இலங்கை வீதிவிபத்துக்கள்

இலங்கை வீதிவிபத்துக்கள்

கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் 2 பிள்ளைகளின் தந்தை பலி !

கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
குறித்த விபத்த இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்தி பயணித்துள்ளது.
இதன்போது, அதே திசையில் பயணித்த லொறி ஒன்று குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த லொறியின் சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

பெரும்பாலான வீதி விபத்துக்கள் மாற்றியமைக்கப்பட்ட தனியார் பஸ்களினால் ஏற்படுகிறது !

பெரும்பாலான வீதி விபத்துக்கள் மாற்றியமைக்கப்பட்ட தனியார் பஸ்களினால் ஏற்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) பஸ்களுக்கு குறிப்பிட்ட கட்டணங்களுடன் சில மாற்றங்களைச் சேர்க்க அனுமதித்துள்ளது என்றார்.

DMTயின் முன்மொழிவை இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஏற்கவில்லை என்றும், இது தொடர்பாக நடைபெறும் எந்த கூட்டங்களிலும் பங்கேற்காது என்றும் அவர் தெரிவித்தார் .

இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சக செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு, விளக்குகள், பஸ் ரேப்பிங், அதிக ஒலியுடன் கூடிய ஹாரன்களை பொருத்துதல், ஒலி மற்றும் தொலைக்காட்சி அமைப்புகளை பொருத்துதல் மற்றும் துருப்பிடிக்காதவை போன்ற மாற்றங்கள் மற்றும் அலங்காரங்களைச் சேர்ப்பதில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்உடன்படவில்லை என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

பெரும்பாலான பஸ்கள் சட்டத்திற்கு மாறாக அலங்காரங்கள் மற்றும் மேலதிக உபகரணங்களைப் பயன்படுத்துகின்றன, மேலும் இந்த பஸ்கள் பல வீதி விபத்துக்களை ஏற்படுத்துகின்றன, என்றார்.

“துரதிர்ஷ்டவசமாக, பல பஸ் உரிமையாளர்கள், ஸ்டிக்கர் நிறுவனங்கள் மற்றும் அமைச்சுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது, மேலும் பஸ்களை மூடுவதற்கும், பஸ் நிறுத்தப்படும் இடத்தில் DJ இசையை இசைப்பதற்கும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த பஸ்கள் நடமாடும் நைட் கிளப்கள் போன்றவை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எனவே, இது தொடர்பாக உடனடி விசாரணை நடத்துமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையர் நாயகத்துக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்தேன். பஸ் ஸ்டிக்கர் நிறுவனங்களிடம் இருந்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையர் நாயகம் ஏதேனும் இலஞ்சம் பெற்றாரா என்பது எங்களுக்கு நியாயமான சந்தேகம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரே நாளில் வீதிவிபத்துக்களில் 05 பேர் பலி !

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

எம்பிலிபிட்டிய, கலகெதர, வாகரை, திக்வெல்ல மற்றும் அக்கராயன்குளம் ஆகிய பகுதிகளில் குறித்த விபத்துகள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எம்பிலிபிட்டிய மித்தெனிய வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியைவிட்டு விலகி பஸ் தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதுடன் பெண் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.

அத்துடன், கலகெதர கந்தகும்புர பிரதேசத்தில் கப் ரக வாகனத்தின் பின் இருக்கையில் பயணித்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வாகரை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், அக்கராயமன்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கப் ரக வண்டி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, திக்வெல்ல நகருக்கு அருகில் வீதியைக் கடக்க முற்பட்ட 84 வயதுடைய பெண் ஒருவர் காரில் மோதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

“நான்கு மாதங்களுக்குள் 8000 விபத்துக்கள் – நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்கள் ” – தேசம் திரை காணொளி இணைப்பு !

நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 8,875 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த விபத்துகளில் 1,043 உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் ஏற்பட்டதாக அரச போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொலிஸாரால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இவ்வருடம் ஜூன் 18ஆம் திகதி வரை வாகன விபத்துக்கள் மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் அதிகரித்துள்ள விபத்துக்கள் தொடர்பில் தேசம் திரை YouTube பக்கத்தில் வெளியான காணொளியை காண கீழேயுள்ள Link ஐ Click செய்யவும்..!

நான்கு மாதங்களுக்குள் 8000க்கும் அதிகமான விபத்துகள் – 700க்கும் அதிகமான மரணங்கள்!

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளனா்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனை தொிவித்துள்ளாா்.

இவற்றில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவாக பதிவாகியுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இது குறித்து மேலும் கருத்து தொிவித்த அவா், கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் நடந்துள்ளன.

குறிப்பாக 667 போ் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிாிழந்தனா்.

அத்துடன் மொத்தமாக 709 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,160 பாாிய விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

அத்துடன் 3,201 சிறு விபத்துகள் நடந்துள்ளன. குறிப்பாக உயிாிந்தவா்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், மோட்டார் சைக்கிள் ஓட்டுனா்களே அதிகளவில் அடங்கியுள்ளனா்.

 

உயிாிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஆவதுடன் 102 பேர் பயணிகள் ஆவா்.

 

அத்துடன் 179 பாதசாரிகளும் மரணித்துள்ளனா். இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை மோட்டாா் சைக்கிள்களால் ஏற்படுகின்றன.

 

இரண்டாவது அதிக விபத்துக்கள் முச்சக்கர வண்டிகளால் ஏற்படுகின்றன.

 

இதனால் வீதியில் நிகழும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் இடம்பெற்றுள்ளவை என தொியவந்துள்ளது.

 

எனவே, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளாா்.