், படகுகளில் Battery Motors பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்தும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இது மீனவர்களின் உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன் எரிபொருள் பிரச்சினைக்கும் தீர்வாக அமையும். அது தொடர்பில் பரீட்சார்த்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளோம். அதேபோன்று கடற்றொழில் சட்டத்தைப் பொறுத்தவரை எமது அமைச்சு திருத்தப்பட்ட புதிய கடற்றொழில் சட்டமொன்றை தயாரித்து வருகின்றது.

 

அது தற்போது சட்ட வரைவு என்ற நிலையிலேயே உள்ளது. ஆனால் இதனைப் பற்றி சரியாக விளங்கிக்கொள்ளாமலும் உள்நோக்கத்திலும் பலர் தவறான கருத்துகளைக் கூற முற்படுகின்றார்கள். இது ஒரு வரைபே அன்றி முடிவல்ல. துறைசார் நிபுணர்களில் கருத்துகளையும் பெற்றே இதனை முன்னெடுக்கவுள்ளோம்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடல் பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரச்சினையைப் பொறுத்தவரை, அது இரு நாடுகளுக்கும் இடையிலான விடயம் என்பதால் இராஜதந்திர ரீதியிலேயே அதனை அணுக வேண்டியுள்ளது.

 

இந்திய அரசியலமைப்பின் பிரகாரம் மீன்படி விடயம் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. எனவே அது தொடர்பில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நேரடியாக இந்தியாவுக்கே சென்று பாண்டிச்சேரி மற்றும் தமிழ் நாட்டு அரசு உட்பட இந்திய ஊடகங்களுடன் கலந்துரையாடுவதே சிறந்த தீர்வாக அமையும் என்பதே எனது நிலைப்பாடாகும்.” என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.