இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

இலங்கையை விட்டு அதிகமாக வெளியேறும் இளைஞர்கள்!

2023 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 செப்டெம்பர் மாதத்தில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2024 செப்டெம்பர் மாதத்தில் 28,344 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர் மற்றும் 2023 செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 25,716 ஆக பதிவாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், வெளிநாடுகளில் வேலை தேடிச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 240,109 ஆகும்.இதில் 99,939 பெண் தொழிலாளர்கள் மற்றும் 142,170 ஆண் தொழிலாளர்கள் உள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 17,649 தொழிலாளர்கள் தொழில்சார் வேலைகளுக்காக (Professional employment) வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர், அதேவேளை, அரை திறன் (Semi-skilled jobs) கொண்ட வேலைகளுக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3,704 ஆகும்.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் சவூதி அரேபியாவிற்கு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளனர், அந்த எண்ணிக்கை 38,133 ஆக பதிவாகியுள்ளது.

இந்த காலப்பகுதியில், 6391 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு வேலைக்காக சென்றுள்ளனர், மேலும் 6295 இலங்கையர்கள் ஜப்பானுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.

மேலும், 5870 பேர் தென் கொரியாவிலும், 5677 பேர் குவைத்திலும், 3995 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் வேலைக்காக வெளியேறியுள்ளனர்.

 

ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் – எச்சரிக்கிறது விசேட புலனாய்வுப் பிரிவு !

2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 11 சட்டவிரோத வேலைவாய்ப்பு நிறுவனங்கள் சுற்றி வளைப்பட்டுள்ளதுடன், 65 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் குறித்த பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு மேலதிகமாக ஹாலி எல, இரத்தினபுரி, தங்காலை, குருணாகல் மற்றும் கண்டி அலுவலகங்களிலும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டுள்ள நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் 0112 864 241 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறை செல்லும் இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாயப்பு – சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்

போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்விற்காக சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படும் இளைஞர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

 

சிறைச்சாலை திணைக்களத்தின் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் எதிர்வரும்  வருடங்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் நீதியமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக  அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

போதைப் பொருட்களுக்கு அடிமையாகி புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து  வைக்கப்பட்டுள்ள கைதிகளை தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்கு தொழில்வாய்பிற்காக அனுப்பவும், அவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சி நெறிகளை தனியார் பல்கலைக்கழகங்கள் ஊடாக வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள பயிற்சி பெற்ற 50  இளைஞர்களை இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளோம்.

மேலும், இச் செயல் திட்டத்தை முன்னெடுக்க தனியார் பிரிவினரின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம்  கைதிகளுடைய தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதுடன் ஊடாக அவர்களுடைய குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.அதேவேளை,  முகாம்களில் தடுத்த வைக்கப்பட்டுள்ள மற்றைய கைதிகளின் தொழில்முறை திறன்களை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது  என்றார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களிடம் இருந்து 38 மில்லியன் ரூபாய் மீட்பு !

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக 2022 இல் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்ந்ததன் பின்னர், பல்வேறு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய 38,087,000 ரூபாவை மீளப்பெறுவதற்கு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைகளை வழங்கும்போது அதிக கட்டணம் வசூலித்தல், பணம் வசூலித்தாலும் வேலை வழங்காமை, வேலைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை காரணமாக இலங்கைக்குத் திரும்புதல் உள்ளிட்ட முறைப்பாடுகளின் விசாரணையின் பின்னர் வழங்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் இந்தப் பணம் முறைப்பாட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி மற்றும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரிவித்த பணியகம், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளது.

2021 இல் முறைப்பாடுகளைத் தொடர்ந்து முகவர்களிடமிருந்து ரூ.8,945,900 மீட்கப்பட்டதாக பணியகம் தெரிவித்துள்ளது.

சுற்றறிக்கைகள் மூலம் உத்தரவுகள் வழங்கப்பட்ட போதிலும் பணியக சட்டத்தின் விதிகளுக்கு மாறாக செயற்பட்ட 17 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் தொழிலாளர் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வதற்கும் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பான பரிந்துரைகளின் அடிப்படையில் மேலும் 27 முகவர்களின் உரிமங்களை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், புலனாய்வுப் பிரிவுக்கு 1,334 புகார்கள் கிடைத்தன, அவற்றில் 744 புகார்கள் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிரானவை.

922 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதுடன், 214 புகார்களுக்கு நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டு உரிய தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 116 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 77 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது – தொடர்ந்து ஏமாறும் இளைஞர்கள் – மக்களே அவதானம் !

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வோரின் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி பல மோசடியாளர்கள் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் வரையில் மோசடி செய்து வருகின்றனர். இவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் வலியுறுத்தியும் கேளாது பலர் பணத்தை கொடுத்து ஏமாந்து போயுள்ளார்கள். இது தொடர்பான கைதுகள் அடுத்தடுத்து இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில்; வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி 77 இலட்சம் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த நபரை திருகோணமலை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

திணைக்களத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பதுடன் அவர் இன்று (12) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

போலியான முகவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள் – எச்சரிக்கிறது SLBFE !

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக மக்களிடம் இருந்து சில கும்பல்கள் பணத்தை மோசடி செய்து வருகின்றன. இவ்வாறான போலி முகவர் நிலையங்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக ஜப்பான், ருமேனியா, தென் கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது.

இவ்வாறான மோசடிகளில் சிக்கிய பல சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மற்றும் அவர்கள் பெற்று தரக்கூடிய வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்களை அதன் இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு SLBFE மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஏஜென்சியின் சட்டப்பூர்வ தன்மையை சரிபார்க்கும் முன் பணத்தை கொடுக்கவோ அல்லது கடவுச்சீட்டை ஒப்படைக்கவோ வேண்டாம் என்றும் பணியகம் மக்களை எச்சரித்தது.

மக்கள் அனைத்து தகவல்களையும் slbfe.lk இணையத்தளத்திலோ அல்லது 1989 ஹொட்லைன் மூலமோ 24 மணி நேரமும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.