இலங்கை விவசாயம்

இலங்கை விவசாயம்

கிராமங்களில் வறுமையை ஒழிக்க விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

கிராமங்களில் வறுமையை ஒழிக்க விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்காகவே விவசாய நவீனமயப்படுத்தல் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மகாவலி வளவ வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 45,253 பேரில் 1,524 பேருக்கு, எம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இன்று காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”   உறுமய திட்டத்தின் காணிகளை வழங்க வேண்டியவர்களுக்கு அடுத்த இரு மாதங்களில் காணிகளை பெற்றுக்கொடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளேன்.

நாட்டில் 75 வருடங்களாக மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. தற்போது சட்டபூர்வமாகவே அந்த உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இது ஒரு வகையான புரட்சியாகும்.

விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கியது போலவே கொழும்பு மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்களின் வீட்டு உரிமைகள் வழங்கப்படும். அதனால் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு வீட்டு உரிமை கிடைக்கும்.

விவசாய மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த உறுமய வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
கிராமங்களில் வறுமையை ஒழிக்க விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே விவசாய நவீனமயப்படுத்தல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நமது ஆட்சியில் விவசாயிகள் நாட்டின் அரசர்களாக மாற்றப்படுவார்கள் – சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தேசிய விவசாயக் கொள்கை உருவாக்கப்பட்டு, விவசாயிகள் நாட்டின் அரசர்களாக மாற்றப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயப் பிரகடனத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நம்பகமான நீர்ப்பாசன கட்டமைப்பொன்று இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், காணி, காணி அபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி போன்ற அமைச்சுக்களை ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், புதிய தொழில்நுட்பம் மற்றும் இணையதள வசதிகளை பயன்படுத்தி அனைத்து விவசாய மையங்களும் சந்தையையும் உற்பத்தியாளரையும் இணைக்கும் திட்டத்தை ஆரம்பிப்போம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அதேநேரம், பங்களிப்பு ஓய்வூதிய முறையின் மூலம் விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை தமது ஆட்சியில் செயல்படுத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு காய்கறி இறக்குமதிக்காக இலங்கை $326.5 மில்லியன் செலவிட்டுள்ளது !

2023 ஜனவரி முதல் நவம்பர் வரை காய்கறி இறக்குமதிக்காக இலங்கை $326.5 மில்லியன் செலவிட்டுள்ளது – இது 2022ல் இதே காலப்பகுதியில் செலவிடப்பட்ட தொகை $297.2 மில்லியன் ஆகும்.

29 டிசம்பர் 2023 அன்று இலங்கை மத்திய வங்கியின் (CBSL) செய்திக்குறிப்பின்படி, ஜனவரி முதல் நவம்பர் 2023 வரையிலான காய்கறிகளின் இறக்குமதி செலவினம் 326.5 மில்லியன் டொலர்களாகும், நவம்பர் மாதத்திற்கான செலவு 29.3 மில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் நவம்பர் 2022 வரை, காய்கறிகள் இறக்குமதிக்காக $ 297.2 மில்லியன் செலவிடப்பட்டது. இது உருளைக்கிழங்கு, பூண்டு, வெங்காயம் மற்றும் திராட்சை, ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்றவற்றுக்காக செலவிடப்பட்டது,” என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

CBSL இன் படி, 2023 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் $ 1,541 மில்லியன் உணவு மற்றும் பானங்கள் (முக்கியமாக தானியங்கள் மற்றும் அரைக்கும் தொழில் பொருட்கள், பால் பொருட்கள், காய்கறிகள், கடல் உணவுகள், சர்க்கரை மற்றும் தின்பண்டங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள்) இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் மொத்தம் 1,478 மில்லியன் டொலர்கள் இதற்காக செலவிடப்பட்டுள்ளது. இதேவேளை ஜனவரி-நவம்பர் 2023 காலப்பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்றுமதி வருவாய் $ 397 மில்லியனாக குறைந்துள்ளது – 2022 இல் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்ட வருவாய் $ 418.8 மில்லியன்களாகும்.

2023 ஆம் ஆண்டில் மீன் மற்றும் மீன் தயாரிப்புகளின் ஏற்றுமதி மூலம் இலங்கை $ 274.8 மில்லியன் ஈட்டியுள்ளது, ஆனால் 2023 ஜனவரி முதல் நவம்பர் வரை கடல் உணவு இறக்குமதிக்காக $71.4 மில்லியன் செலவிட்டுள்ளது.

2 மில்லியன் ஏக்கர் காணிகளை விவசாயிகளுக்கு முழு உரிமத்துடன் வழங்க அரசாங்கம் தீர்மானம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக சுமார் 2 மில்லியன் ஏக்கர் காணிகளை, அந்தக் காணிகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு உரிமத்துடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தெற்காசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியைப் பயன்படுத்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். ஆசியாவை நோக்கி நிகழும் பொருளாதார இடப்பெயர்வு குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். மாலைதீவின் புதிய ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இலங்கை மற்றும் மாலைதீவுடன் இணைந்து சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்புகள் குறித்து அவதானம் செலுத்தியிருக்கின்றோம். போட்டித்தன்மை கொண்ட மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம், வலுசக்தி மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துவது முக்கியத்துவமுடையதாகும்.

இலங்கையை பிராந்திய பொருட்கள் பரிமாற்ற மையமாக மாற்றுவது முக்கியத்துவமுடையதாகும். அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, விவசாயத்தை நவீனமயமாக்குவது, காணி உரிமை தொடர்பான மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டும்.

விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக சுமார் 02 மில்லியன் ஏக்கர் காணிகளை, அந்தக் காணிகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு உரிமத்துடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  அத்துடன், பாரியளவிலான நவீன விவசாய தொழில் முயற்சிகளை உருவாக்குவதற்கு அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து சில திட்டங்களை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுக்கு பிரவேசித்தல் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றத்துக்காக அரசாங்கம் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பாரிய பொருளாதார மத்திய நிலையத்தை உருவாக்குவதன் மூலம் தமிழ்நாடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்படக்கூடிய தொழில்மயமாக்கல் குறித்தும் அவதானம் செலுத்த முடியும்.

அதேபோன்று, பங்களாதேஷ், மியன்மார், கம்போடியா, லாவோஸ், கிழக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்க பிராந்திய நாடுகளில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து அந்த நாடுகளிலும் முதலீடு செய்ய இலங்கை தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நேபாளத்தையும் ஒன்றிணைக்க முடியும்.

மேலும், வங்காள விரிகுடாவை சூழவுள்ள நாடுகளுக்கிடையில் சுற்றுலா வலயத்தை உருவாக்கும் திட்டம் காணப்படுகிறது. கெரீபியன் தீவுகளை விட இது மிகப்பெரிய மாற்றீடாக அமையும். பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் இணைவதற்கு இலங்கை தற்போது விண்ணப்பித்துள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷுடன் பரந்த பொருளாதார பங்காளித்துவத்தை ஏற்படுத்துவது உட்பட இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்தும் இளம் தொழில்முனைவோர் கவனம் செலுத்த வேண்டும்.

பிராந்தியத்தில் உள்ள பொருளாதார ஆற்றல்கள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கின்றோம். எதிர்பார்க்கப்படும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தீவிரமாக பங்களிக்க வேண்டும் என்று இளம் தொழில்முனைவோரிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

விவசாய பயிர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கி அனுமதிப் பத்திரத்தை வழங்க தீர்மானம் !

விவசாயத்தின்போது விவசாய பயிர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கி அனுமதிப் பத்திரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பயிர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை பாவிப்பது தொடர்பில் முன்னர் காணப்பட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்காக கொண்டிருக்கவேண்டிய பயிர்ச்செய்கை நிலப்பரப்பின் அளவை 5 ஏக்கர் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

ஒரு வருடத்துக்குள் வன விலங்குகளால் பாரியளவில் பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக காலத்துக்கு ஏற்றதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், நாட்டின் உணவுப் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் முற்போக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் நுகர்வுக்குத் தேவையான பொருட்களை நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கும், நாட்டின் விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கும் விவசாயிகளுக்கு பலமான கரங்களை வழங்குவதற்கான பின்னணியை உருவாக்குவதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு துப்பாக்கிப் பாவனை தொடர்பிலான மேலதிக விபரங்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

“எக்காரணம் கொண்டும் பயிர்ச் செய்கையைக் கைவிடாதீர்கள் .” – ஜனாதிபதி விவசாயிகளிடம் கோரிக்கை !

“எக்காரணம் கொண்டும் பயிர்ச் செய்கையைக் கைவிட வேண்டாம்.” என என அனைத்து விவசாயிகளையும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைத் தணித்தல் தொடர்பாக கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பிற்கான விரிவான அரச-தனியார் கூட்டுத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பல நாடுகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் இறக்குமதி, விநியோகம், முறையான மேலாண்மை, விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்காக தேசிய உரக் கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இரசாயன அல்லது கரிம உரங்களைப் பயன்படுத்தி விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விவசாய அமைச்சின் முழு ஈடுபாட்டின் அவசியம் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

இந்த பணியை வெற்றியடையச் செய்வதற்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைத்து அரச ஊழியர்களும் பங்களிப்பு வழங்கி முன்னுதாரணமாக அமைய வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இரசாயன உரப்பயன்பாட்டை தடைசெய்தமையாலேயே விவசாயிகள் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவுக்கு எதிராக பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“நாட்டில் ஒருபோதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படாது.” – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

“நாட்டில் ஒருபோதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படாது.” என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் பொதுஜன பெரமுன நிச்சயம் பெற்றிப்பெறும். சஜித், சம்பிக்க, ரணில், அநுர மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் சிறந்த திட்டங்கள் ஊடகங்களில் தவறான முறையில் சித்தரிக்கப்படுகின்றன. விவசாயத்துறை அமைச்சின் பொறுப்புக்கள் இராணுவத்திற்கு பொறுப்பாக்கப்படவில்லை. நாட்டில் ஒருபோதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படாது.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பொய்யான வாக்குறுதிகள் குறித்து கருத்துரைக்க விரும்பவில்லை.

விவசாயத்துறை அமைச்சின் செயற்பாடுகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுவது முற்றிலும் பொய்யானது. கொவிட் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். இராணுவத்தினரது உதவியில்லாமல் கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். தடுப்பூசி செலுத்தல் திட்டத்தை இராணுவத்தினர் நேர்த்தியான முறையில் முன்னெடுத்துள்ளார்கள்.

இலங்கையை பசுமை நாடாக உருவாக்குவதற்கு தேவையான முக்கிய விடயங்கள்  அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை முறையானதாகவும், நிலையானதாகவும், செயற்படுத்துவதற்கு ‘பசுமை விவசாய செயற்பாட்டு மையம்’ ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் பசுமை விவசாய செயற்பாட்டு மையம் செயற்படுத்தப்படவுள்ளது. அரசாங்கத்தின் சிறந்த திட்டங்கள் ஊடகங்களில் தவறான முறையில் சித்தரிக்கப்படுகின்றன. சேதனபசளை திட்டத்தை பலவீனப்படுத்த திட்டமிட்ட வகையில் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகின்றன. இரசாயன உரம் தடை செய்யப்பட்டபோது மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது.

இரசாயன உரம் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து மரக்கறிகளின் விலை சடுதியாக குறைவடைந்தது. சேதன பசளை திட்டத்திற்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் இரசாயன உர பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் எவரும் கருத்துரைப்பதில்லை. எதிர்வரும் காலங்களில் நாட்டில் பெரும் உணவு தட்டுபாடு ஏற்படும் என எதிர்தரப்பினரும், ஆளும் தரப்பின் ஒருசில உறுப்பினர்களும் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். எக்காரணிகளுக்காகவும் உணவு தட்டுப்பாடு ஏற்படாது. பெரும்போக விவசாயம் நிச்சயம் வெற்றிப் பெறும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பொய்யான வாக்குறுதிகள் பற்றி குறிப்பிட விரும்பவில்லை.

அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.