இளவயது திருமணங்கள்

இளவயது திருமணங்கள்

இளவயது திருமணங்கள் வெளித்தெரியாத பக்கங்கள்!

சமூக அடிக்கட்டுமானத்தின் மிக முக்கிய அளவீடு அச்சமூகத்தில் பெண்களின் நிலை. அதனால் தான் பெண்களுடைய கல்வி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் தமிழ் சமூகத்தில் பெண்களின் நிலை வரலாற்றுக்கு முந்திய காலத்திலும் சரி, கடந்து வந்த போராட்ட காலத்திலும் சரி அதற்குப் பிந்தைய காலத்திலும்; சரி இப்போதும் சரி கீழான நிலையிலேயே உள்ளது. உலகத்தில் 100 மில்லியன் பெண் குழந்தைகள் பதினெட்டு வயதுக்கு முன்னரேயே திருமணமாகின்றனர். இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டமே இளவயதுத் திருமணங்கள் கூடுதலாக இடம்பெறும் மாவட்டமாக உள்ளது. பிபிசி செய்திகளின் படி கிழக்கு மாகாணத்தில் இளவயதுத் திருமணங்கள் 14 வீதத்தில் இருந்து 22 வீதமாக அதிகரித்துள்ளது. பிபிசி இது பற்றி பதிவு செய்த செய்தியின் காணொலி:

உலகில் இளவயதுத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக தெற்காசியா காணப்படுகின்றது. இலங்கையில் இந்நிலை மோசமானதாக இல்லாவிட்டாலும் சில சமூகங்களில் இது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. இலங்கையில் திருமணவயது 18 ஆக இருந்த போதும் 12 வீதமானவர்கள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்கின்றனர். இவர்களில் இரண்டு வீதமானவர்கள் பதினைந்து வயதை எட்ட முன்பே திருமணம் செய்கின்றனர் என Protecting Environment andChildren Everywhere (PEaCE) அமைப்பு தெரிவிக்கின்றது.

ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தாலென்ன கல்வி இன்றியமையாதது. ஆனால் ஒரு பெண்ணுக்குரிய கல்வி அச்சமூகத்தின் அடிக்கட்டுமானத்தைப் பலப்படுத்தி சமூகத்தின் நாட்டின் பொருளாதாரத்தை வளம்படுத்தி ஏற்றத்தாழ்வுகளை மிகக்குறைக்கும். பெண்களுடைய தலைமையில் நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தையும் சிறந்த நிர்வாகத்தையும் கொண்டிருந்தன. ஜேர்மனியில் ‘மம்’ என்று பிரியமுடன் அழைக்கப்பட்ட அஞ்சலா மேர்க்கல், நியூசிலாந்தில் ஜசின்டா ஆர்டன், பின்லாந்தில் சான மரின் போன்றவர்கள். சிறுமி கிரேற்ரா துன்பேர்க் சுற்றாடல் பாதுகாப்புக்காக குரல் எழுப்பி உலகத் தலைவர்களையே சற்றுத் திரும்பிப் பார்க்கச் செய்தார். ஆனால் இலங்கையில் இளவயது திருமணங்கள் அதிகமாக நிகழும் பகுதிகளில் வடக்கு மாகாணமும் முன்னிலையில் உள்ளது.

யுத்தம் ஏற்படுத்திய வடுக்களும் – அதனால் ஏற்பட்ட வறுமையும், பாடசாலை இடைவிலகல்களும் அதன் நீட்சியாக ஏற்பட்டுள்ள சமூகப் பிறழ்வுகளும் ஏராளமானவை. இதன் இன்னுமொரு வடிவமே இளவயது திருமணங்களாகும்.

கல்வியை தொடர வேண்டிய சிறுமிகள் பலர் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டு அவர்களுடைய எதிர்கால கனவுகள் முழுமையாக சிதைக்கப்பட்டு பாடசாலையில் கற்க வேண்டிய காலத்தில் மகப்பேற்று வைத்தியசாலைகளை நாடும் அவலம் தமிழர் பகுதிகளில் அதிகரித்து வருகின்றது.

மேலும் சிறுவயது திருமணங்கள் மூலம் ஆரோக்கியமற்ற எதிர்கால தலைமுறை ஒன்று தோன்றுவதற்கான அபாயமும் காணப்படுவதுடன் – எச்.ஐ.வி மற்றும் பால்வினை நோய்கள் பரவல், இளவயது தம்பதியினரிடையே மன உளைச்சல் மற்றும் இளவயது விவாகரத்துக்கள் என்பனவும் அடுத்தடுத்து நமது சமூகங்களில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தனது 18ஆவது வயதில் திருமாணமாகி 24ஆவது வயதில் கணவன் வேறொரு உறவை ஏற்படுத்த இரு கைக்குழந்தைகளுடன் விவாகரத்து வழக்கை எதிர்கொண்டுள்ள தர்சி :

பெற்றோரை எதிர்த்து காதலித்தவனைக் கரம் பிடித்த தர்சியின் கரங்களை காதலித்தவனும் கைவிட தர்சி போன்ற நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் வாழ்க்கை மிகச் சீர்குலைத்துள்ளது. இதில் உள்ள பிரச்சினை தர்சி போன்ற பெண்கள் எதிர்நோக்குகின்ற வாழ்க்கைப் போராட்டம் மட்டுமல்ல. தர்சிக்கு இரு கைக் குழந்தைகள் உள்ளனர். இவ்வாறான குழந்தைகள் பெற்ற குழந்தைகளின் எதிர்காலம் மிகக் கேள்விக்குறியாகின்றது. குழந்தைகளுக்கு இளவயதில் ஏற்படுகின்ற துன்பியல் அனுபவங்கள் அவர்களது உடல், உள, மூளைத்திறன் வளர்ச்சியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இது ஈழத் தமிழர்கள் எவ்வாறான சமூகத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகின்றனர் என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் பெண், பதினெட்டு மாதக் குழந்தையாகவே தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். வயதான வளர்ப்புத் தந்தை அவருடைய உடலூனமுற்ற மகள் இவர்களுடன் தன் மூன்று குழந்தைகளையும் தனியாக வளர்த்து வருகின்றார். பல பொறுப்புக்களில் இருந்தவர். இளவயதில் 2009 யுத்த முடிவில் திருமணமாகி அது பத்துநாட்களே நீடித்த வரலாற்றையும் பின் மறுதிருமணமாகி நடந்ததையும் விபரிக்கின்றார்:

முக்கியமாக அண்மைய நாட்களில் தமிழர் நிறைந்து வாழும் பகுதிகளில் போதைப்பொருள் பாவனையும் – வாள்வெட்டு கலாச்சாரமும் அதிகரித்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க பாடசாலை மாணவிகள் பலர் தென்னிந்திய சினிமா மோகத்தாலும் – வறுமையின் நிமித்தமும் பாடசாலை கல்வியை இடைவிட்டு மேற்குறிப்பிடப்பட்ட சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவோருடன் காதல் ஏற்பட்டு வாழ்க்கை பற்றிய அனுபவம் – புரிதல் ஏதுமற்ற வயதில் பாடசாலை கல்வியை கைவிட்டு திருமண வாழ்க்கை ஒன்றினுள் நுழைகின்றனர்” என வடக்கில் சிறுவர் விவகாரம் தொடர்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரச அதிகாரி ஒருவர் தேசம்நெட்டிடம் கூறியிருந்தார்.

இவ்வாறான ஒழுக்கப் பிறழ்வான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் குடும்பப் பின்னணி அவர்களுடைய நடத்தையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. வறுமை, கல்வியில் போதாமை, பாரம்பரிய வழமைகள், உள்நாட்டு யுத்தம், திருமணத்திற்கு முன்னதான உடலுறவு என்பன இளவயதுத் திருமணங்களுக்கு காரணமாகின்றன. இளவயதில் திருமணமாகும் ஒரு வகையில் அவர்களுமே குழந்தைகளாக உள்ள பிராயத்தில் தாய்மை அடைகின்ற போது இந்த இளம் தம்பதியினருக்கு கல்வியறிவு போதாமை இருக்கும். அதனால் அவர்கள் நிரந்தரமான தொழிலைக் கொண்டிருப்பதில்லை. அதனால் பொருளாதார ரீதியாக எப்போதும் பலவீனமாக இருப்பார்கள்.

இளவயதில் திருமணமாகி தன்னுடைய இரு குழந்தைகளோடு முல்லைத்தீவு தேங்காடு பகுதியில் வாழும் பெண் தன்னிலையை சொல்கின்றார்:

மேலும் இளவயதுத் திருமணங்கள் பெரும்பாலும் விவாகரத்திலேயே முடிவடைவதால் இந்த இளம் பெண்கள் கல்விப் போதாமையோடு தங்கள் காலில் நிற்பதற்கான தொழில் வாய்ப்புகளும் இன்றி பொருளாதாரத்தில் மற்றையவர்களில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்:

இவ்விளம் பெண்களை உருவாக்குபவர்கள், இந்நிலைக்குத் தள்ளுபவர்கள் யார் என்பது முக்கியமானது. தற்போது சஜித் பிரேமதாஜவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வெற்றிவேல் ஜெயந்திரன் பல பதின்மம் கடந்த இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களின் இளமையை அவர்களிடம் இருந்து பறித்து அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளார். ஜெயந்திரனால் அவர்களுக்கு நான்கு பிள்ளைகளும் உண்டு. அதிலொரு பிள்ளையை ‘வைப்பாட்டிக்கு பிறந்தவள்’ என்று தானே திட்டியும்’ வருபவர். ஜெயந்திரனின் இந்நிலைக்கு அவருடைய தந்தையும் ஒரு காரணம். இரு திருமணங்களையும் அதற்கும் மேற்பட்ட திருமணத்திற்கு அப்பாலான உறவுகளையும் கொண்டிருந்தவர். அதனை ஜெயந்திரனே தன்னுடைய நூலில் பதிவு செய்தும் உள்ளார். இப்போது அவருடைய வழியில் நச்சுச் சுழற்சியாக ஜெயந்திரன் இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றார்.

இவ்வாறு ஜெயந்திரன் வைப்பாட்டி என்றும் சொல்லும் பெண் ஜெயந்திரனோடு தன்னுடைய பதின்மம் கடந்த வயதில் பத்து ஆண்டுகளுக்கு முன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இப்பெண் தன்னுடைய மிக இளவயதிலேயே தந்தையை இழந்தார். தந்தை தவறாக இனம்காணப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். பின்நாட்களில் அவர்களுடைய வறுமையையும் ஆண் ஆளுமைகள் இல்லாததையும் அவர்கள் சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதையும் பயன்படுத்தி ஜெயந்திரன் அவரைக் கவர்ந்தார். இவர்களுடைய மகளை இன்று வைப்பாட்டிக்கு பிறந்தவள் என்று ஜெயந்திரன் தானே சொல்லித் திரிகின்றார். இவ்வாறான ஒரு நச்சுச் சூழற்சியை இன்று தாயக மண்ணில் பல குடும்பங்களிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இவ்விளம் பெண்கள் இன்று எதிர்கொள்கின்ற இதே பிரச்சினையை அவர்களுடைய பிள்ளைகள் அடுத்த 15 ஆண்டுகளில் எதிர்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுவொரு நச்சுச் சூழலாக தமிழ் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான நச்சுச் சுழற்சியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டவர் தன்னுடைய அனுபவத்தை தேசம்நெற்றுடன் பகிர்கிறார்: அம்மாவுடைய விருப்பத்திற்கு மாறாக, என்னுடைய 22ஆவது வயதில் நான் சட்டத்தரணியான என் தந்தையைச் சந்தித்தேன். என்னுடைய தந்தை “நீங்கள் யார்?” என்று என்னைக் கேட்டார். அந்த வலி என்னை மிகவும் வருத்தியது. அவர் அதனைத் தொடர்ந்து “நீங்கள் இன்னாரின் பிள்ளையா? அவருடைய மகளா? இவருடைய மகளா?” என்றெல்லாம் கேட்ட போது கண்கள் குளமானது. கூடுமானவரை கண்ணீரை அடக்கிக் கொண்டேன். குரல் தளர்ந்து “நான் உங்களுடைய மகள்” என்று அறிமுகப்படுத்தினேன். இந்தத் துர்ப்பாக்கியம் வேறொருவருக்கும் வரக்கூடாது. நானும் அழுதேன். அவரும் அழுதார். அவரை நான் அப்பா என்று ஒரு நாளும் அழைத்ததில்லை. என்னுடைய அம்மாவின் கடின உழைப்பினாலும் முயற்சியினாலும் நான் இன்றைய நிலையை அடைந்தேன். என்னுடைய குடும்பப் பெயரைக்கூட அம்மாவின் பெயரையே வைக்க விரும்புகிறேன்” என்றார் அவர். அப்பெண் இன்று சில பட்டங்களைப் பெற்றதுடன் அதற்கேற்ற தொழிலை தேடிக்கொண்டு இன்று இன, மத, சாதி பேதமில்லாமல் ஜேர்மனியில் சமூக சேவையில் ஈடுபட்டு உள்ளார். அந்த வாய்ப்பை அவரின் தாயார் வழங்கியிராவிட்டால் இவருடைய வாழ்வும் அந்த நச்சுச் சுழற்சிக்குள் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கும். அந்த நச்சுச் சுழற்சிக்குள் இன்னுமொரு குழந்தை சிக்கிவிடக்கூடாது என்பதற்காக இன்று கடுமையாகப் போராடி வருகின்றார்.

பதின்மத்தை எட்டாத மூன்று குழந்தைகள் தங்கள் கல்விக்காக பிச்சை ஏந்தும் நிலையை ஏற்படுத்தியதற்காக இச்சமூகத்தில் உள்ள நாம் அனைவருமே வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? இவர்கள் வாழ்கின்ற சில பத்து மைல்களுக்கு அப்பால் சன நடமாட்டமே இல்லாத ஆனையிறவில் 27 ஆடியில் பல கோடி செலவில் நடராஜர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. எமது இளம் பெண்கள் நிர்கதியாகி வருவது பற்றி எவ்வித கரிசனையும் இல்லாமல் அவர்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும் சமூகம் நடராஜர் சிலையை நிறுவி தமிழ் பாரம்பரியத்தையும் கலாச்சார விழுமியத்தையும் காப்பாற்றலாம் என்ற மாயையில் வாழ்கின்றது.

அதேபோல் புங்குடுதீவு மக்களால் பெரும்பாலும் கைவிடப்பட்ட அந்த மண்ணில் ஸ்ரீ ராஜேஸ்வர் அம்மன் – கண்ணகை அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் பல கோடி செலவில் இவ்வாண்டு யூன் 25 இல் மேற்குநாடுகளில் வாழ்பவர்களின் விடுமுறைக் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாலயத்தில் சில கட்டிடங்கள் கட்டப்பட்டு பின் இடிக்கப்பட்டு பல கோடி வீணடிக்கப்பட்டு இன்னும் பல கோடி செலவழிக்கப்பட்டு விழா நடத்தப்பட இருக்கின்றது. கும்பாபிஷேகம் முடிவடைந்து வெளிநாட்டவர்கள் தத்தம் நாடு திரும்பிய பின் அம்பாளுக்குத் துணையாக கட்டாக்காலி மாடுகள் தான் அங்கு மிஞ்சும். அங்குள்ள வறுமையில் வாடுகின்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களை முன்னேற்றி அவர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து அங்குள்ள இளம்பெண்களை பலப்படுத்தி அந்த மண்ணை மக்களைக் கட்டி எழுப்பாமல் கும்பாபிஷேகம் செய்து தமிழ் பாரம்பரியத்தையும் கலாச்சார விழுமியத்தையும் காப்பாற்றலாம் என்ற மாயையில் தான் புங்குடுதீவு புலம்பெயர்ந்த சமூகமும் வாழ்கின்றது.

இவர்களுக்காகப் போராடியவர்கள் வறுமையில் உழல்கின்றனர். அவர்களுடையது மட்டுமல்ல அவர்களின் குழந்தைகளின் எதிர்காலமும் இருட்டில் தான். கும்பாபிஷேகம் முடிந்து வெளிநாட்டவர்கள் கிளம்ப கண்ணகை அம்மனும் இருட்டில் தனிமையில் வாழவேண்டும். வேண்டுமானால் எலக்ரிக் அணையா விளக்கைப் போட்டு மைக்கில் தேவாரமும் போட்டுவிடுவார்கள். கட்டாக்காலி மாடுகளுக்குத் தான் அம்பாள் அருள்பாலிக்க வேண்டும்.

இந்த நிலையில் மகளிர் தினமான மார்ச் 8, 2023 கிளிநொச்சி திருநகர் பகுதியில் இயங்கி வரும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சிறுவயது திருமணங்களுக்கு எதிராகவும் – அது தொடர்பான விழிப்புணர்வை பாடசாலை மாணவர்களிடையேயும் கிளிநொச்சி மக்களிடையேயும் ஏற்படுத்தும் நோக்குடன் கிளிநொச்சி நகரிலுள்ள கிளி. மத்திய மகாவித்தியாலயத்தின் முன்பாக அமைதிவழி கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

கவனயீர்ப்பு செயற்பாட்டு ஏற்பாட்டு குழு சார்பில் திருமதி ஹம்சகௌரி சிவஜோதி கருத்து தெரிவித்த போது ”சிறுவயது திருமணங்கள் பற்றி எங்கேயோ நடந்ததாக கேள்விப்பட்ட காலம் போய் நமது பக்கத்து வீடுகளில் கூட அடுத்தடுத்து நடைபெறும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. சிறுவயதுத் திருமணங்கள் ஆக்கப்பூர்வமான சமூகத்தை அன்றி மன உளைச்சலுக்குள்ளான சமூகத்தை உருவாக்குகின்றது. 16 வயதுக்கு கீழான பிள்ளைகள் கூட திருமணம் செய்து கொள்ளும் அபத்தமான சூழல் நமது பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் 15 வயதுக்கு கீழானோர் திருமணம் செய்யும் போது அது துஷ்பிரயோகமாக கருதப்பட்டு நீதிமன்றத்தீர்ப்புக்கு விடப்படுகின்ற போதும் 16-19 வயதுக்கு இடையான வயதுடைய பெண்கள் இந்த கட்டாய – விருப்பத்துடன் இளவயது திருமணங்களுக்குள் நுழையும் போது இலங்கையின் சட்டங்கள் அதற்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கான வரைபுகளை கொண்டிருப்பதாக தெரியவில்லை. இலங்கையில் 19 வயது அதாவது பாடசாலை கல்வி பூர்த்தியாகும் வரை மாணவர்கள் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

இந்த கவனயீர்ப்பு செயற்பாட்டின் போது” சிறுவயது திருமணங்கள் சட்டரீதியான துஷ்பிரயோகம்”, “புத்தகப்பை சுமக்கும் வயதில் கருப்பை சுமப்பதா..?” “தாயோடு செல்லும் வயதில் பேரரோடு செல்வதா” போன்ற வசனங்களை தாங்கிய பதாகைகளை பங்குபற்றியிருந்தவர்கள் தாங்கியிருந்தனர்.

இது தொடர்பில் அரசியல் சமூக செயற்பாட்டாளர் த ஜெயபாலன் கருத்துத் தெரிவிக்கையில்: ஆணோ, பெண்ணோ இருபத்தியைந்து வயதிற்கு முன் திருமணம் செய்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும். பதின்ம வயதில் காதல்கொள்வதில் தவறில்லை. ஆனால் அவர்கள் தங்கள் உறவின் எல்லையை தெரிந்திருக்க வேண்டும். அந்த எல்லைக்கோட்டை திருமணம் வரை தாண்டக்கூடாது. ஆணும் பெண்ணும் இருவருமே ஒரு நிரந்தர வேலையை உறுதிப்படுத்திய பின்னரேயே திருமண பந்தத்திற்குள் நுழைய வேண்டும். அதன் பின் தங்கள் உறவு நீண்டகாலம் நிலைக்கும் என்ற உறுதி ஏற்பட்ட பின்னரேயே அவர்கள் குழந்தையைப் பெற்றெடுப்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமான சமூகத்திற்கு அத்திவாரம். அதனை உறுதிப்படுத்த இளம்பெண்களை கல்வியில் பொருளாதாரத்தில் வளப்படுத்த வேண்டும். சமூகத்தின் வளங்கள் அனைத்தும் அதற்கே முதலீடு செய்யப்பட வேண்டும். எம்முடைய இளம்பெண்கள் கல்வியில் முன்னேறினால் அவர்கள் பொருளாதாரத்தில் தன்னிலை அடைவார்கள். அவர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஸ்தீரணமான குடும்பத்தை உருவாக்குவார்கள். அதுவே தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சார விழுமியங்களையும் இன்னும் செழிப்புறச் செய்யும். தமிழ் வாழ வேண்டுமானால் எம் தமிழ் பெண்கள் சுயகௌரவத்தோடு வாழவேண்டும்” எனத் தெரிவித்தார்.

“சிறுவயது திருமணங்கள் சட்டரீதியான துஷ்பிரயோகம்” – சிறுவயது திருமணங்களுக்கு எதிராக கிளிநொச்சி லிட்டில் எய்ட் திறன் விருத்தி மைய மாணவர்கள் கவனயீர்ப்பு செயற்பாடு !

அண்மைய தரவுகளின் படி உலகத்திலேயே சிறுவயது திருமணங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளுக்குள் இலங்கை அமைந்துள்ள தென்னாசிய வலயம் முன்னணியிலுள்ளது. ஏனைய தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் சிறுவயது திருமண வீதம் குறைவாக உள்ள போதும் 16-18 வயதுக்கு இடையில் திருமணம் செய்வோர் வீதம் 12 வீதமாகவும் , 16 வயதுக்கு கீழானோர் திருமணம் செய்து கொள்ளும் வீதம் 2 வீதமான காணப்படுவதாகவும் யுனிசெப் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கையில் இளவயது திருமணங்கள் அதிகமாக நிகழும் பகுதிகளில் வடக்கு மாகாணமும் முன்னிலையில் உள்ளது.

யுத்தம் ஏற்படுத்திய வடுக்களும் – அதனால் ஏற்பட்ட வறுமையும், பாடசாலை இடைவிலகல்களும்  அதன் நீட்சியாக ஏற்பட்டுள்ள சமூகப் பிறழ்வுகளும் ஏராளமானவை. இதன் இன்னுமொரு வடிவமே இளவயது திருமணங்களாகும்.

பாடசாலை கல்வியை தொடர வேண்டிய சிறுமிகள் பலர் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டு அவர்களுடைய எதிர்கால கனவுகள் முழுமையாக சிதைந்து பல சிறுமிகள் கல்வியை தொடர வேண்டிய காலத்தில் மகப்பேற்று வைத்தியசாலைகளை நாடும் அவலம் தமிழர் பகுதிகளில் அதிகரித்து வருகின்றது.

மேலும் சிறுவயது திருமணங்கள் மூலம் அரோக்கியமற்ற எதிர்கால தலைமுறை ஒன்று தோன்றுவதற்கான அபாயமும் காணப்படுவதுடன் – எச்.ஐ.வி பரவல், இளவயத  தம்பதியினரிடையே மன உளைச்சல் மற்றும் இளவயது விவாகரத்துக்கள் என்பனவும் அடுத்தடுத்து நமது சமூகங்களில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

முக்கியமாக அண்மைய நாட்களில் தமிழர் நிறைந்து வாழும் பகுதிகளில் போதைப்பொருள் பாவனையும் – வாள்வெட்டு கலாச்சாரமும் அதிகரித்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க பாடசாலை மாணவிகள் பலர் தென்னிந்திய சினிமா மோகத்தாலும் – வறுமையின் நிமித்தமும் பாடசாலை கல்வியை இடைவிட்டு  மேற்குறிப்பிடப்பட்ட சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவோருடன் காதல் ஏற்பட்டு வாழ்க்கை பற்றிய அனுபவம் – புரிதல் ஏதுமற்ற வயதில் பாடசாலை கல்வியை கைவிட்டு திருமண வாழ்க்கை ஒன்றினுள் நுழைகின்றனர்.” என வடக்கில் சிறுவர் விவகாரம் தொடர்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரச  அதிகாரி ஒருவர் தேசம்நெட்இடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மகளிர் தினமான இன்று கிளிநொச்சி திருநகர் பகுதியில் இயங்கி வரும்  லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சிறுவயது திருமணங்களுக்கு எதிராகவும் – அது தொடர்பான விழிப்புணர்வை பாடசாலை மாணவர்களிடையேயும் கிளிநொச்சி மக்களிடையேயும் ஏற்படுத்தும் நோக்குடன் கிளிநொச்சி நகரிலுள்ள கிளி. மத்திய மகாவித்தியாலயத்தின் முன்பாக அமைதிவழி கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கவனயீர்ப்பு செயற்பாட்டு ஏற்பாட்டு குழுவினர் கருத்து தெரிவித்த போது ” சிறுவயது திருமணங்கள் பற்றி எங்கேயோ நடந்ததாக கேள்விப்பட்ட காலம் போய் நமது பக்கத்து வீடுகளில் கூட அடுத்தடுத்து நடைபெறும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் சிறுவயது திருமணங்கள் ஆக்கப்பூர்வமான சமூகத்தை அன்றி மன உளைச்சலுக்குள்ளான சமூகத்தை உருவாக்குகின்றது. 16 வயதுக்கு கீழான பிள்ளைகள் கூட திருமணம் செய்து கொள்ளும் அபத்தமான சூழல் நமது பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் 15வயதுக்கு கீழானோர் திருமணம் செய்யும் போது அது துஷ்பிரயோகமாக கருதப்பட்டு நீதிமன்றத்தீர்ப்புக்கு விடப்படுகின்ற போதும் 16-19 வயதுக்கு இடையான வயதுடைய பெண்கள் இந்த கட்டாய – விருப்பத்துடன் இளவயது திருமணங்களுக்குள் நுழையும் போது இலங்கையின் சட்டங்கள் அதற்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கான வரைபுகளை கொண்டிருப்பதாக தெரியவில்லை. இலங்கையில் 19 வயது அதாவது பாடசாலை கல்வி பூர்த்தியாகும் வரை மாணவர்கள் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதை தடுக்க இலங்கையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”  என வலியுத்தப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு செயற்பாட்டின் போது” சிறுவயது திருமணங்கள் சட்டரீதியான துஷ்பிரயோகம்”, “புத்தகப்பை சுமக்கும் வயதில் கருப்பை சுமப்பதா..?” “தாயோடு செல்லும் வயதில் பேரோடு செல்வதா” போன்ற வசனங்களை தாங்கிய பதாகைகளை பங்குபற்றியிருந்தவர்கள் தாங்கியிருந்தனர்.