இலங்கை விளையாட்டுத்துறை

இலங்கை விளையாட்டுத்துறை

“நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.” – புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரான ரொஷான் ரணசிங்க அமைச்சு பதவியில் இருந்து விலக்கப்பட்டதற்கான காரணத்தை அரச தரப்பு வெளியிட்டுள்ளது.

அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருடன் இணைந்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கிரிக்கெட் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது ஏன் என ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.

வாராந்த அமைச்சரவை சந்திப்பு நேற்று (27) இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு ரொஷான் ரணசிங்கவிடம் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளார்.

மேலும், மகாவலி காணி பகிர்வு அமைச்சராக அவர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் முன்மொழியப்பட்ட பெரும்பாலானோரில், அவரது அரசியல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருந்தமை ஏன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியிருந்தார்.

இவ்வாறான சூழலில் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதியின் கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை வழங்காத நிலையில் அவரின் அமைச்சு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

எவருக்கும் எதிராகச் செல்ல தாம் எதிர்பார்க்கவில்லை, உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா உட்பட அனைவரின் உதவியுடன் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டை “சுத்தம்” செய்ய விரும்புவதாக புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விதித்துள்ள தடையை நீக்குவதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐசிசி தடையை ஒரு சில நாட்களுக்குள் விரைவில் மாற்றியமைப்பது மிகவும் முக்கியம்.” என்றார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர், ஹரின் பெர்னாண்டோ நேற்று (27) மாலை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.