இஸ்ரேல் – பாலஸ்தீன் விவகாரம்

இஸ்ரேல் – பாலஸ்தீன் விவகாரம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் – ஹமாஸ் அறிவிப்பு!

காசாவில்  இஸ்ரேல் படைகளால் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்  கொல்லப்பட்டதை ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், இஸ்ரேல் படைகளைத் திரும்பப் பெறும் வரை காசாவில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது

ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் (2023) அக்டோபர் மாதம் 7ஆம் திகதியன்று இடம்பெற்ற இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பெரும் புள்ளியாக செயல்பட்ட சின்வார், கடந்த புதன் கிழமை (16) பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் போது கொல்லப்பட்டார்.

யஹ்யா சின்வர் படுகொலைக்கு பின் ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஒருவர் தொலைக்காட்சி உரையில் பேசும்போது, “மறைந்த யஹ்யா சின்வர் உறுதியான, தைரியமான வீரர். சின்வர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு புனித போராளியாகவே வாழ்ந்துள்ளார்.

 

நமது விடுதலைக்காக தனது உயிரை தியாகம் செய்துள்ளார். சின்வரின் மரணம் நமது குழுவை இன்னும் பலப்படுத்தும்.

காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும் வரை மற்றும் முற்றுகையிடப்பட்ட பகுதியில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் வரை காசாவில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள்.

ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்ஸூக்கு தடை விதித்தது இஸ்ரேல்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இஸ்ரேல் மண்ணில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர்.

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன. இதனை செய்யாமல் மௌனம் காக்கும் யாருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்க தகுதி கிடையாது.

ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி மற்றும் தற்போது ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவு கூரப்படுவார் என தெரிவித்தார்.

இஸ்ரேல் மீது ஈரான் 200-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை ஐ.நா பொதுச் செயலாளர் கண்டிக்காதமை இஸ்ரேலை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.